இலங்கை

தேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது – மனோ கணேசன்

அரசியல் அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் சமச்சீராக சீர்திருத்தங்கள் வேண்டும். அதைவிடுத்து தேர்தல் முறையில் மட்டும் தமக்கு வேண்டிய திருத்தங்களை கொண்டுவந்து அரசியலமைப்பு கடையை மூட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்கு இடம் கொடுக்க சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது. இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியும் உறுதியாக இருக்கின்றது. இந்த எம் உறுதியான நிலைப்பாட்டை நாம் பலமுறை ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இரண்டு கட்சிகளுக்கும் தெரிவித்து விட்டோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

அரசியல் நிலவரம் தொடர்பில் கட்சி தமைமையகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து கூறிய ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்  அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற, ஸ்ரீலசுக, ஐதேக, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் போது, புதிய அரசியலமைப்பை உருவாக்கவோ, அதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தவோ தாம் ஒருபோதும் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. பொது வாக்கெடுப்புக்கு செல்லாமல், பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் தீர்மானிக்க கூடிய விடயங்களை மாத்திரமே முன்னெடுக்க தாம் உடன்பட முடியும் என அக்கட்சி பிரதிநிதிகள் கூறிவிட்டார்கள். அதை அந்த கலந்துரையாடலுக்கு தலைமை வகித்த,  ஸ்ரீலசுக தலைவர்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆமோதித்தார்.  ஐதேக தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பொது வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய காலம் இதுவல்ல என்ற தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறிவிட்டார்.  

பொது வாக்கெடுப்புக்கு சென்றால், புதிய  அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை மறந்து வேறு காரணங்களுக்காகவே சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள். இது அரசுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதுவே ஸ்ரீலசுக, ஐதேக கட்சிகளின் அச்சமாக தெரிகிறது. இதனாலேயே அவர்கள் புதிய அரசியலமைப்பு, பொதுவாக்கெடுப்பு இரண்டையுமே எதிர்க்கிறார்கள். ஆனால், ஏற்கனவே அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பதின்மூன்றாவது திருத்தம் உயர் நீதிமன்றத்தில், ஒன்பது நீதியரசர்களில், ஐந்து பேர் அளித்த தீர்ப்பின் காரணமாக மயிரிழையில் நிறைவேறியது ஆகும். இந்நிலையில் இன்றைய சட்டரீதியான அதிகார பகிர்வு ஒரு அங்குலம் கூட்டப்பட வேண்டுமானால்கூட, புதிய ஒரு அரசியலமைப்பு தேவை. இந்த அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை. இந்த உண்மை மறுக்கப்பட முடியாதது.  

இப்படியே போனால், ஒருபுறம், அதிகாரப்பகிர்வும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை. மனிதவுரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறலும் இல்லை. மறுபுறம் முஸ்லிம் மக்களின் பூர்வீக கிராமங்கள் வில்பத்து வன சரணாயலயம் என்று அபகரிக்கப்படுகிறது. மலையக மக்களின் காணி பகிர்ந்தளிப்பு விவகாரத்தில் அரச உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல் செய்ய அரச அதிகாரிகள் அசிரத்தை காட்டுகிறார்கள்.  எனவே அரசிலும், எதிர்கட்சியிலும் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தம் பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை முன் வைக்க வேண்டிய வேலை வந்துவிட்டதாக நான் நினைக்கின்றேன்.  

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers