இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

நாடகத் துறையில் தொடரும் பயணம் – உமா மகாலிங்கம் -லண்டன்:-

தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தினர் அரங்கேற்றிய எத்தனையோ நாடகங்களைக் கண்டு களிக்காமல் போனது எனது துர் அதிஷ;டம். அத்தனையையும் ஈடு செய்யும் வகையில் கடந்த 8ம் திகதி, அல்பேட்டன் சமூகத்தினரின் கல்லூரி மண்டபத்தில் அரங்கேறிய 61வது நாடக விழாவில் பார்வையாளராக கலந்து கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு, ஆதவன் தொலைக்காட்சிக்கு முதற்கண் நன்றி தெரிவிக்க ஆசைப்படுகிறேன். ஏனெனில் கடந்த 5ம் திகதி ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திரு.க.பாலேந்திராவின் பேட்டி, இந்நாடக விழாவிற்கு சென்றே தீரவேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. அதே போன்ற உணர்வு பலருக்கும் இருந்த காரணத்தினால்தான் நாடகவிழா அரங்கேறிய மண்டபம் நிறைந்து வழிந்தது.

முதியோர்கள், இளைஞர்கள், சிறியோர் எனப் பலதரப்பட்டோர் இம்மண்டபத்தை நிரப்பி, கலைஞர்கள், நெறியாள்வோர் உட்பட தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் பிரதான தூண்களாக நிமிர்ந்து நிற்கும் திரு.க.பாலேந்திரா, ஆனந்தராணி தம்பதியினரது ஆத்ம திருப்தியையும் நிறைவு செய்துள்ளனர். பத்து மாதம் வயிற்றில் சுமந்த ஒரு சிசுவின் அழுகைக் குரலை, அது பிறந்தவுடன் கேட்கும் தாயின் ஆனந்தத்தைப்போல், இத்தம்பதியினரது முகத்தில் கண்ட பெரு மகிழ்ச்சி எம்மையெல்லாம் பூரிப்படையச் செய்தது.

இவ்விழாவில் அரங்கேறிய மூன்று நாடகங்களான, புதிய பயணம், பரமார்த்த குருவும் சீடர்களும், யுகதர்மம் ஆகிய அனைத்து நாடகங்களும் வௌ;வேறு திசைகளில் நெறிப்படுத்தப்பட்டாலும், கதையம்சம், கலையம்சம், நடிப்பு அத்தனையிலும் மிக நேர்த்தியாக வார்க்கப்பட்டுள்ளது. இதில் பங்குபற்றிய நடிகர்கள் சிறுவர்களாகவும் இளைஞர்களாகவும் இருந்தது மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாகும். இதில் பங்குபற்றிய கதாபாத்திரங்களை புதிய கோணத்தில் சிருஷ;டிக்கப்பட்டிருந்தமை சாதாரண கண்களுக்குப் புலப்படாத பல உண்மைகளை, நாடகங்களை ரசிக்கும் உயர்ந்த பார்வையாளர்களுக்கு நன்றாகப் புலப்படும். இதில் நான் கண்ட இரசனை என்னவெனில், பார்வையாளர்களையே கதா-பாத்திரங்களாக மாற்றக்கூடிய பாவனைகளை நாடகத்தை நெறிப்படுத்தியவர்கள் பூடகமாக உட்படுத்திய யுத்தி என்றால் அது மிகையாகாது. எனவே நாடகத்தில் பங்குபற்றிய அனைவருக்கும் எமது மிகப் பெரிய பாராட்டுக்கள்.

ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோ ஒரு திறமை ஒழிந்து கொண்டிருக்கும். அதைத் தேடிப் பிடித்து மக்களிடம் கொண்டும் செல்லும் பணி மகத்தானது. அந்த வகையில் ஈழத்து படைப்பாளிகளை மறந்து விடாமல் பதிவு செய்து ‘நூல் தேட்டம்’ என்ற பதிப்பின் மூலம் அறிமுகம் செய்யும் திரு.என். செல்வராஜா அவர்கள் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் ‘யுகதர்மம் நாடகமும் பதிவுகளும்’ நூலை இவ்விழாவில் அறிமுகம் செய்தது சாலப் பொருத்தமான நிகழ்வு.

நாடகங்களைத் தொடர்ந்து இடம்பெற்ற ‘கானசாகரம்’ ஈழத்துக் கவிஞர்களின் கவிதை வரிகளில் தெரிவு செய்யப்பட்டு, யாழ். எம். கண்ணன் அவர்களின் இசையமைப்பில் உருவகம் கொடுத்து, பல மேடைகளில் பங்குபற்றிய பிரபல பாடகர்களான மா.சத்தியமூர்த்தி, விஜயகுமாரி பரமகுமரன், தர்ஷpனி சிவசுதன், குகனேஸ்வரி நித்தியானந்தன், பவனுஜா கஜாகரன் ஆகியோர்களின் இனிய குரலில் இசை கேட்க எமக்களித்த சந்தர்ப்பத்திற்கு முதற்கண் பாலேந்திரா-ஆனந்தராணி தம்பதியினருக்கு எமது மனமுவர்ந்த நன்றி. இசை வழங்கிய திருவாளர்கள் ஏ. வேந்தன், எஸ். ஜலதரன், கே. சிதம்பரநாதன் ஆகியோருக்கும் எமது கரகோஷங்கள்.
இந்த விழாவின் வெற்றிக்கு உறுதுணையாக, பக்கபலமாக ஆரம்பம் முதல் இறுதிவரை பணியாற்றிய சகல கலைஞர்களுக்கும் குறிப்பாக சுமதி தர்மேந்திரா (ஆடை அலங்காரம்) தமிழ் அவைக்காற்று கலைக் கழக நீண்ட கால உறுப்பினர்களான வி. சிவசுதன், கே.ரமேஷ; (ஒலி) இவர்களுடன் பொபி (வீடியோ) ஜெயலக்ஸ் டிஜிற்றல்(படப்பிடிப்பு) ஊடகங்களான லண்டன் புதினம், ஆதவன் தொலைக்காட்சி, விழா மலர் அச்சுக் ;கோப்புக்குதவிய சமி அச்சகம் ஆகிய அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றி.

இயல், இசை, நாடகம் என்று எமது முன்னோர் வகுத்த பயணத்தில் நாடகத் துறையில் கடந்த 40 ஆண்டுகள் சளைக்காமல், களைக்காமல் நெடும் பயணத்தைத் தாண்டி, ஈழத் தமிழர்களின் வேர் அறுந்துவிடாமல், தமிழர்கள் பரந்து வாழும் மேற்கு நாடுகளில் இடைவிடாது பயணம் செய்து ஆங்காங்கே தமிழ் மொழியின் உணர்வுகளை நாடகங்கள் மூலம் பதிவு செய்யும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தினருக்கு மொழிப்பற்றுள்ள சகல தமிழர்களும் அப்பழுக்கற்ற ஆதரவை நல்க வேண்டுமென வேண்டுகிறோம்.

அகில இலங்கை வானொலியில் ஒலிபரப்பிய ‘கண்ணாடி வார்ப்புகள்’, ‘மழை’ போன்ற நாடகங்களை காதில் வாங்கிய காலந்தொட்டே, திரு.க. பாலேந்திரா ஆனந்தராணி ஆகியோரின் நாடகப்பற்றை உள்வாங்கிய எம்போன்றவர்கள் தொடர்ந்தும் அவர்களுடைய சேவையை அனுபவிக்க, அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், வலுவான ஆரோக்கியத்தையும் இறைவன் நல்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். வளர்க தமிழ். வாழ்க தமிழ் அவைக்காற்று கலைக் கழகம்.


படங்கள் ஜேலக்ஸ் ஜெயக்குமாரன்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap