லிபியாவிலிருந்து தலநகரம் திரிபோலியில் கிளர்ச்சியாளர்களின் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,700 குடும்பங்கள் வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் பலர் அச்சம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் வீட்டிலேயே தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த மோதல்களில் 115 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை சுமார் 5,000 குடும்பங்கள் இந்த மோதலகள்; காரணமாக வெளியேறியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபியக் கிளர்ச்சியின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பரித்தானியா ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இதில், 34 ஆண்டுகள் லிபிய ஜனாதிபதியாக இருந்த கடாபி கொல்லப்பட்டார்.
அதன்பின், ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்த போதும் அங்கு குழப்பம் ஏற்பட்டது. ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் லிபியாவில் போட்டி நாடாளுமன்றங்களை ஏற்படுத்தி இரு பிரிவாக அரசாட்சி செய்து வருகின்றனர்.கடாபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் ஐஎஸ் அமைப்பு அங்கு வலுவாகக் காலூன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.