போர்த்துக்கல்லின் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து மீது அமெரிக்க காவல்துறையினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதான கத்ரின் மயோர்கா ( Kathryn Mayorga ) என்ற பெண் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கடந்த 2009-ம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்
இது தொடர்பாக அமெரிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ரொனால்டோவும், அந்தப்பெண்ணும் இந்த பிரச்சினையை நீதிமன்றுக்கு வெளியே சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் முடித்துக்கொள்வது என கடந்த 2010-ம் ஆண்டு முடிவு செய்தனர்.
இதற்காக அந்த பெண்ணுக்கு, ரொனால்டோ 3,75,000 டொலர்களட இழப்பீடு வழங்குவது என ஒப்பந்தம் போடப்பட்டது. எனினும் தற்போது ரொனால்டோ மீதான பாலியல் முறைப்பாட்டினை நீதிமன்றுக்கு வெளியே தீர்த்துக்கொள்வது என போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக்கோரி, அந்த பெண்ணின் சட்டததரணிகள் வழக்கு தொடர்ந்து உள்ளதனையடுத்து அமெரிக்க காவல்துறையினர் மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்