இந்தியா பிரதான செய்திகள்

கார்டூனிஸ்ட் பாலா கைதுக்கு தமிழகப் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்!


தமிழகத்தை சேர்ந்த காட்டூனிஸ்ட் பாலா திருநெல்வேலிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரது கைதுக்கு எதிராக தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகையாளர்கள் சிலர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கை பின்வருமாறு,

நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, இன்று நவம்பர் 5-ம் தேதி பகல் 1.30 மணி அளவில், நெல்லை போலீஸால் கைதுசெய்யப்பட்டார்.
கார்டூனிஸ்ட் பாலா கடந்த பல ஆண்டுகளாக குமுதம் வார இதழின் அதிகாரப்பூர்வ கார்டூனிஸ்டாக பணி புரிந்தவர். தற்போது சுதந்திரமான கார்டூனிஸ்டாக பணிசெய்து வரும் அவர், பல்வேறு பிரச்னைகளிலும் தன் கருத்தை வலியுறுத்தி கார்ட்டூன் வரைந்து வருகிறார்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து அவரது மனைவி சுப்புலெட்சுமி ஆகியோர் கந்து வட்டி கொடுமையில் சிக்கி, கந்து வட்டி கும்பலால் தொடர்ந்து மிரட்டப்பட்டனர்.
அவர்கள், தங்களை மீட்கக் கோரி 6 முறை மாவட்ட ஆட்சியரிடமும், போலீசாரிடமும் மனுக் கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீது நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் தந்தூரி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இசக்கிமுத்துவும், அவரது மனைவியும், தங்களின் இரண்டு குழந்தைகளோடு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தையே அதிர வைத்த இந்த சம்பவத்தால் கடும் மன உளைச்சல் அடைந்த கார்டூனிஸ்ட் பாலா , அடுத்த நாள் 24-ஆம் தேதி மாவட்ட மற்றும் மாநில அரசு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து கார்டூன் ஒன்றை வரைந்திருந்தார்.
இந்நிலையில், 05-11-2017 மதியம் 1.30 மணியளவில் நான்கு ஆண்களும், ஒரு பெண்ணுமாக ஐந்து பேர் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். பாலாவின் மனைவி சாந்தினி விபரம் கேட்டதற்கு, “நாங்கள் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவில் இருந்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் புகாரின் பேரில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
வந்த ஐந்து பேரும் போலீஸ் சீருடை அணிந்திருக்கவில்லை. பாலாவின் மனைவி, ‘நீங்கள் போலீஸ் என்பதற்கு என்ன ஆதாரம்?’ என கேட்டதற்கு அவர்கள் எந்த அடையாள அட்டையையும் காட்டவில்லை. எஃப்.ஐ.ஆர். நகல் வழங்கவோ, என்னென்னப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை முறையாக தெரிவிக்கவோ இல்லை.
பாலாவின் செல்போன், பாலா மனைவியுடைய செல்போன் இரண்டையும் பிடுங்கிக்கொண்ட அவர்கள், பாலா பயன்படுத்தி வந்த கம்ப்யூட்டரையும் எடுத்துக்கொண்டனர். இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் இருந்து தரதரவென இழுத்துச் சென்று, TN 72 G 1100 என்ற எண்கொண்ட போலீஸ் டெம்போ டிராவலர் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். குறைந்தப்பட்சம் வழக்கறிஞருக்கோ, உறவினர்களுக்கோ தகவல் தெரிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.
ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளும் கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு உண்டு. அது ஆட்சியாளர்கள் வழங்கும் சலுகை அல்ல. அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை கருத்துரிமை. அந்த கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூனுக்காக அராஜகமான முறையில் பாலாவை கைது செய்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசு.
கௌரி லங்கேஷ்,தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என நாடு முழுவதும் அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் பத்திரிகையாளர்களும், முற்போக்காளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மதவெறியின் பெயரால் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்றால், தமிழ்நாட்டில் மாநில அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கருத்துரிமையின் குரல் வளையை நெரிக்கிறது. பாலா கைது இதற்கு ஓர் உதாரணம்.
கார்ட்டூனிஸ்ட் பாலாவின் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் மீதும், மனித உரிமை மீதும், ஊடக சுதந்திரத்தின் மீதும் நம்பிக்கைக்கொண்ட அனைத்து அமைப்புகளும் பாலாவின் விடுதலைக்குக் குரல் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக, மாநிலம் முழுக்க பத்திரிகையாளர்கள் ஒன்று திரள வேண்டிய தருணம் இது. இன்று கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு நேர்ந்தது நாளை நமக்கு. ஒரு கருத்தை வெளியிடக் கூட உரிமை இல்லை என்றால் நான்காவது தூண் எனக் கூறிக்கொள்வதில் என்ன பொருள் இருக்க முடியும்?
விரைந்து வினையாற்றுவோம். கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுவிக்கக்கோரி மாநிலம் முழுக்க நமது குரல்களை வலுப்படுத்துவோம்.

பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை
– பாரதி தம்பி
– டி.அருள் எழிலன்
– கவின்மலர்
– வெற்றிவேல் சந்திரசேகர்
– ஜோ.ஸ்டாலின்
-வேங்கட பிரகாஷ்
– பொன்.மகாலிங்கம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap