இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு2 – வீடியோ இணைப்பு “ஏக்கிய இராச்சிய” என்பது ஒருமித்த நாடு தான் மாறுங்கள் அல்லது மாற்றப் படுவீர்கள். – சுமந்திரன் எச்சரிக்கை.:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

 

ஊடகங்கள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபடுவதை மாற்ற வேண்டும் இல்லை எனில் மாற்றபடுவீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களை எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து நாவாந்துறை ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அருகாமையில்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போது ,

நாங்கள் ஒரு மக்களாக ஒரே இடத்தில் ஒன்றாக வாழ்ந்தவர்கள். என்பதை காண்பிக்க வேண்டிய தருணம் இது. கிழக்கில் பல இடங்களிலும் சென்று பார்த்த போது சந்தோஷ பட்டேன் அங்கே தமிழ் முஸ்லீம் வேட்பாளர் பலர் இன்றாக போட்டியிடுகின்றார்கள். வவுனியாவில் மூன்று சிங்கள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உரித்தை குறித்து தமிழ் மக்களுக்கு எப்படியான இருப்பு உரிமைகள் குறித்து போராடுகின்ற ஒரு கூட்டமைப்பு அது இன்னமும் நிறைவேறவில்லை. அதற்காக நாம் பயணித்து கொண்டு இருக்கின்றோம்.

அதேவேளை மற்றைய மக்களின் உரித்துக்களையும் உரிமைகளையும் பற்றி பேசுகின்றது. எங்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினருக்கு நாங்கள் மதிப்பு அளிக்கா விட்டால் , இந்த நாட்டில் சிறுபான்மையினரான நாம் மதிப்பை எதிர்பார்க்க முடியாது. அதனாலயே மற்றவர்களுக்கவும் போராடுகின்றோம். மற்றவனை அடக்கி எனக்கு மட்டும் உரித்தை கேட்டால் அதனை யாரும் ஏற்க மாட்டார்கள் உரிமை மறுக்க பட்டவனுக்கு தான் மற்றவின் உரிமையை மதிக்க தெரியும்.

அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன இது காலம் வரையில் இப்படியான நடவடிக்கை இருந்தது இல்லை. முன்னையவற்றில் தமிழ் மக்களின் கருத்திற்கு இடமில்லை.

இது தான் முதல் தடவையாக இரண்டு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து அதற்கும் மேலாக பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் உறுப்பினர்களும் இந்த அரசியலமைப்பு உறுப்பினர்கள் வழிகாட்டல் குழுவிலும் எல்லா கட்சிகளுக்கும் அங்கத்துவம் உண்டு. ஈ.பி.டி.பி. தனி மனிதராக இருக்கும் போதும் அவர்களுக்கும் உரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு அனைவரும் ஏற்றுக்கொண்டு இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. பிரதான அறிக்கைக்கு எல்லோரும் பொறுப்பாளிகள். இன பிரச்சனைக்கு தீர்வு பெறப்பட்டு உள்ளது. அது இன்னமும் முழுமையாக பெற வில்லை. அதற்குள் அதனை குறை சொல்கின்றார்கள்.

எங்களுடைய இறைமைகளை நாங்களே உருவாக்க முடியும் அப்படி நடந்தாலே அதிகார பகிர்வு முழுமை பெறும். மாகாகண சபை முழுமையாக அதிகார பகிர்வு பெறவில்லை. 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவேன் என மகிந்த ராஜபக்சே கையொப்பம் இட்டுள்ளார். அப்படி என்றால் அது முழுமையாக அமுல் படுத்தபப்டவில்லை என்பதனை அவரே ஏற்றுக்கொண்டு உள்ளார்.

வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண முதலமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் வந்தார்கள். அவர்கள் காணி அதிகாரம் வேண்டும் என கேட்டார்கள் , சட்ட ஒழுங்கு தம்மிடம் வேண்டும் என கேட்டார்கள் ஆளுனரின் அதிகாரங்களை முற்றாக குறைத்து கொள்ளுங்கள் என கேட்டார்கள். அதெல்லாம் அந்த இடைக்கால அறிகையில் உண்டு.

அந்த இடைக்கால அறிக்கையில் முதல் பக்கங்களில் குறிக்கப்பட்டு உள்ளது ஆட்சி முறைமையை மற்ற வேண்டும் என்பதே. ஒரே இடத்தில் சட்டவாக்கம் இருக்க கூடாது மாகாணங்களிலும் இருக்க வேண்டும் என்றே வந்துள்ளது.

தமிழ் ஊடகங்கள் அனைத்தும் பொய் சொல்லுகின்றது. இடைக்கால அறிக்கையில் இல்லாததை சொல்கின்றார்கள். இருப்பதை மறுதலிக்கின்றார்கள். எக்கிய இராச்சியம் என்றால் ஒருமித்த நாடு என சொல்லி இருக்கின்றது. ஒற்றையாட்சி என்று சொல்கின்றார்கள்.

எக்கிய இராச்சிய என்றால் ஒற்றையாட்சி அல்ல என பலதடவைகள் சொல்லி விட்டேன். எக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என்றே சொல்லபப்ட்டு உள்ளது.

ஆனால் வேண்டும் என்றே ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றார்கள். அவர்களுக்கே தெரியும் தாங்கள் சொல்வது பொய் என்று. தெரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் பொய் சொல்கின்றாகள் என பொய் சொல்கின்றார்கள் என நான் சொல்லும் போது எனது முகத்தை பார்த்து மக்களின் முகத்தை பார்த்து சிரித்து ஏளனம் செய்வது போன்று என்ன செய்ய முடியுமோ என சவால் விடுவது போன்று எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஊடகங்கள் நினைக்க கூடாது ஊடகங்கள் தான் மக்களின் சிந்தனையை மாற்ற வல்லவை என்று ஊடகங்கள் தவறு செய்யும் போது மக்கள் துரத்தி அடிப்பார்கள். ஊடகங்களுக்கு பயந்து மக்கள் மத்தியில் நாங்கள் பொய் சொல்ல தயாரில்லை எவ்வளவு பலமான ஊடகம் என்றாலும் நாங்கள் பயப்பட மாட்டோம்.

இந்த பத்திரிகையில் செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்கள் பத்திரிகை ஆசிரியர்களுக்கு எழுத படிக்க தெரியாதா ?எழுத படிக்க தெரிந்தவர்கள் எப்படி என்றால் இப்படி எழுதி இருக்க மாட்டார்கள்.

ஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என சொல்கின்றார்கள். அது பச்சை பொய் பொய் சொல்லும் ஊடகங்களை எதிர்த்து வெற்றி பெறுவோம். பொய் சொல்லும் ஊடகங்களுக்கு பயந்து ஒளித்து தேர்தலில் வெல்ல மாட்டோம்.

எங்களுடைய மக்கள் அனைவரின் 70 வருட பிரச்சனை. இதற்காக உயிரை விட்டவர்கள் எத்தனை பேர் ? இடம்பெயர்ந்தவர்கள் எத்தனை பேர் ? சொத்துக்களை இழந்தவர்கள் எத்தனை பேர் ? இரத்தம் சிந்தியவர்கள் எத்தனை பேர் ? மீள குடியேற முடியாமல் தவிக்கின்றார்கள். இத்தனை இன்னல்களுக்கு பின்னரும் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என அதற்கான சூழ் நிலையை நாங்களே உருவாக்கி அதற்கு ஏற்றால் போல் அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் இந்த செயற்பாட்டை குழப்புவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் செயற்படுவதை போல ஒரு சில ஊடகங்களும் செயற்படுகின்றன. ஆகையால் ஊடகங்கள் பொய்யான பரப்புரை செய்வதை மாற்ற வேண்டும் .

இல்லாவிடின் மாற்ற படுவீர்கள் ஏனெனில் உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது. இடைக்கால அறிக்கையில் இல்லாததை இருக்கின்றது என சொல்வது பச்சை பொய். அவ்வாறான செயற்பாட்டுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். என மேலும் தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.