தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை சிறப்புப்பிரிவு விசாரிக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், முதல் கட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் இடம்பெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தநிலையில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து அவர்கள் இதுகுறித்து விசாரித்து வந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்தது.
இந்நிலையில், சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி சரவணன் தலைமையில் 4 குழுவினர் சனிக்கிழமையன்று தூத்துக்குடி சென்று தங்களது முதல்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.