இலங்கை பிரதான செய்திகள்

பணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனுமதி வழங்காததால் பணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கோணாவில் போத்தல் கள் அடைப்பு நிலையத்தில், இந்த வருடம் 5 இலட்சம் போத்தல் கள் அடைக்கப்பட்டு 15 மில்லியனுக்குமேல் உற்பத்தி வரியாக மதுவரித் திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்த உற்பத்தி வரி செலுத்த வேண்டும். தற்போது வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி மக்கள் வங்கியில் எமது சங்கத்தின் பெயரில் நிரந்தர வைப்பில் உள்ள 62 மில்லியன்  ரூபா நிதிக்கு எதிராக 10 மில்லியன் ரூபா கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தபோது, கடன் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டது.

நிரந்தர வைப்பை முடிவுறுத்தி அதில் இருந்து பணத்தை பெற்று  வரிகளைக் கட்டுமாறு வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கூறியதற்கு அமைவாக,  சுமார் 75 இலட்சம் ரூபாவுக்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்று நாம் அதனை பெற்று வரிகளைச் செலுத்தியுள்ளோம்.

ஆனால், இந்த மாதம் முதலாம் திகதி மதுவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய உற்பத்தி வரி ஆகக் குறைந்தது 02 மில்லியன் 05.07.2017 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும். செலுத்த தவறும் பட்சத்தில் மதுவரித் திணைக்களத்தினால் எமது போத்தல் கள் அடைப்பு நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி கட்டப்படாத தொகைக்கு மூன்று வீத வட்டியுடன் தொடர்ச்சியாக நிதி செலுத்த வேண்டும். இந்த விடயம் சம்பந்தமாக வடமாகாண கூட்டுறவு ஆணையாளரிடம் தெரியப்படுத்தியபோது, நிரந்தர வைப்பில் இருந்து நிதியை பெற முடியாது என்றும், அங்கத்தவர்களின் சம்பளத்தை குறைத்துக் கொடுத்து மதுவரித் திணைக்களத்திற்கு வரியை செலுத்துமாறு கூறியிருக்கின்றார். இந்த நிலையில் அங்கத்தவர்கள் நாளாந்தம் இந்த உழைப்பை நம்பியே அவர்களின் ஜீவனோபாயத்தை கொண்டுசெல்கின்றனர்.

எனவே, கோணாவில் போத்தல் கள் அடைப்பு நிலையத்தை பூட்டினால், அங்கத்தவர்கள் நாளாந்தம் அடைப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் சுமார் 4 ஆயிரம் போத்தல் கள்ளும் நிலத்தில் ஊற்றப்படும் அபாயம் ஏற்படும்.

இதனால், அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற காரணத்தினாலும் தொடர்ந்து அவர்களது உற்பத்தியை நிலத்தில் ஊற்றப்பட்டு பாரிய கடன் சுமையினை அங்கத்தவர்கள் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என கருதி சங்கத்தினுடைய நிதிப்பற்றாக்குறையான நிலையில், பொதுமுகாமையாளர் உட்பட சங்க பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது தங்க நகைகளை ஒவ்வொருவரும் வழங்கி சுமார் 20 பவுண் நிறையுடைய தங்க நகைகளை பொதுமுகாமையாளரிடம் கையளித்து இன்று குறித்த நகைகள் கிளிநொச்சி மக்கள் வங்கியில் அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு 1888218.75  ரூபா நிதி உற்பத்தி வரியாக செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கள் அடைப்பினை மேற்கொள்ள நிதி இல்லாமை தொடர்பில் அவசர பணிப்பாளர்சபைக் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.