இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – பிள்ளை , பேரப்பிள்ளை என இரண்டு தலைமுறையை தேடி அலையும் வயோதிபர்கள் (வீடியோ இணைப்பு 2 ) .

 குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
பிள்ளை மற்றும் பேரப்பிள்ளை கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில் அவர்களை தேடி அலைந்து திரியும் வயோதிப சகோதரிகளின் நிலைமையை கண்டு போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த பலரும் கண்ணீர் சிந்தி இருந்தனர்.  யாழுக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வயோதிப சகோதரிகள் இருவரும் கதறி அழுதமை அங்கிருந்தவர்களை நெகிழ செய்திருந்தது.
கதறி அழுத சகோதரி ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கூட வந்திருந்த மற்றைய சகோதரி , சகோதரிக்கு ஆறுதலாக செயற்பட்டார். குறித்த வயோதிப சகோதரிகளின் பிள்ளை மற்றும் பேரப்பிள்ளை என்பவர்கள் இராணுவத்தினரால் கடத்தி செல்லப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுஉள்ளனர்.

அது தொடர்பில் சகோதரிகளில் ஒருவரான   தங்கராஜா செல்வராணி தெரிவிக்கையில் ,

நங்கள் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த போது 2008ஆம் ஆண்டு எனது மகன் வேலை செய்து விட்டு வீட்டவந்து இரவு படுத்திருந்த போது வீட்டுக்குள் நுழைந்தவர்கள் மகனை பிடித்து சென்றனர்.  அப்போது எனது மகனுக்கு பிள்ளை பிறந்து ஏழு நாட்கள் தான் ஆகி இருந்தன. அன்று முற்றத்தில் படுத்து இருந்தார். நாங்கள் உள்ளே இருந்தோம் இரவு வீட்ட சுற்றி நாய்கள் குரைத்தன. நான் எழுந்து வந்து தம்பி நாய் குரைக்குது வீட்டுக்குள் வந்து படு என கூறினேன்.
அதற்கு மகன் எனக்கு வீட்டுக்குள் படுத்தால் வியர்க்கும் என கூறி முற்றத்தில் காற்றோட்டமாக படுத்திருக்கிறேன். என கூறினார். சில நிமிடத்தில் இரவு 09 மணியளவில் ஐயோ என சத்தம் கேட்டது.  ஓடி வந்து வெளியே பார்த்த போது என் மகனை அப்படியே இராணுவம் தூக்கி சென்றது. சத்தம் கேட்டு நானும் மச்சாளும் ஓடிவந்தோம். எங்களை தள்ளி விட்டார்கள்.
அதன் போது மச்சாளை உதைந்து விழுத்தினார்கள் இன்றும் மச்சாளுக்கு இடுப்பு விளங்காது. அப்படியே மகனை தூக்கி போக பின்னால் குளறி பின்னால் போனோம்.  கடைசியாக அம்மா என மகன் அழைத்து தான் கடைசியாக கேட்டது. அப்படியே மெனிக் பார்ம் பக்கம் தான் கொண்டு போனாங்கள். அந்த ஆறு மட்டும் நான் பின்னால் போனேன் ஆறு கடந்து என்னால் போக முடியாததால் அப்படியே அதிலே விழுந்து கிடந்தது கதறி அழுதேன்.
மறுநாள் செட்டிக்குளம் இராணுவ முகாமில் போய் விசாரித்தேன். முகாம் வாசலில் கிடந்தது கதறி அழுதேன், இரண்டு பேர் வந்து நாங்கள் பிடிக்கவில்லை மெனிக் பார்ம் முகாம் இராணுவம் பிடித்ததோ தெரியாது அங்கு சென்று விசாரியுங்கள் என அனுப்பினார்கள் அங்கே போயும் இல்லை.  மகனை தேடி ஒவ்வொரு இராணுவ முகாமாக தேடி அலைந்தேன். வவுனியாவில் மூன்று இராணுவ புலனாய்வாளர்களின் முகாம் உள்ளதாக அறிந்து மூன்றுக்கும் சென்று விசாரித்தேன்.
ஒரு இடத்தில் சொன்னார்கள் உன் பிள்ளையின் பெயர் வந்து இருக்கு வா கொழும்புக்கு செல்வோம் என அழைத்து சென்றார்கள் கொழும்புக்கு சென்று மேல் மாடி ஒன்றுக்கு என்னை போல பத்து பேரை அழைத்து வந்திருந்தார்கள்.  என்னை முதலில் மேல் மாடிக்கு அழைத்து சென்றார்கள். அங்கே முழுக்க இருட்டு அறை அங்கே தாடி தலைமுடி வளர்த்த வாறு பலர் இருந்தார்கள் நான் சென்றதும் பலரும் ஓடி ஓடி வந்து கம்பிக்கூண்டுகளின் ஊடாக பார்த்தார்கள்.
அந்த இருட்டறைக்குள் என்னை எப்படி அழைத்து சென்றார்கள் எனவும் தெரியாது. எப்படி மீள அழைத்து வந்தார்கள் என்றும் தெரியாது. அந்த தலைமுடி தாடி வளர்த்து ஆளே தெரியாதமாதிரி உரு மாறி இருக்கும் போது அதற்குள் எங்கள் பிள்ளையை நாங்கள் எப்படி மட்டுக்கட்டி பிடிப்பது.
என் பேரப்பிள்ளையையும் கடத்தி சென்று விட்டார்கள். அந்த பேரப்பிள்ளையை ஆவது கண்டு பிடிப்போம் என தான் போற போற இடங்களில் எல்லாம் கதறி அழுது என் பிள்ளைகளை கேட்கிறேன்.  அந்த பேரப்பிள்ளைக்கு தாயும் இல்லை. அந்த பேரப்பிள்ளைக்காக தான் கதறி அழுது கொண்டு திரிகிறேன். என் உயிர் போக முதல் என் பேரப்பிள்ளையை காண வேண்டும் என்று தான் உயிருடன் இருக்கிறேன். என தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.