ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படும் விவகாரத்தில் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பிரதிக் காவல்துறை மா அதிபர் நாலக சில்வா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் பயன்படுத்திய அலுவலகத்தில் இருந்து பெரும் தொகை ஆவணங்கள் விசாரணைகளுக்காக புலனாய்வுப்பிரிவனரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ள நிலையில் இவ்வாறு ஆவணங்கள் விசாரணைகளுக்காக கையேற்கப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மற்றும் கோத்தாபய ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இதுவரை 40 வரையிலான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்தவகையில் நேற்றையதினம் களுத்துறை பிரதிக் காவல்துறைமா அதிபர் ரண்மல் கொடித்துவக்குவிடம் சி.ஐ.டி. சுமார் மூன்றரை மணி நேரம் சிறப்பு வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சதி விவகாரத்தை வெளிப்படுத்திய நாமல் குமாரவிடம் ஏற்கனவே 3 தடவைகளாக சுமார் 24 மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், இச் சதி குறித்து அவர் வெளிப்படுத்திய குரல் பதிவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் சாட்சியங்களாக தற்போது காவல்துறை அதிகாரிகளின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல்துறைற தலமையகம் தெரிவித்துள்ளது