பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ருவிட்டர் மூலம் நடத்திவரும் மீரூ ( Me too) முறைப்பாடுகள் தொடர்பாக விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என இந்திய மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் மீரூ நானும் பாதிக்கப்பட்டேன் என்னும் பெயரில் ருவிட்டர் மூலம் பிரசார இயக்கம் ஆரம்பித்திருந்தனர்.
இந்தநிலையில் இந்திய திரையுலகிலும் இந்த மீரூ இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பொலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பல முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.அவ்வகையில், முன்னர் பிரபல பத்திரிகையாளராக இருந்து, பாரதீய ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக எம்.ஜே.அக்பர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது பதவிவிலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வரு; நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் டுவிட்டர் மூலம் நடத்திவரும் மீரூ பிரசாரம் தொடர்பாக பொது விசாரணை செய்ய 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மகளிர் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.