இலங்கையில் கிரிக்கெட்டில் பாரதூர மோசடி இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு இலங்கையில் நடத்தி வருகின்றது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
குறித்த விசாரணைகள் சில காலமாக நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள அவர் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை, இங்கிலாந்து தொடருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்ற போதிலும் எதிர்வரும் நாட்களில் இரண்டு அணிகளும் மோசடியாளர்களிடமிருந்து எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து இரண்டு அணிகளுக்கும் விளக்கமளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்வதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு உறுதிப்படுத்தியிருந்த நிலையில் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபையிடம் முன்னணி வீரர்கள் 40 பேர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது