குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
திட்டமிட்ட அடிப்படையில் நாட்டில் தொடர்ந்தும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவதனை விடவும் அவ்வாறு மோசடிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களை முடக்குவது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் மோசடிகளுக்கு எதிரான சர்வதேச நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்த வேண்டியது அனைத்து நிறுவனத் தலைவர்களினதும் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் எவரும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு செல்ல வேண்டுமென அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தமது மாதச் சம்பளம் 95, 000 ரூபா எனவும், அதனை அதிகரிக்க வேண்டுமென கோரியதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் குறைந்த வருமானத்தைக் கொண்டதும், கடன் சுமை அதிகளவில் காணப்படும் நாடு என்ற ரீதியில் இலங்கையின் மக்கள் பிரதிநிதிகள் வரப்பிரசாதங்களை அதிகம் எதிர்பார்க்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.