இலங்கை பிரதான செய்திகள்

முள்ளிவாய்கால் அவலத்தில் சவாரிசெய்த மாகாணசபை பாவங்களை சுமந்து விடைபெறுகிறதா?

நாங்களே கொண்டு வந்த நல்லாட்சி அரசு எங்களது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து இன்றைக்கு எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே நங்கள் இனி கவனமாகச் செயற்பட வேண்டியிருக்கிறது. என மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது மாகாண சபைக்கான தேர்தலை விரைவாக வைக்குமாறு கோரி ஐனாதிபதிக்கு கடிதம் அனுப்பலாம் என தர்மபால செனவிரட்ன அவைத் தலைவரிடம் கேட்டிருந்தார். நாங்கள் அவ்வாறு செய்வதற்கு முன்னர் ஐனாதிபதி என்ன செய்கின்றார் என்று பார்ப்போம் என அவைத் தலைவர் பதிலளித்தார்.

மேலும் பல மாகாண சபைகளின் காலம் முடிவடைந்தும் அரசு தேர்தலை நடத்தவில்லை. ஆகவே அதற்குத் தேர்தலை நடாத்த வேண்டும். ஆனாலும் தேர்தலை மெல்ல மெல்ல நடாத்தாமல் அரசு மறந்து போய்விடுமொ என்ற அச்சம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அஸ்மின் உரையாற்றுகையில்… எமது மக்களுக்குரிய தீர்வைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஐனாதிபதிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து அவருக்கு வாக்குக் கேட்டோம். ஆனால் அத் தீர்வை ஏற்படுத்துவதற்கு தற்பொது தடையாக இருப்பவரே இந்த ஐனாதிபதி தான். அவர் தன்னால் தனது கட்சி பாதிக்கப்பட கூடாது என்பதால் தன்னுடைய கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே செயற்பட்டு வருகின்றார்.

இன்றைக்கு இருக்கின்ற ஐனாதிபதிக்கு தைரியம் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவொரு வெட்கமான விடயம் தான்.
இந்த நாட்டில் மீண்டுமொருமுறை இனவாதத்தை தூண்டி இனவாதப் போக்குடனேயே அவர் நடக்கின்றார். அகவே நாங்கள் கவனமாகச் செயற்பட வேண்டி இருக்கின்றது.

நல்லாட்சி என்று கூறி எமது ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு எமது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. இதனால் எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது என்றார்.

இதனையடுத்து கருத்து வெளியட்ட முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா இந்த அரசாங்கம் சூழ்ச்சிகளையே செய்து வருகிறது. மாகாண சபையின் காலம் முடிவடைந்த பின்னர் தங்களுடைய கட்சியை வளர்க்கின்ற செயற்பாடுகளையே இங்கு முன்னெடுக்க உள்ளது.

இங்குள்ள ஆளுநர் தற்போது இங்கிலாந்து சென்று எங்களுடைய பிரச்சனைகள் பற்றி எங்களது மக்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளாராம் ஆகவே அனைத்தையும் வழங்கிக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்றார்.

இதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் அவ்வாறு சென்றுள்ள விடயங்களை நானும் அறிந்திருக்கின்றேன். ஆனால் நாங்கள் விழித்திருக்கின்றோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அதே போன்று நீங்களும் அனைவரும் விழித்திருந்தால் எல்லாம் எங்கலாள் விடியும், முடியும் என்றார்.

சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும்.
கடைசி அமர்வில் வலியுறுத்திய முன்னாள் கல்வி அமைச்சர். வடக்கு மாகாண சபையின் அமைச்சர் ஒருவருக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பது உயரிய சபைக்கு அவமானம். ஆகவே அமைச்சர் என்பதால் தானாகவே அவர் பதவியிலிருந்து விலகிச் செல்ல வேண்டுமென முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது அமைச்சர் குணசீலனின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார் மாவட்டத்தில் மூக்கு கண்ணாடி வழங்கியதில் பாரிய முறைகேடு இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாகாண சபையின் அமைச்சர் ஒருவர் இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதானது சபைக்கும் எங்களுக்கும் அவமானம் மாகாண சபையில் ஒருவர் முறைகேடு அல்லது மோசடி செய்துள்ளார் என்றால் அதனை ஏன் மூடி மறைக்க வேண்டும். அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சபையின் இறுதி நேரத்தில் வருகின்றமை எல்லோரையும் அப்பிடியானவர்களாகவே காட்டுவதாக அமையும். ஆகவே அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் யாராயினும் பகிரங்கப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதே வேளை நாங்கள் அதிகார துஸ்பிரயோகம் செய்தோம் என்று கூறி பதவி நீக்கப்பட்டோம். ஆகையினால். அமைச்சர் என்ற வகையில் தானாகவே பதவியிலிருந்து அவர் விலகிச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதன் போது குறுக்கிட்ட அவைத் தலைவர் அமைச்சராக குணசீலன் பதவியில் இருக்கிறராரா என்ற கேள்வியைக் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபை திருடர்களின் குகை போன்றது.

திருடர்களின் குகை போன்றே வடக்கு மாகாண சபை காட்சியளிப்பதாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது மாகாண அமைச்சர் குணசீலன் மீதான குற்றச்சாட்டு தொடர்பிலான விவாதத்தின் போதே தவநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது நாங்கள் எதிர்க்கட்சியாகவே வந்தோம். அவ்வாறு இரண்டு வருடங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் அதன் பின்னர் ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியொன்று வந்து விட்டது. அவ்வாறு ஒரு காட்சி மாற்றம் ஏற்பட்டு அந்தக் காட்சியே தற்போதும் தொடருகின்றது.

இந்தச் சபையில் உட்கட்சி முரண்பாடுகள் பற்றியே அதிகம் பேசப்படுகின்றன. அதற்கே இங்கு முன்னுரிமையும் கொடுக்கப்படுகின்றது. இவ்வளவு காலமும் அந்த உட்கட்சி விடயங்கள் தொடர்பில் பேசி வந்திருக்கின்ற போதிலும் இறுதி நேரங்களிலும் அந்த விடயங்களே முதன்மைப்படுத்தப்படுகின்றன.

இப்போதும் அதைப் பற்றிப் பேசி எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றீர்கள், இங்கு நடைபெறுகின்ற விடயங்களைப் பார்க்கின்ற போது திருடர்களின் குகை போன்று தான் இச் சபை இருப்பதாக நினைக்கின்றேன். என தெரிவித்தார்.

அதனை அடுத்து , மாகாண சபையில் யார் யார் கொள்ளையடிக்கின்றார்கள் என்பது வெளியே வர வேண்டும். அதில் எல்லோரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதாலேயே நாங்கள் அதனை வெளிப்படுத்தி வருகின்றோம் என ஆளுங்கட்சி உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.

அதே போன்று ஆளுங்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி எங்களை நாங்கள் நியாயப்படுத்த வேண்டுமென்பதால் குற்றவாளிகள் யாராயினும் அதனை வெளிப்படுத்தி வருகின்றோம். குறிப்பாக சபையின் எதிர்க்கட்சியினராகிய நீங்கள் செய்ய வேண்டிதையே நாங்கள் செய்திருக்கின்றோம் என்றார்

தமிழ் தேசியத்தை ஆயுதமாக்க வேண்டாம்.

வடக்கு மாகாண சபையின் ஊழல், முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள்,செயற்திறனின்மை, ஆகியவற்றை மூடி மறைக்க தேசியம் என்ற ஆயுதத்தையே பலரும் கையிலெடுப்பதாக ஆளுங்கட்சி உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது முறைகேடுகள் தொடர்பான விவாதத்தின் போது, ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சி இருப்பதாகவும் உள்கட்சி முரண்பாடுகளையே சபையில் அவர்கள் வெளிப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் குற்றங்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் போதே சயந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையில் ஊழல் மோசடிகள் மற்றும் செயற்திறனின்மை போன்ற விடயங்களை நாங்கள் வெளிப்படுத்தி வருகின்றோம். அதனை நாங்கள் வெளிப்படுத்துகின்ற போது பலத்த எதிர்ப்புக்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன.

ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டியே நாங்கள் அதனைச் வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம். அவ்வாறு நாங்கள் அவற்றை வெளிப்படுத்துகின்ற போது அதனை மறைப்பதற்காக கையிலெடுக்கும் ஆயுதம் தான் தேசியம்.

மேலும் அதனை வெளிப்படுத்துகின்ற போது அவரைப் பழிவாங்க, இவரை பழிவாங்க நாங்கள் செய்தோம் என்றும் எம் மீது பலத்த குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஆனாலும் நாங்கள் அவற்றை வெளிப்படுத்துகின்ற போது தேசியத்தையே கையிலெடுக்கின்றனர். இப்ப குடும்ப வன்முறைகளுக்கும் தேசியமே பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் தமிழ்த் தேசியம் புனிதமானது. ஆனால் போலித் தேசிய வாதிகளின் கைகளில் தமிழ்த் தேசியம் சிக்கி அதனை மக்களே வெறுக்கும் நிலையே ஏற்படுத்தப்படுகின்றதென்று தெரிவித்தார்.

நீதிக்கு அப்பாற்றபட்ட குற்றசாட்டை ஏற்க முடியாது.

வடக்கு மாகாண சபை தொடர்பில் நீதிக்கு அப்பாற்பட்ட குற்றச்சாட்டுக்களை சிலர் சுமத்தி வருகின்றனர். ஆயினும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது சபை அறிவித்தல்களை விடுக்கின்ற போதே அவைத் தலைவர் சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.. மாகாண சபை தொடர்பில் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அத்தகைய குற்றச்சாட்டுக்களை மாகாண சபைக்குள் இருக்கின்றவர்களும் சபைக்கு வெளியே இருக்கின்றவர்களுமே இக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக நியதிச் சட்டங்களை இயற்றுவதற்கு மாகாண சபை தவறியுள்ளதாகவும் அத்தகைய நியதிச்சட்டங்களை சபையில் சமர்ப்பித்துள்ள போதும் அவற்றை நிறைவேற்றாதிருப்பதாகவும் ஒரு சாரர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

அதனாலேயே நியதிச் சட்டங்களை இயற்ற முடியாமல் தொங்கி இருப்பதாகவும் சபையே தடையேற்றபடுத்தி இருப்பதாகவும் வெளியில் பேசப்படுகின்றது. ஆனால் உண்மையில் சபைக்கு கொண்டு வரப்பட்ட நியதிச் சட்டங்களை யாரும் தடை செய்யவில்லை. இங்கு பல நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரம் சபைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் நியதிச் சட்டங்கள் எவையும் தடைப்பட்டதாகவும் இல்லை.

ஆனால் நியதிச் சட்டங்கள் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படாத நிலை இருக்கின்றது. அவ்வாறான நியதிச் சட்டங்களில் இருக்கின்ற தவறுகளையும் நாங்கள் திருத்திக் கொண்டு அதனை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்திருக்கின்றோம்.

மேலும் சபையில் நியதிச் சட்டங்களைச் சமர்ப்பித்தும் நிறைவேற்றப்படாததற்கு முதலமைச்சரா காரணமென்று சிலர் கேட்கின்றனர். ஆனால் நியதிச் சட்டங்களை உருவாக்குவதற்கு முதலமைச்சர் தடையாக இருந்ததில்லை. இது தனி ஒருவரைச் சார்ந்தது இல்லை. இதனை இயற்றுவது அல்லது நிறைவேற்றுவது அனைவரதும் கூட்டுப் பொறுப்பு.

ஆகவே இந்த விடயத்தில் தனிநபர் மீதோ அல்லது சபை மீதோ குற்றச்சாட்டக்களை முன்வைக்க முடியாது. நியதிச் சட்டங்கள் சரியான முறையில் சபைக்கு கொண்டு வரப்படுகின்ற போது அவை நிறைவேற்றப்பட்டே வந்திருக்கின்றன. ஆகையினால் நீதிக் அப்பாற்பட்ட வகையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

நீர் கொள்கை அறிக்கை எங்கே ?

வடக்கு மாகாண சபையினால் செய்யப்பட்ட நீர் ஆய்வு அறிக்கை தொடர்பில் வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கிடையில் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கடும் வாக்கு வாதங்கள் நடைபெற்றன.

வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பாலியாற்றிலிருந்து குடாநாட்டுக்கு குடிநீரைக் கொண்டு வருவதற்கான பிரேரனை மீதான விவாதத்தின் போது மேற்படி வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இப் பிரேரனை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய சிவாஜிலிங்கம் குடாநாட்டில் நீர்ப்பிரச்சனை இருப்பதால் அதனைத் தீர்த்து வைக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் பல வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து நீர் ஆய்வு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருடங்கள் பல கடந்துள்ள போதிலும் அறிக்கை இன்னமும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

அதனை வெளிப்படுத்த வேண்டுமென பல தடவைகள் சபையில் கோரிய போதிலும் இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையே இருக்கின்றது. ஆகவே இனியும் காலதாமதம் இல்லாமல் ஒரு வாரத்திற்குள் அந்த அறிக்கையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரினார்.

இதன் போது எழுந்த முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணத்திற்கு நீர்க் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு விசேட அமர்வும் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் சில இடைவெளிகள் இருந்தால் அது தொடர்பில் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

இந் நிலையில் அமைச்சின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போனது. ஆகவே இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விசேட கலந்துரையாடல்களை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அதன் பின்னராக இதற்குப் பதில் கூற முடியும் என்றார்.

இதன் போது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் முதலமைச்சரின் இந்தக் கூற்று சுகம் வரும் ஆள் தப்பாது என்பது போல இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் வடக்கு மாகாண சபைக்கும் நீருக்கும் தொடர்ந்தும் பிரச்சனை தான் இருக்கின்றது. இங்கு முதலமைச்சர் 9 ஆம் திகதி கூட்டத்தைக் கூட்டப் போவதாகக் கூறுகின்றார்.

அப்படியானால் அதன் பின்னர் அந்த நீர்க்கொள்கை அறிக்கையை சபை முடிவடையவுள்ள 23 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

அவ்வாறு செய்ய முடியாதென்றால் இந்த அறிக்கையை இனி வெளிப்படுத்தாது நீங்களே வைத்திருங்கள் என நாங்கள் கும்பிட்டுக் கேட்கின்றோம் என்றார். இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முதலமைச்சர் அறிக்கைகளை உரியவாறு படிப்பதில்லை. அவர் கூறியதனை அவரே மறக்கின்ற நிலைமை தான் உள்ளது. மாகாண சபையால் நீர்க் கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்ட நிலையில் சபையில் ஒரு விசேட அமர்வை நடாத்திய போது அந்த அறிக்கையை பின்னர் வழங்குவதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் முதலமைச்சர் இவ்வாறு கடிதம் மூலம் அறிவித்தமை சபை பதிவேட்டிலும் இருக்கின்றன. ஆனால் இப்ப இனி ஒரு கூட்டத்தைக் கூட்டப் போவதாக கூறுகின்றார் என்றார்.

இதன் போது எழுந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்க்கட்சித் தலைவருக்கு பல விடயங்கள் விளங்கவில்லை. இது தொடர்பில் அவர் முற்றிலும் தவறான விடயங்களையே சபையில் கூறிக் கொண்டிருக்கின்றார் என்றார். இதனையடுத்து முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையே சிறிது நேரம் வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்றன.

இதன் போது சபைக்கு உறுதிமொழி தந்தால் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் கூறியிருந்தார். இதன் போது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் முதலமைச்சரின் கருத்துக்களை கூற விடுங்கள் அதனைக் குழப்ப வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து கூறினர். இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைரே உணர்ச்சிவசப்படாமல் இருங்கள் என்று கூறி இந்த விடயத்தை முடித்து வைத்தார் அவைத்தலைவர் சிவஞானம்.

அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படுவதாக சீ.வீ.கே. மீது குற்றசாட்டு.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் உள்ளார்ந்த அரசியல் நோக்கத்தோடு செயற்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது மாகாண நீர்க் கொள்கை தொடர்பிலான விவாதத்தின் போது விவசாய அமைச்சர் க.சிவநேசன் மாகாண விவசாய அமைச்சு முன்வைத்த நீர்க் கொள்கைக்கு என்ன நடந்தது என்று அவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் சிவஞானம் மாகாணத்திற்கு எத்தனை அமைச்சர் எத்தனை நீர்க் கொள்கைகளை முன்வைப்பீர்கள் என்று கேட்டிருந்தார். இதன் போது மாகாண விவசாய அமைச்சு மூன்று நீர்க் கொள்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அதற்கு என்ன நடந்தது என்று மீளவும் கேட்டிருந்தார்.

இதன் போது குறுக்கிட்ட கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அமைச்சர்கள் எத்தனை கொள்கையையும் கொண்டு வரலாம். அமைச்சு கொண்டு வந்த கொள்கைக்கு என்ன நடந்தது. ஏன் அதனைக் கொடுக்கவில்லை என்று அவைத் தலைவரிடம் கேள்வியெழுப்பியிருந்தார். மேலும் அவைத் தலைவர் அரசியல் உள்ளார்ந்த நோக்கத்தோடு செயற்படுவதாகவும் இதன் போது குற்றஞ்சாட்டியிருந்தார்.

வடமாகாண சபையில் கையாலாகதவர்கள்.

கையாளாகத ஆட்களினால் தான் மாகாண சபையில் இந்த நிலைமை எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை யார் மீதும் பழியைப் போட்டு விட்டுத் தப்பித்துக் கொள்வதற்கே சகலரும் முயலுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசத்தினால் மேற்கொள்ளப்பட்ட சீமெந்து விற்பனை தொடர்பில் பொது மக்கள் முறைப்பாட்டுக் குழுவின் சிபாரிசு ஒன்றை அவைத் தலைவர் சிவஞானம் சபையில் முன்வைத்தார்.

இந்த விடயம் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையிலையே பசுபதிப்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுச் சங்க ஊழல் முறைகேடுகள் தொடர்பாக இங்கு பல தடவைகள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றே கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

மேலும் இங்குள்ள பல பிரச்சனைகளுக்கு யாரிடமும் குற்றத்தைச் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்வதற்கே பார்க்கின்றனர். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. கையாளாகாதவர்களினால் தான் சபைக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.