கொழும்பின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்பதனை தான் கேள்விப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்களில் விடுதலைப்புலிகள் சென்னையிலிருந்தோ அல்லது வேறு ஏதோவொரு காட்டுப்பகுதியில் இருந்தோ கொழும்பின் மீது விமானதாக்குதலை மேற்கொண்டு கொழும்பை அழிக்க திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியுயோர்க்கில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய தெரிவித்து கோத்தபாய, இது தனக்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் இது புதிய செய்தி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இறுதி யுத்த காலப்பகுதியில் தான் இலங்கையிலேயே இருந்ததாகவும் தான் வேறு எங்கும் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றங்களில் இருந்து நாட்டை விடுவிக்கவேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு எனம் குறிப்பிட்ட அவர் ஜனாதிபதியின் கருத்துக்களை வைத்து பார்க்கும்போது வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு தெரியாமலே ஐநா தீர்மானத்திற்கு இணை அனுசரனையை வழங்கும் முடிவை எடுத்துள்ளார் என்பது நிச்சயமாகின்றது எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தத்தை வழிநடத்தியது தானே என ஜனாதிபதி தெரிவிப்பதால் அவரிற்கு என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கும் இதன் காரணமாக ஐநாவை உடனடியாக இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சரை இந்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுமாறு சிறிசேன உத்தரவிடவேண்டும் எனவும் தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச யுத்த குற்றங்கள் என எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.