பாதுகாப்பில் குறைபாடு பிரித்தானிய அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் கசிந்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரித்தானியாவை ஆளும் கொன்சர்வேடிவ் கட்சியின் மாநாட்டையொட்டி சிரேஸ்ட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள், இரகசிய தகவல்களை கொண்டு ஒரு மொபைல் செயலி உருவாக்கி உள்ளனர்.
எனினும் அந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் இப்போது சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கிற நிலை உருவாகி உள்ளது எனவும் மொபைல் செயலியின் பாதுகாப்பு குறைபாடுகள்தான் இதற்கு காரணம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பொதுமக்கள் தங்கள் மின் அஞ்சல் முகவரியை பயன்படுத்தி, கொன்சர்வேடிவ் கட்சியின் முக்கியஸ்த்தர்களின் இரகசிய தகவல்களையும் பெற முடிவதாக கூறப்பட்டுள்ளது.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன், வாழ்க்கை குறிப்புகள், அவரது பதவி பெயர் அவமதிக்கும் விதத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ‘ருவிட்டர்’ உபயோகிப்பாளர்கள் பலரும் தகவல் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் அமைச்சர் மைக்கேல் கோவின் புகைப்படத்துக்கு பதிலாக ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோச்சின் படத்தை யாரோ மாற்றி வைத்துள்ளனர். இந்த ரூபர்ட் முர்டோச்சிடம் அமைச்சர் மைக்கேல் கோவ் பத்திரிகையாளராக பணியாற்றி இருக்கிறார்.
பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் சென்று, அவை இடையூறாக அமைந்திருப்பதாக முறைப்பாடு எழுந்துள்ளது. இந்த பிரச்சினையை டொன் பொஸ்டர் என்ற கட்டுரையாளர் வெளிப்படுத்தி உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.