சர்வதேச தொண்டு நிறுவனங்களை 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அந்நாட்டிலுள்ள பதினெட்டு தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படவுள்ளதாக அக்சன் எய்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கருத்து சுதந்திரத்திற்காக பிரசாரம் செய்பவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்பில் ஏற்பட்ட அச்சம் காரணமாக பாகிஸ்தான அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசிடமிருந்து இவ்வாறு வெளியேறுமாறு கடிதம் கிடைத்துள்ளதாகவும் தங்களது மேல் முறையீடு தோல்வியடைந்துள்ளதாகவும் அக்சன் எய்ட் மற்றும் பிளான் இன்டர்நஷனல் ஆகிய தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அதற்கான காரணங்களை பாகிஸ்தான் அரசு விளக்கவில்லை எனவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை தொண்டு நிறுவனங்கள் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கான ஒதுக்கப்பட்ட மக்கள் குறித்து கவலைப்படுவதாக அக்சன் எய்ட் நிறுவனத்தின் பாகிஸ்தானுக்கான செயல் இயக்குநர் அப்துல் காலிக் தெரிவித்துள்ளார். மேலும் பிளான் இன்டர்நஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தானில் 1.6 மில்லியன் குழந்தைகளுக்கு தாங்கள் ஆதரவு வழங்கிவந்ததாகவும் அரசின் இம்முடிவு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளது