இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

முதலில் சர்வதேச விசாரணை இல்லை! இப்போது உள்ளக விசாரணையும் இல்லை!! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்ளக பொறிமுறையை அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவது என்ற தீர்மானம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது.
அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்தின போர்க்குற்ற விசாரணைகளுக்கு அவசியமில்லை என்று ஒரு கருத்தை தெரிவித்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை உருவாக்கியுள்ளது. அரச படைகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான போரின்போது போர்க்குற்றம் எவையும் இழைக்கப்படவில்லை என்றும்  அதனால் போர்க்குற்ற விசாரணை அவசியமில்லை என்றும் கூறிய அமைச்சர் ராஜித யுத்தக் குற்ற விசாரணை என்று வந்தால் புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்றும் அதனால்  போர்க்குற்ற விசாரணை வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தின் போக்குமீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் தன்னை பாதுகாக்கும் வகையிலேயே காய்களை நகர்த்தி வருகிறது. இன்றைய ஆட்சியாளர்கள் போர்க்குற்றம் தொடர்பில் எவரையும் தண்டிக்க விடாமாட்டோம் என்ற வாக்குறுதியை தமது மக்களுக்கு தெளிவாக வழங்கி வருகிறார்கள். சர்வதேச ரீதியாக நீதியை நிலைநாட்டும், பொறுப்பு கூறும் கடப்பாடு உள்ள அரசாக, பாவனை செய்யும் இலங்கை அரசு, போர்க்குற்றத்திற்காக எவரையும் தண்டிக்காமல் காப்பதே நோக்கம் என நாட்டில் கூறுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டில் இலங்கை  தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் முன் வைத்த அறிக்கையின் பிரகாரம் கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்துள்ள நிலையில் அவரது அறிக்கை போர்க்குற்றமாக இலங்கை மனித உரிமை மீறல் விவகாரத்தை அணுகியிருந்தது.  அத்துடன் ஈழத் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை கோரும் நிலையில் அவரது அறிக்கை கலப்பு நீதிமன்றத்தையே பரிந்துரைத்தது.
எனினும் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச விசாரணை தேவை என்றும் இலங்கை  அரசின் நீதிக்கட்டமைப்பில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை  என்றும் தமிழ் மக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது. உண்மையில் இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தினால் எப்படியிருக்கும் என்பதற்கு எத்தனையோ ஈழ இனப்படுகொலை விசாரணைகள் சாட்சியாக இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தினால் எப்படியிருக்கும் என்பதையே அமைச்சர் ராஜிதவின் யாழ்ப்பாணக் கருத்துக்கள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.
ஈழம் குருதி காயாத நிலம். இனப்படுகொலையின் நிணம் தீராத நிலம். இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் கொல்லப்பட்டவர்களுக்காகவும் நீதி வேண்டி போராடும் நிலம். இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் பல்வேறு நோய்களினால் அழிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் இனத்தின் இருதயமே இனப்படுகொலைப் போரினால் காயப்பட்டு இருக்கிறது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கு எத்தனையோ சாட்சியங்கள் வெளிவந்துவிட்டன. அது போர் நடக்கும்போதும் வெளிவந்தன. போர் முடிந்த பின்னரும் வெளிவந்தன.
இதையெல்லாம், மகிந்த ராஜபக்ச அரசைப் போல மைத்திரிபால சிறிசேன அரசும் பொருட்படுத்தாமல் இருப்பதுபோல் பாவனை செய்கிறது. இந்தப் பாவனை உண்மைகளை மறைத்துவிடாது. மாறாக இந்தப் பாவனை இலங்கை அரசுக்கே மாபெரும் பின்னடைவுகளை உருவாக்கும். இனப்படுகொலைப் போர் நடத்துவதை மனிதாபிமானம் என்று கருதுபவர்கள் இனப்படு கொலை குறித்து விசாரணையை நடத்துவார்களா? இதனையே இலங்கை அரசு மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுபோதுகூட அரச அமைச்சரவைப் பேச்சாளர் இதே தொனியிலேயே கருத்து வெளியிட்டிருந்தார்.
தமிழ் மக்கள் இந்தக் காயங்களுடன் தொடர்ந்தும் வாழ முடியாது. தமிழ் மக்களுக்கு நீதியை மறுப்பதும் தொடர்ந்து அவர்களை காயங்களுடன் வாழ நிர்பந்திப்பதும் இன்னொரு இன அழிப்பேயாகும். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் தம்மை தாமே அழித்துக் கொண்டே போராடுகிறார்கள். இனக் கொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதிக்காக காத்திருப்பவர்கள் தம்மை தாமே அழித்துக் கொல்லும் வாழ்வை வாழ்கிறார்கள். ஈழத் தமிழ் இனம் இப்படியே அழிந்து போகட்டும் என சிங்கள அரசு நினைக்கிறதா?
இலங்கையின் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்த வெற்றி மமதையுடன் தோற்றுப் போனவர்களாக ஈழத் தமிழ் மக்களை சித்திரித்துப் பேசுவார். இன்றைய ஆட்சியாளர்கள் அதே மமதையுடன் அதனை அழகான  அரசியலாக செய்கின்றனர். வென்றவர்கள் தோற்றவர்களை அடக்குவதுடன் நடந்த போரின் அநீதிப் பக்கங்களையும் வெற்றி முகத்தால் மறைக்க முற்படுகின்றனர். உண்மைகளை மறைத்து, தவறான வரலாற்றை கட்டமைக்கும் போக்கு இலங்கைத் தீவில் மீண்டும் மீண்டும் கசப்புக்களையே உருவாக்கும். நடந்த விடயங்களை ஏற்றுக்கொள்ளுமொரு போக்கு இலங்கை அரசிடம் இல்லாத வரை இனச்சிக்கலை வளர்க்கும் ஒரு ஏற்பாடாகவே அது அமையும்.
2009இற்குப் பின்னரான காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தை ஆயுதமாக வைத்து தமது ஒற்றுமையையும் கோரிக்கைகளையும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர். வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் என யாவற்றிலும் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய செய்திகள் வலுவானவை. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக் கொண்டு வந்ததில் தமிழ் மக்களின் பங்கு முக்கியமானது.
அதன் பின்னரான தமிழ் மக்களின் நல்லெண்ண வெளிப்பாடுகளை இலங்கை அரசு மதிப்பதாக இல்லை. எல்லாவற்றையும் தம்முடைய பௌத்த சிங்கள இனவாத மதவாத அரசை, கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைகளை புனித திரை போர்த்தும் அரச போக்கை பாதுகாக்கும் வகையிலேயே செல்கின்றது. ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்த மகிந்த ஆட்சிக் காலப் போக்கிற்கும் இன்றைய ஆட்சிக்காலப்  போக்கிற்கும் இடையில் வேறுபாடுகளை உணர முடியவில்லை.
தமிழ் மக்கள் தமது பாதையை, தமது அரசியல் ஆயுதத்ததை தெரிவு வேண்டிய காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அமைச்சர் ராஜிதவின் கருத்து ஒன்றை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துகிறது. முன்னர் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்று அரச தரப்பினர் சொல்லி வந்தனர். அத்துடன் உள்ளக விசாரணையே நடத்துவோம் என்றும் கூறிக் கொண்டு வந்தனர். இப்போது எவரையும் தண்டிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரி கூறுகிறார். ராஜிதவோ, போர்க்குற்ற விசாரணையே தேவை இல்லை என்று கூறுகிறார்.
இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை அவசியமுள்ள விவகாரத்தை – போர்க்குற்ற விசாரணையே தேவையில்லை என்ற  இடம்வரை நகர்த்தியுள்ள நல்லாட்சி அரசு, நீதி, உண்மை, அரசியல் தீர்வு உரிமை போன்ற விடயங்கிளெல்லாம் எப்படி நடந்துகொள்ளும் என்பதை உணர்த்துகிறது. இனப்படுகொலைக்கான நீதியில்தான், அந்த உண்மையில் இருந்தே, இலங்கை தீவின் அமைதிக்கான அரசியல் கட்டமைப்பையும் ஈழத் தமிழ் இனத்தின் இருப்பையும்உறுதி செய்வதாக அமையும். நீதியை மறுத்து அநீதியின் மீது அமைக்கப்படும் கட்டமைப்புக்கள் எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் முள்ளிவாய்க்கால்களையே உருவாக்கும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers