இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலை – கூட்டமைப்பினதும், வெளி அழுத்தமும் போதாது…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுக்கும் அழுத்தம் காணாது. அதேபோன்று வெளியில் நடக்கும் போராட்டங்கள் ஊடான அழுத்தங்களும் காணாது என புளெட் அமைப்பின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கூட்டம் இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

“இந்த அரசாங்கம் எதுவும் விரைந்து செய்யாது எனவே உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு அரசியல் கைதிகளை நேரில் சந்தித்த போது கோரியிருந்தேன். அதற்கு அவர்கள் வாக்குறுதி தந்தால் போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்கள்.

அவர்களிடம் நான் என்ன வாக்குறுதியை வழங்க முடியும். அப்போது நான் அவர்களுக்கு சொல்ல முடிந்தது நான் பிரதமருடன் பேசி ஒரு முடிவை கூறுகிறேன் என அதனை மாத்திரமே என்னால் செய்ய முடியும்.

அப்போதே அவர்களிடம் கூறினேன். பிரதமரை நான் சந்தித்து இது தொடர்பில் பேசும் போது நிச்சயமாக அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும், அல்லது அவருடன் பேச வேண்டும் என கூறுவார் என.

அதேபோன்றே நான் பிரதமருடன் கதைச்ச போது அவர் என்னிடம் கூறினார். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசியல் கைதிகளின் நிலைமை மோசமடைந்து வருகின்றது. உடனடியாக அவர்களின் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என கோரினேன். அப்போதும் பிரதமர் சட்டமா அதிபருடன் கதைக்காமல் எதுவும் சொல்ல முடியாது என்றே கூறினார். ஆனால் இதுவரை எந்த முடிவும் கிடைக்க வில்லை.

அதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை அப்படியே விட முடியாது. சிவில் சமூகம் அவர்களின் போராட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தை முன்னெடுப்போம். அவர்களின் போராட்டத்தை முடிவுறுத்துவோம்.

அடுத்த மாதம் நாடாளுமன்றில் பாதீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதன் போது பாதீட்டுக்கு வாக்களிக்கும் போது அரசியல் கைதிகளின் விடயத்தை பேரம் பேசலாம். அதற்கான அழுத்தத்தை நாம் வழங்கலாம்.

அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு வழங்கும் அழுத்தம் காணாது. அதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வெளியில் நடக்கும் போராட்டங்களின் அழுத்தமும் காணாது உள்ளது. அவற்றுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிப்போம்” என தெரிவித்தார்.

கூட்டமைப்பு மாத்திரமல்ல அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் பாதீட்டை ஆயுதமாக பயன்படுத்துங்கள். – சுரேஷ்.

அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவிக்கையில் ,

“இலங்கையில். அரசியல் கைதிகள் இல்ல பயங்கரவாதிகள் என சொல்கின்றார்கள் அவர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக கொள்ளைக்கு போகவில்லை அரசியல் கொள்கை நோக்கத்திற்காக போராட போனாவர்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சட்டமா அதிபருடன் பேசுவதாக கூறி அதனை மீண்டும் சட்டப்பிரச்சனையாக ஆக்க முயல்கின்றார். எனவே முதலில் கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வர வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது சட்டபிரச்சனை இல்லை அதொரு அரசியல் பிரச்சனை என.

அடுத்த மாதம் வரவுள்ள பாதீட்டை வைத்து தென்னிலங்கையில ஆட்சி கவிழ்ப்புக்கு மஹிந்த தலைமையில் திட்டம் தீட்டப்படுகின்றது. அந்நிலையில் நிச்சயமாக தமிழ் பிரதிநிதிகளின் வாக்குகள் செல்வாக்கு செலுத்தும். இந்த நிலையில் பாதீட்டை எதிர்த்து வாக்களிக்க போறோம் என அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தலாம்.

அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் செய்ய வேண்டும் என இல்லை. அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் செய்யலாம். அரசியல் கைதிகளின் விடுதலையை பொறுத்தவரைக்கும் ஐக்கிய தேசிய கட்சிய சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம்.

அவர்கள் மாத்திரமின்றி வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மக்கள் மயப்படுத்தப்பட்ட பாரிய சக்தியாக நாம் உருவாக வேண்டும். – அருட்தந்தை மா. சக்திவேல்.

அதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவிக்கையில் ,

“எல்லா பிரச்சனைகளில் இருந்தும் நாங்கள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம்.அந்நிலையிலே நாம் தொடர்ந்து அரசியல். கைதிளின் விடுதலைக்கு போராட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா , அங்கஜன் இராமநாதன், மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரையும் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகாது விடின், பாதீட்டை எதிர்த்து வாக்களிக்க வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அடுத்த மாதம் நாடாளுமன்றில் பாதீடு தாக்கல் செய்யப்படும் போது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் மயப்படுத்தப்பட்ட பாரிய சக்தியாக நாங்கள் எழுந்து நிற்க வேண்டும்.

அதற்காக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கிராம மட்டங்களில் இருந்து விழிப்புணர்வுகளை ஆரம்பிக்க வேண்டும். அதனூடாக பாரிய மக்கள் சக்தியை நாம் உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார்.

சிறையில் உயிரும் உணவுமே எமது ஆயுதம். – கோமகன்.

அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு விசேட நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட கோமகன் கருத்து தெரிவிக்கையில் ,

“அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் அரசியல் கைதிகளிடம் இருந்தே போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. சிறைசாலையில் தடுத்து வைக்கபட்டு இருந்த கால பகுதியில் எம்மை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்தார்.

அப்போது கடவுளை நான் நம்புறேன். என்னை நம்புங்கள் உங்கள் விடுதலையை சாத்தியமாக்குவோம் என வாக்குறுதி தந்தார். அப்போது நாம் அப்படி எமது விடுதலை சாத்தியமாக விடின் என்ன செய்வீர்கள் என கேட்டோம். அதற்கு அவர் நாம் வீதிக்கு வருவோம். உங்களுக்காக போராடுவோம் என தெரிவித்தார். ஆனா இன்னமும் விடுதலைகள் சாத்தியம் ஆகவில்லை. அவர்கள் வீதிக்கு வந்து போராடவும் இல்லை. அழுத்தம் கொடுக்கவில்லை. சிறையில் எங்களுடைய ஆயுதம் உயிர் மற்றும் உணவு தான் அவற்றை வைத்தே நாம் போராட முடியும்.

போராட்டத்தின் ஊடாகவே நான் விடுதலை அடைந்தேன். இப்ப அவர்களின் போராட்டத்தை எப்படி நிறுத்த போகின்றோம். போராட்டத்தை நிறுத்தி போட்டு என்ன செய்ய போறோம்? போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்த போகின்றோம் எனும் கேள்வி எம் முன் உள்ளது. அது தொடர்பில் நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் பிரச்சனையை சட்ட பிரச்சனையாக பார்க்காதீர்கள். – நிலாந்தன்.

அதேவேளை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்து தெரிவிக்கையில் ,
“அரசியல் கைதிகளின் விடுதலையை சட்டப்பிரச்சனையாக கையாள வேண்டாம். அரசியல் பிரச்சனையாக கையாள வேண்டும். சட்டப்பிரச்சனையாக பார்த்தால் நாம் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் கதைக்க வேண்டும்.

பாதீட்டை கையில் எடுத்து போராட முடியும். அதனை நாம் முன்னெடுப்போம். சிறையில் உள்ளவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதானால் அவர்கள் உடல் நலம் மோசமடைகின்றது.

அவர்கள் பின்னர் விடுதலை செய்யபப்ட்டாலும் நோயாளியாக சமூகத்தில் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே அவர்களின் போராட்டத்தை வெளியில் உள்ளவர்கள் பொறுப்பெடுத்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers