இந்தியா பிரதான செய்திகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா 4 வாரங்களுக்குப் பிறகு எழுந்து உட்கார்ந்தார்!

jeya

கடந்த நான்கு வாரங்களாக படுக்கையில் இருந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் எழுந்து உட்கார்ந்து முழு நினைவோடு இருப்பதுடன், சைகை மூலமாகவும் பேசி வருகிறார் என்றும் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் மருந்து அளவில் மாற்றம் செய்ததால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் சிறப்பு மருத்துவர் ஜோன் ரிச்சர்டு போலே மற்றும் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் கில்நோனி, அஞ்சன் டிரிக்கா, நிதீஷ் நாயக் ஆகியோரும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வருக்கு அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழு அளித்து வரும் சிகிச்சையை தொடர்வதற்கு அவர்கள் அனுமதித்தனர்.

தற்போது சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு பெண் மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனை பிசியோதிரபி நிபுணர்களுடன் சேர்ந்து தமிழக முதல்வருக்கு பிசியோ திரபி சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவரும் அப்பல்லோ மருத்துவ நிபுணர்கள் குழுவினர், முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வழங்கப்படும் மருந்துகள் ஆகிய வற்றை கூர்மையாக ஆய்வு செய்து அவருக்கு அளிக்கப் படும் மருந்து அளவில் மாற்றம் செய்த பின்னர் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பல்லோ வட்டாரங்கள் கூறுகின்றன.

முதல்வருக்கு அளிக்கப்படும் மருந்து அளவை மாற்றிக் கொடுத்ததால், அவரது இதய வால்வில் இருந்த நோய்த் தொற்று குணமாகியுள்ளது. அதாவது இதய வால்வில் நோய்த் தொற்று இருந்தால், நுரையீரலில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படும். அதுவே முதல்வருக்கு ஏற்பட்ட பிரச்சினையாகும். தற்போது இதய வால்வில் இருந்த நோய்த் தொற்று குணமானதுடன், நுரையீரலில் நீர் தேங்குவதும் நின்றுவிட்டதாகவும் தி இந்து நாளிதழ் கூறுகிறது.

இதன் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நான்கு வாரம் படுக் கையில் இருந்த முதல்வர், தற்போது எழுந்து உட்கார்ந்துள்ளார் என்றும் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தற்போது, மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பகல் முழுவதும் முழு நினைவுடன் முதல்வர் இருந்து வருவதாகவும் தொண்டைப் பகுதியில் சிறிய துளையிட்டு குழாய் மூலம் ஒக்ஸிசன் செலுத்தப்படுவதாகவும் இதனால் முதல்வரால் பேச முடியவில்லை. என்றும் குழாய் அகற்றப்பட்டபின் அவரால் பேச முடியும்.தற்போது மருத்துவர்கள், செவிலியர்களிடம் சைகையில் பேசுகிறார். சைகை மூலமாக மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் டொக்டர் என்.சத்தியபாமா நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் வெப்ப நிலை, நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

செயற்கை சுவாச உதவியுடன், பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு குழுவினர், மூத்த இதய சிகிச்சை நிபுணர்கள், மூத்த சுவாச சிகிச்சை நிபுணர்கள், மூத்த தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், நாளமில்லா சுரப்பி மற்றும் சர்க்கரைநோய் நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஊட்டச்சத்து உணவுகள் வழங்கு வது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர். தற்போது முதல்வர் புரிந்து கொண்டு செயல்படு கிறார். அவரது உடல்நிலையில் சீராக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா சுவாசிப்பதற்கு வசதியாக தொண்டை பகுதியில் ஒரு துளையிட்டு டியூப் வடிவிலான கருவி (டிராகோடமி) சுவாசக் குழாயில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்வர் சுவாசித்து வருகிறார்.

இந்த டிராகோடமி கருவியின் செயல்பாடு பற்றி அரசு மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை டாக்டர்கள் கூறுகையில், ‘‘மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிக்கப்பட்டவருக்கு தொண்டை பகுதியில் துளையிட்டு சுவாசக் குழாயில் டிராகோடமி கருவி பொருத்தப்படும். இந்த கருவியின் மூலம் செயற்கையாக ஆக்ஸிஜன் செலுத்தப்படுவதால், எளிதாக சுவாசிக்க முடியும். செயற்கையான ஆக்ஸிஜன் இல்லாமலும், இயற்கையாகவும் சுவாசிக்க முடியும். சுவாசக் குழாயில் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், உணவுக் குழாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை. வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியும். ஆனால் பேசுவது சிரமம். கருவியை எடுத்தப் பிறகுதான் முழுமையாக பேச முடியும். சிறிய அளவிலான வேலைகளை செய்யலாம்’’ என்றனர்.

குளோபல் தமிழ் செய்தியாளர்

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers