பகரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், கட்;டார் நாட்டுக்காக உளவு பார்த்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
பகரைனில் முடியரசராக இருக்கும் மன்னர் ஹமதின் ஆட்சியை எதிர்த்து சியா பிரிவைச் சேர்ந்த அல் வெபாக் இயக்கத்தின் தலைவர் ஷேக் அலி சல்மான் உள்ளிட்ட பலரும் போராடி வருவதனால் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
மன்னரின் முடியாட்சியை கடுமையாக எதிர்த்தும், ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர்.
இதனால், அல் வெபாக் இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்களை மன்னர் ஹமது தடை செய்துள்ளதுடன் அரசுக்கு எதிராக போராடிய பலரையும் கைது செய்துள்ளார்.
இந்த நிலையில், பகரைனின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், ஆளும் அரசை கவிழ்ப்பதற்காக கட்டார் நாட்டுடன் இணைந்து சதி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், ஷேக் அலி சல்மானுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கட்டார் , ஐ.எஸ் தீவிரவாதிகளுடனும், ஈரானுடனும் தொடர்பு வைத்து இருப்பதாக குற்றம் சுமத்தி கடந்த 2017-ம் ஆண்டு பகரைன், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கட்டார் நாட்டுடனான உறவை முற்றிலுமாக முறித்து கொள்ள முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Add Comment