இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சட்டத்தை மீறிய இனவாதச் செயற்பாடுகள் -செல்வரட்னம் சிறிதரன்

racism
நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும், சட்டத்தையும் ஒழுங்கையும் சீராக நிலை நாட்டுவதில் அது  பலவீனமான நிலையிலேயே காணப்படுகின்றது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும். சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துள்ள ஒரு நிலையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் வீரியமுள்ளதாக இருக்க முடியாது.
சட்டத்தையும் ஒழுங்கையும் முறையாக நிலைநாட்டுவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்.
இரண்டும் இருவேறு விடயங்களாக இருக்கின்ற போதிலும், நாட்டில் அமைதியையும் ஐக்கியத்தையும் நிலைநாட்டுவதற்கு இவை இரண்டும் இரண்டு கண்களைப் போன்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
இனவாத சக்திகளும், மதவாத சக்திகளும் அச்சமேதுமின்றி, குரோதத்துடன் செயற்படுகின்ற ஒரு போக்கு நாட்டில் வெளிப்படையாகவே காணப்படுகின்றது. சட்டத்தையும் ஒழுங்கையும் மீறிச் செயற்படுகின்ற இந்த சக்திகளைக் கட்டுப்படுத்தாமல் முன்னெடுக்கப்படுகின்ற நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் விழலுக்கிறைத்த நீராகவே இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மோசமான ஒரு யுத்தத்தின் பின்னர், நாட்டில் இத்தகைய போக்கு தலையெடுத்திருப்பது, தேசிய நல்லிணக்கம், நாட்டின் அமைதி சமாதானம் என்பவற்றுக்கு மட்டுமல்லாமல், இந்த அரசாங்கத்தின் நல்லாட்சிக்கும் குந்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம்
இனவாத மதவாத சக்திகளைப் போலவே, நாட்டின் பாதுகாப்புக்கு ஆதாரமாக உள்ள இராணுவத்தைக் கையாள்வதிலும் ஜனாதிபதியும், அரசாங்கம் என்ற கட்டமைப்புக்குட்பட்டுள்ள ஆட்சியாளர்களும் அரசியல் ரீதியாக சக்தியற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
நிறைவேற்று அதிகாரத்தையும், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில், முப்படைகளின் தளபதி என்ற அதிகாரத் தகுதியையும் கொண்டுள்ள போதிலும், நிர்வாக ரீதியில் இராணுவத்தைக் கையாள்கின்ற விடயத்தில் ஜனாதிபதி அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலைமையே காணப்படுகின்றது.
இராணுவ ரீதியாக அடக்கியொடுக்கி அழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்படுகின்ற விடுதலைப்புலிகள் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் முன்னைய அரசாங்கத்தைப் போலவே, இந்த அரசாங்கமும் மிகவும் கவனம் செலுத்திச் செயற்பட்டு வருகின்றது.
இந்த வகையில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் – குறிப்பாக வடக்கில் இராணுவத்தினரை முதன்மை நிலையில் அரசாங்கம் வைத்திருக்கின்றது.தேசிய பாதுகாப்புக்காக, தேவைக்கு அதிகமான நிலையிலேயே, அரசாங்கத்தினால்  இராணுவத்தினருக்கு வசதிகளும் அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஒப்பீட்டளவில் முன்னைய ஆட்சிக் காலத்திலும் பார்க்க இந்த ஆட்சியில் இந்த நிலைமை சற்று தளர்த்தப்பட்டிப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆயினும் தேசிய மட்டத்தில் நல்லிணக்கத்தைக் கொண்டு வர முற்பட்டுள்ள அரசாங்கம், காணிகளை மீளவும் பொதுமக்களிடம் கைளிப்பதில் இராணுவம் கடும் போக்கைக் கடைப்பிடித்து வருவதையும், அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமல் இருப்பதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கையறு நிலைமை
யுத்தம் முடிவடைந்து ஏழரை ஆண்டுகளுக்குப் பின்னரும், இராணுவத்தைக் கட்டுப்படுத்தி, இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை கையளித்து, அவர்களை மீள்குடியேற்ற முடியாமல் இருக்கின்ற அரசாங்கம் எந்த வகையில் நல்லிணக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது தெரியவில்லை.
இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள பொதுமக்களின் காணிகளை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதன் அவசியம், அதன் ஊடாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தையும் நீதியையும் வழங்குவதன் தேவைப்பாடு போன்ற விடயங்கள் குறித்து, சிவில் உரிமைசார்ந்த வழிகளிலும், அரசியல் வழிகளிலும் பலரும் பல தடவைகளில் அரசாங்கத்திற்கு  எற்கனவே இடித்துரைத்தாகிவிட்டது.
வீதிப் போராட்டங்கள், மறியல் போராட்டங்கள், பணிபுறக்கணிப்புப் போராட்டங்கள் என பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் சாத்வீக வழிகளில் தமது உணர்வுகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். இதனை அரசாங்கம் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றது.
காணிகளை விடுவிப்பது தொடர்பில் அவ்வப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள பகிரங்கமான உத்தரவாதங்கள், உறுதி மொழிகள் என்பன இதற்குச் சரியான ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன.
இருந்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்கி, அவர்களை அங்கு மீள்குடியேற்றுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியாத கையறு நிலையிலேயே ஜனாதிபதி இருக்கி;ன்றார் என்ற விடயமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
‘இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களுடைய காணிகளை, உரியவர்களிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், இன்னும் பலருடைய காணிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது’ என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின்  தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களுடைய காணிகள் அவர்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற தன்மை கூடுதலாக இராணுவம் உள்ளிட்ட முப்படைகளிடமும் காணப்படவில்லை.
எனவே, அரசாங்கத்தின் உத்தரவை ஏற்றுக் கொள்கின்ற தளபதிகள் முப்படைகளிலும் குறைவாகக் காணப்படுகின்றார்களா என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
நாட்டில் நல்லிணக்கத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் நீதி நியாயத்தையும் வழங்குவதற்கு விருப்பம் கொண்டிருக்கின்ற போதிலும், அதற்குத் தடையேற்படுத்தும் நிலையில் உள்ள இராணுவத்தைத் தனது வழியில் செயற்பட வைக்க முடியாதவராகவே ஜனாதிபதி காணப்படுகின்றார்.
இராணுவத்தைக் கையாள்வது என்பது சட்ட ரீதியான நிர்வாகச் செயற்பாடு சார்ந்த ஒரு விடயம் என்பதற்கு அப்பால், அது ஓர் அரசியல் சார்ந்த செயற்பாடாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்பதே இதற்கான காரணமாகும்.
நாட்டின் அதியுயர் அதிகார பீடத்தில் உள்ளவரும், நாட்டின் தலைவருமாகிய ஜனாதிபதி, நியாயமானது, நீதியானது என தான் உணர்கின்ற ஒரு விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைப் போக்கி, அவர்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இருப்பதனை ஆழ்ந்து சிந்திக்கும்போது, அவர் எத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கி;ன்றார் என்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
சட்டபூர்வமான அதிகாரங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும், அரசியல் ரீதியான பலத்தோடு, தென்னிலங்கையில் தலை விரித்தாடுகின்ற இனவாத, மதவாத சக்திகளின் முன்னால், பலம் குன்றியவராக, அந்த சக்திகளை எதிர்த்து தனது நியாயமான அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியாத ஒருவராகவே ஜனாதிபதி திகழ்கின்றார்.
ஜனாதிபதியைப் போலவே, நல்லாட்சி புரிவதாகக் கூறுகின்ற அரசாங்கமும், திமிரோடு செயற்படுகின்ற மதவாத, இனவாத சக்திகளின் அரசியல் செல்வாக்கின் முன்னால் செல்லாக்காசாகவே செயற்பட்டு வருகின்றது.
இனவாத, மதவாத சக்திகள் 
முரண்பட்டு நிற்கின்ற தரப்புக்கள் தமக்குள் இணங்கி, நட்புறவோடு செயற்படுவதே நல்லிணக்கமாகும். விட்டுக்கொடுப்பு இல்லையேல் நல்லிணக்கம் சாத்தியமாகாது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் மேலாதிக்கப் போக்கைக் கைவிட்டு, ஏனைய தரப்புக்களுடன் சமமாகச் செயற்பட முன்வருகின்ற வரையில் நல்லிணக்கம் சாத்தியமாகாது.
அரசியல் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் தரப்பினர், யுத்த மோதல்களின்போது, மோசமான பின்னடைவுகளுக்கும் மோசமான பாதிப்புகளுக்கும் உள்ளாகிய நிலையிலும் நல்லாட்சி அரசாங்கத்துடன் நிபந்தனைகள் எதுவுமற்ற நிலையில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழர் தரப்பின், விட்டுக்கொடுப்புடன் கூடிய அரசியல் ஆதரவு என்ற அத்திவாரத்திலேயே இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அரசோச்சுவதற்கும் அந்த ஆதரவே அடிப்படையாகும்.
யுத்தப் பாதிப்புக்கு உள்ளாகிய மக்கள், தமது தேவைகள் பூர்த்தி செய்யப்படும், தமக்கேற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். தமது சொந்தக் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை விலக்கி,  இடம் பெயர்ந்துள்ள தங்களை, தமது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றுவார்கள் –
காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு பொறுப்பு கூறுவார்கள், விசாரணைகளின்றி வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளான அரசியல் கைதிகளை விடுதலை செய்வார்கள் –
யுத்த மோதல்கள் காரணமாக விதவைகளாகியும், ஆண் துணைகளிருந்தும் இல்லாத நிலையில் குடும்பப் பொறுப்புக்களைச் சுமப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மறுவாழ்வளிப்பார்கள் –
யுத்தம் காரணமாக கட்டுக்குலைந்துள்ள சமூகத்தில் தலையெடுத்துள்ள சமூக விரோதிகளிடமிருந்து தங்களுக்கும் தமது பிள்ளைகளுக்கும் உரிய பாதுகாப்பளிக்கப்படும் என்பது போன்ற பல எதிர்பார்ப்புக்களோடு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை.
முன்னைய ஆட்சியில் நிலவிய கெடுபிடிகள் குறைந்து சில சில விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், நல்லிணக்கத்தையும் அச்சமற்ற வாழ்க்கையையும் உறுதி செய்வதற்குப் புதிய அரசாங்கம் உரிய முறையில் வழிசமைக்கவில்லையே என்ற ஆதங்கம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் படிப்படியாக விவுவரூபமெடுத்து வருகின்றது.
இனவாத சக்திகளும் மதவாத சக்திகளும், தடுத்து நிறுத்துவார் எவருமற்ற நிலையில், தன்னிச்சையாகத் தலைவிரித்தாடி வருவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
கிழக்கு மாகாணத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் கிளப்பி, அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் முனைந்திருப்பதாக கிழக்கு மாகாகண முதலமைச்சர் கூறியுள்ளார். அதேபோன்று இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, நாட்டில் கலகத்தை உஐருவாக்குவதற்கான நிலைமை உருவாகி வருவதாக அரசாங்கத்திற்குப் புலனாய்வு பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர்.
இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் கூடிய கவனம் செலுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதையும் அதனால் நல்லிணக்கச் செயற்பாடுகள் சீர்குலைந்திருப்பதையும்  எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன.
நலிந்துள்ள நல்லிணக்கச் செயற்பாடுகள் 
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தீவிரப் போக்குடைய பௌத்த மதத் தலைவர்கள் முன்னெடுத்துள்ள அத்துமீறல் செயற்பாடுகள் அந்தப் பகுதியில் பதட்ட நிலைமையை உருவாக்கியிருக்கின்றன. இது தொடர்பிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டிருப்பதாக அபாய அறிவிப்பு செய்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் மாணிக்கமடு கிராமத்தில் பௌத்த மதகுருமார்கள் அடங்கிய குழுவொன்று அத்துமீறிய வகையில் புத்தர் சிலையொன்றை அமைத்து, மதவழிபாடுகளை மேற்கொண்டுள்ளதுடன். புதிதாக பௌத்த விகாரையொன்றை அங்கு அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கின்ற முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடையே அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
இதேவேளை,  மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய கச்சைக்கொடி பகுதியில் அத்துமீறிய வகையில் குடியேற முயன்ற 6 சிங்களக் குடும்பங்களுக்கு எதிராக அந்தப் பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்;.
அரச ஊழியராகிய அந்த கிராம சேவையாளரை நேரடியாக இழிசொற்கள் பேசி, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற கடமைக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளின் முன்னிலையில் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமனரத்ன தேரர் நிந்தித்துள்ளார். ஆயினும் இவருக்கு எதிராக பொலிசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அங்கு ஏற்பட்டிருந்த பதட்டமான சூழ்நிலையில் வெறிபிடித்தவரைப் போன்று வார்த்தைகளை அள்ளிக் கொட்டியதையும், தன்னை சமாதானப்படுத்த முயன்ற ஒரு பொதுமகன் மீதும், பொலிஸ் அதிகாரி ஒருவர் மீதும், அவர் தாக்குதல் நடத்தியதை வீடியோ காட்சிகளின் மூலம் சமூக வலைத் தளங்களில் பார்த்த பலரும் விக்கித்துப் போயிருக்கின்றார்கள்.
ஒரு பௌத்த மதத்துறவியான சுமனரத்ன தேரர் வெறிபிடித்தவரைப் போன்று ஏன் நடந்து கொண்டார் என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
விடுதலைப்புலிகள் பலம் பெற்றுத் திகழ்ந்த காலத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் மேடையில் ஏறி, தமிழ் மக்களுக்காக விடுதலைப்புலிகள் நடத்தி வருகின்ற போராட்டம் நியாயமானது என அவர் உரையாற்றியிருந்தார். அத்துடன் பௌத்த மதத் துறவியாகிய தனக்கு விடுதலைப்புலிகள் அளித்த மரியாதையும் கௌரவமும் மற்றவர்களினால் அளிக்கப்படவில்லை என அவர் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.
வெள்ள அனர்த்தங்களின்போதும், சுனாமி தாக்கத்தின்போதும் இன மத பேதங்களைக் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கியிருந்த சுமரத்ன தேரரா இவ்வாறு மோசமான மதவாதியாக, இனவாதியாக நிந்தனை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார் என்று அவரைப்பற்றி அறிந்துள்ள பலரும் திகைப்படைந்துள்ளனர்.
அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. பன்குடா வெளி என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் அடாவடியாகப் புகுந்து அங்கு புத்தர் சிலையொன்றை வைப்பதற்கும் அவர் முயன்றிருக்கின்றார். அவருடைய அத்துமீறிய நடவடிக்கையை நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவு பெற்று அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, அந்தக் காணிக்கு பொலிஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அனுராதபுரத்தில் பௌத்த மத குருக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் சிங்கள இளைஞன் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிராக படுமோசமான முறையில் இனவாத கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
அவருடைய உரை அடங்கிய வீடியோ காட்சியும் சமூக வலைத்தலங்களில் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்தகைய நிலைமைகளினால் நல்லிணக்கச் செயற்பாடுகள் நலிவடைந்திருப்பதைக் காண முடிகின்றது.
சட்டம் ஒழுங்கு பாரபட்சமின்றி நிலைநாட்டப்படுமா?
இது ஒருபுறமிருக்க, இனவாத கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், சிங்கள தீவிர நிலைப்பாட்டாளராகிய டேன் பிரியசாத் ஆகியோர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு எதிரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் முஸ்லிம்களை நிந்தித்து அச்சுறுத்தும் வகையில் கருத்தக்களை வெளியிட்டமைக்காகவே டேன் பிரியசாத் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் எதிர்த்தும் பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் பொலிசாருக்கு ஒருநாள் அவகாசமளித்து விடுத்திருந்த எச்சரிக்கையையடுத்தே சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வெளியிட்டிருந்த இனவாத கருத்துக்கள் தொடர்பில் அப்துல் ராஸிக்கிற்கு எதிராக ஏற்கனவே பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அனுராதபுரத்திலும் பகிரங்கமாக பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து, இனங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் இனவாத மதவாத கருத்துக்களை விஷமாகக் கக்கிய பெரும்பான்மை இன மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பொலிசார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொலிசாரின் இந்த நடவடிக்கை பல தரப்பிலும் பல மட்டங்களிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலைமைகள் தொடர்பாக அவசர பாதுகாப்புக்குழு கூட்டத்தில் ஆராய்ந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக,  இன மத பேதங்களை கருதாது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு உத்தரவிட்டிருப்பதாக  அமைச்சர் மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் கடமையும் பொறுப்புமாகும். அத்தகைய சூழலுக்குக் குந்தகமாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் குறித்த முறைப்பாடுகள் கிடைப்பதற்கு முன்னதாகவே சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான பொலிசார் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
அத்தகைய செயற்பாடுகள் நல்லாட்சி புரிகின்ற – இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ள அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படவில்லை.
இனவாதம் மற்றும் மதவாதப் போக்கினால் நாட்டில் அமைதிக்கும் சமாதானத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பான நிலைமை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து. இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதன் பின்னராவது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.