உலகம் பிரதான செய்திகள்

கலிபோர்னியாவின் 8 நகரங்களை காட்டுத் தீ பற்றிக்கொண்டது – 10 பேர் பலி:-

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.

இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைவதனால் அங்கு வையின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. தற்போது இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதிகளில் தீயின் பரவுகை எற்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவுகிறது. இதனால் வனப்பகுதிகளை அண்மித்து தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. காற்று வேகமாக வீசுவதால் தீ பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 1500 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். அதில் சோனோமா நகரப் பகுதிகளில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நபாவில் 2 பேரும், மெடோ சினோவில் ஒருவரும் அடங்குவர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை. ஒரு பள்ளத்தாக்கில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பகுதி தீயில் எரிந்து கருகியுள்ளது.

இந்தக் காட்டுத்தீ சம்பவத்தை தொடர்ந்து கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் 14 இடங்களில் எரியும் காட்டுத்தீயால் 70 ஆயிரம் ஏக்கர் எரிந்து சாம்பலானது. கடந்த மாதம் (செப்டம்பர்) லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.