
பதுங்கு குழியின் ஓரத்தில்
இடிந்து கிடந்த வானம்
நிமிர்ந்து வெளிக்கிறது
திடுக்கிட்டு
சிறுபள்ளங்களில் விழுந்து பதுங்கிய குழந்தைகள்
பார்க்க மறுத்த வானம் நோக்கி
கை தட்ட
புன்னகையால் நிரம்பிற்று வானம்.
செடிகளில் புன்னகை அரும்ப
நெடுநாட்களின் பின்
சூரியன் வருகிறான் கம்பீரமாய்
இருள் துடைக்கப்பட்ட
நிலவின் ஒளியில்
விண்மீன்களை எண்ணுகின்றனர்
இரவுப் பொழுதின்
முற்றத்தில் படுத்திருக்கும் குழந்தைகள்
நள்ளிரவில் குழந்தைகள்
கண்ணயரும்போது
நாட்டைச் சிதைக்க
வானத்தை உழும் பயங்கரப் பறவைகள்
காவிச்செல்வதெல்லாம்
பிய்த்துவிட்ட குழந்தைகளின் உடல்களை
அதன் அசுரச்சிறகுகளை
பிடுங்கி எறிந்துவிட
துரத்தின போராளிகளின் பீரங்கிகள்
அவை உறங்கும்
அசுரக்குகையை
நெருப்பை பொழிந்து அழித்துவிட
விரிந்தன ஈகம் சுமந்த சிறகுகள்
தான் எறிந்த கல்லில் விமானம்
வீழ்ந்ததென துள்ளிக் குதிக்கும்
ஒரு சிறுவனின்
குதூகலத்தில் இருந்தது விடுதலை
தான் எறிந்த நெருப்புக் கொள்ளியில்
விமான நிலையம் அழிந்ததென
சொல்லித் திரியும் சிறுமியின்
கொண்டாத்தில் இருந்தது வாழ்வின் கனவு
சிறகு முளைத்த வானத்தில்
பறவைகளைப் போல
இறக்கையபடித்துப் பறந்தனர் குழந்தைகள்.
0
தீபச்செல்வன்
2007
Spread the love
Add Comment