தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துமீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சர்வதேச ரீதியாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தமது சாட்சியங்களை பகிரும் மீடூ( MeToo) என்ற கவன ஈர்ப்பை சமூக வலைத்தளத்தில் முன்னெடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பிலேயே கவிஞர் வைரமுத்து, சுவிசிலாந்து நாட்டுக்கு தனக்கு 18 வயதில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, தன்னை தவறாக அணுக முயற்சித்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த வியடத்தை வைரமுத்து மறுத்துள்ளார்.
அறியப்பட்டவர்கள் மீது வழமையாக முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இது என்றும் இவற்றை தான் பொருட்படுத்துவதில்லை என்றும் காலம் இதற்கு பதில் சொல்லும் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.
இந்த விடயம் இணையத்தளங்கள், தமிழக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என பல்வேறு ஊடக தளங்களிலும் திசைமாறிய விவாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்களை பகிர்ந்து பெண்களு்ககு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்க கொண்ட சமூக வலைத்தள செயற்பாடு, தமிழ் சூழலில் வைரமுத்து – சின்மயி ஆதரவு தரப்புக்களின் மோதலாக மாறியுள்ளது.
சமூக வலைத்தளங்களின் இவ் விடயம் தொடர்பான போக்கை அவதானிக்கும்போது, எதற்காக இச் செயற்பாடு தொடங்கப்பட்டது என்பதையே மறக்க வைத்து தவறான பொழுதுபோக்கு ஊக்குவிப்பாக மாறியுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.