இலங்கை கட்டுரைகள்

சட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி! மு.தமிழ்ச்செல்வன்….

இயற்கையிலிருந்து மனித குலம் விலகி செல்லச் செல்ல மனிதகுலத்திற்கு எதிரான சூழல் உருவாகி கொண்டே செல்கிறது. உலகில் வாழ்கின்ற உயிரிணங்களில் மனிதகுலம் மாத்திரமே தனக்கு எதிரான நடவடிக்கைகளை தானே செய்கின்ற இனமாக காணப்படுகிறது. பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தும் குறுகிய சுயலாப தேவைகளுக்காக மனிதர்கள் இயற்கை அழித்து வருகின்றார்கள் அல்லது இயற்கை பயன்படுத்துகின்றார்கள்.

உலகில் காணப்படுகின்ற கடல்வாழ் உயிரிணங்கள் என்றாலும் சரி நிலத்தில் வாழ்கின்ற உயிரிணங்கள் என்றாலும் சரி தான் வாழ்கின்ற சூழலை தனக்கேற்ற முறையில் தனக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என அறிந்தே வாழ்ந்து வருகிறது. தனது வாழும் சூழல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் அவை அக்கறையாக உள்ளன. தனது வாழும் சூழலில் பாதிப்பு ஏற்படுகிறது என்று கருதும் ஒர் உயிரிணம் அந்த சூழலிருந்து இடம்பெயர்ந்து சென்று விடுகிறது. ஆனால் உயிரிணங்களில் எல்லாவற்றிலும் மேலான மனிதன் இதற்கு புறநடையாக இருக்கிறான்.

இந்த நூற்றாண்டில் உலகம் நவீன தொழிநுட்ப யுகத்தில் வேகமாக முன்னேறிச் செல்கின்ற அதேவேளை இயற்கை சூழலிலிருந்தும் உலகம் விடுப்பட்டு செல்கிறது இந்த விடுபடும் இடைவெளி அதிகரித்துச் செல்ல செல்ல மனிதன் வாழும் சூழல் வாழ்வதற்கு எதிரான நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. நிலம், நீர், வளி, என்பன மனித நடவடிக்கைகளால் பெரிதும் பாதிப்படைந்து செல்கிறது.

இந்தப் பாதிப்புக்கள் நாடுகள் வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது. என்னதான் சட்டங்கள் இருந்தாலும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பத்தி கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வும் அதன் பாதிப்புக்கள் பற்றியும் கவனத்தில் எடுத்துள்ளது.

‘2009 க்கு முன் இந்த இடத்தில் நின்று பார்த்தால் கடலை கீழ் நோக்கிதான் பார்க்க வேண்டும் ஆனால் தற்போது பாருங்கள் எப்படி இருக்கிறது என்று? நாங்கள் பள்ளத்தில் இருக்கின்றோம் கடல் மட்டம் எங்களை விட உயர்வாக இருக்கிறது’ என்றார் கிளிநொச்சி கிளாலியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்
அவர் சுட்டிக்காட்டிய இடம் 2009 க்கு முன் சுமார் பத்து அடி உயரமான மணல் மேடாக இருந்துள்ளது. ஆனால் இன்று அதே இடம் ஜந்து அடி வரை ஆழமான பள்ளத்தாக்கு மாதிரி காணப்படுகிறது. அந்தளவுக்கு அந்தப் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது. தற்போதும் இடம்பெற்று வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறு பல இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுப்பாடின்றி அகழப்பட்டு வருகிறது.குறிப்பாக மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கிளாலி, அல்லிப்பளை, தர்மக்கேணி, மாசார், சோரன்பற்று, புலோப்பளை, இயக்கச்சி போன்ற பிரதேசங்களிலும், பூநகரியில் கௌதாரிமுனை, கரைச்சி பிரதேசத்தில் அக்கராயன்குளம்,மருதநகர்,வடடக்கச்சி, பன்னங்கண்டி, கண்டாவளையில் கல்மடு, கண்டாவளை, போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகிறது. இதில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலும், பூநகரி கௌதாரிமுனையிலும், அக்கராயன் பிரதேசத்திலும் அதிகளவில் இச்செயற்பாடுகள் இடம்பெறுகிறது.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் இரவு பகல் என்றில்லாது மணல் அகழ்வில் ஈடுப்படுவதனால் அந்தப் பிரதேசங்கள் மிக மோசமான சூழல் பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளன. குறித்த பிரதேசங்களில் காணப்படுகின்ற மரங்கள், செடிகள் என்பன அழிவடைவதோடு, கடற்கரை பிரதேசங்களில் கடல் மட்டத்தை விட ஆழமாக மணல் அகழப்படுவதனால் கடல் நீர் உட்புகுந்து நிலம் நீர் என்பன உவராகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படுகின்ற தாக்கம் விவசாயம், குடிநீர் என எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்கள் வாழ முடியாத ஒரு சூழலுக்குள் அந்தப் பிரதேசங்களை கொண்டு செனறுவிடும் நிலைமைகள் உருவாக்கி வருகிறது.

இந்தப் பிரதேசங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மணல் வியாபாரிகள் உள்ளுர் நபர்களை பயன்படுத்தி பாரியளவில் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றனர். குறிப்பாக சில மணல் வியாபாரிகளுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் வேறு சிலருக்கு பாதுகாப்புத் தரப்பினர் செல்வாக்கு இருப்பதனாலும் அவர்கள் துணிந்து மணல் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றனர் என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்தோடு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு எதிராக பிரதேசங்களில் குரல் கொடுக்கின்றவர்களை அவர்கள் அச்சுறுத்துகின்றனர் எனவும், இதனால் அவர்களுக்கு பயந்து பொது மக்களும் அமைதியாக இருந்து விடுகின்றனர் எனவும் பொது மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்ற சந்தர்ப்பங்களில் பொலீஸாருக்கு தகவல் வழங்கினால் பெரும்பாலும் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றும் மாறாக தற்போது பொது மக்களால் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கினாள் அவர்கள் தீடிரென பிரதேசத்திற்குள் சென்று சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர். என்று பொது மக்கள் குறிப்பிடுகின்றனர். இது ஓரளவு ஆறுதல் தருகின்ற விடயமாக இருக்கின்றதாக குறிப்பிடும் மக்கள் கணியவளத் திணைக்களத்தின் முறையான கண்கானிப்பு இல்லாமையும் சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் தொடர்ந்து செல்வதற்கு வழிவகுக்கிறது எனவும் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

சில பிரதேசங்களில் கணியவளத்திணைக்களம் மணல் அகழ்வுக்கான அனுமதி பெற்ற ஒருவவருக்கு குறித்த பிரதேசத்தில் இருந்து இவ்வளவு அளவு கியூப் மணல்தான் அகழவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கும் ஆனால் குறித்த நபரால் அங்கிருந்து வழங்கப்பட்ட அளவை விட இன்னொரு மடங்கு அளவுக்கு மணல் அகழ்வு இடம்பெற்றிருக்கும். இதற்கு காரணம் முறையான கண்காணிப்பு, நடவடிக்கை இன்மையே. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

குறுகிய காலத்திற்குள் அதிகளவு இலாபத்தை உழைக்கும் நோக்குடன் எவ்வித சமூக அக்கறையும், சுற்றுச் சூழல் நலன்களையும் கருத்தில் எடுக்காது சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகிறது. இச் செயற்பாடுகளுக்கு தங்களது தலையில் தாங்களே மண் அள்ளிப் போடுவது போன்று உள்ளுர் வாசிகள் சிலர் பயன்படுத்தப்படுகின்றனர். வேலையின்மை அதனால் ஏற்ப்பட்ட வறுமை,குறுகிய நேரத்திற்குள் அதிக வருமானத்தை உழைத்தல் போன்ற பல காரணங்களுக்காக கிராமவாசிகளில் சிலர் இச் செயற்பாடுகளில் ஈடுப்படுகின்றனர்.

வடக்கில் தற்போது அதிகளவு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அதிகளவு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகிறது. இதற்கு அதிகளவு மணல் தேவைப்படுகிறது. எனவே இந்த தேவைப்பாடுகளில் பெரும் பகுதி சட்டவிரோதமாக பூர்த்திச் செய்யப்படுகிறது. ஒன்றை பெருவதாக இருந்தால் ஒன்றை இழக்க வேண்டும் என்ற கூற்றைக் கூறிக்கொண்டு அபிவிருத்தியை பெறுவதற்காக நாம் வாழும் சூழலை இழக்க முடியாது. அவ்வாறு இழந்து பெறும் அபிவிருத்தியை கொண்டும் நாம் வாழவும் முடியாது.

கிளிநொச்சியை பொறுத்தவரை மணல் அகழ்வு இடம்பெறும் பிரதேசங்களின் நிலமும் நீரும் பெருமளவுக்கு வேகமாக உவராகி வரும் பிரதேசங்களாகும். இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத காடழிப்பு, கிரவல் அகழ்வு என்பன இச் செயற்பாட்டினை மேலும் துரிதப்படுத்துகிறது. இது இன்னும் சில வருடங்களில் இந்தப் பிரதேங்கள் மக்கள் வாழ முடியாத பிரதேசமாக மாற்றமடைய வழிவகுக்கிறது. எமது அடுத்த தலைமுறைக்கு இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் சொத்துக்கள் சேர்க்க முற்படும் நாம் அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நல்ல இயற்கை சூழல் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றோம்.

எனவேதான் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த சம்மந்தப்பட்ட பொலீஸ் திணை;ககளம், கணியவளத்திணைக்களம், மாவட்டச் செயலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பன பொருத்தமான ஒரு பொறிமுறையை உருவாக்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இதனையே இன்று அனைவரிடமும் மக்கள் எதிர்த்து பார்த்து நிற்கின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.