தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரிய மனுகுறித்து தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் அதிக அளவில் மின்வெட்டுகள் நடந்துவருவதாக முறைப்பாடு எழுந்துள்ளது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் குறைவாக இருப்பதாகவும், புறநகர் பகுதிகளில் மின்சார விநியோகம் அதிக அளவில் நிறுத்தப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைனையடுத்து, தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரி தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த பதில் மனுவில், தமிழகத்தில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், மற்ற மாநிலங்களை விட தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் மின்சாரத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து, தமிழகத்தில் சூரிய மின்சக்தி, மற்றும் காற்றாலை மின்சக்தியை ஏன் ஊக்குவிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒக்டோபர் 25-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்