இலங்கை பிரதான செய்திகள்

ஒற்றுமை பாடசாலை” திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி

மூவின மாணவர்களையும் சம அளவில் சேர்த்து “ஒற்றுமை பாடசாலை” எனும் திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக இன நல்லிணக்கம் மேம்படுத்தப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உடுகொட அரபா மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா இன்று (23) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் மேலும் கூறியதாவது;

நாட்டின் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களை சமஅளவில் சேர்த்துக்கொண்டு இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் “ஒற்றுமை பாடசாலை” திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன ரீதியான பாடசாலைகளுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுன்ற நிலையில், இத்திட்டம் சகல தரப்பினருக்கும் வெற்றியளிக்குமென எதிர்பார்க்கின்றோம்.

மெளலவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் பிரதமர் மீலாத்தின விழாவில் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. இதுகுறித்து நாங்கள் அண்மையிலும் பிரதமருக்கு ஞாபகப்படுத்தினோம். இதனை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து, குறைந்தது 600 பேருக்காவது இந்த வருட இறுதிக்குள் மெளலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கூறியிருக்கின்றோம்.

இரண்டாம்தர கல்வி கற்கின்ற மாணவர்களுக்கும், மூன்றாம்தர கல்விக்கு நுழையவுள்ள மாணவர்களுக்கும் நாட்டிலுள்ள கற்கைநெறிகள் தொடர்பில் போதிய தெளிவில்லாமல் இருக்கிறது. கற்கைநெறிக்கு ஏற்றவாறு பாடங்களை தெரிவுசெய்வதிலும் அவர்களுக்கு போதிய வழிகாட்டால் இல்லாமல் இருக்கின்றன. இதுகுறித்து அவர்களுக்கு பூரண தெளிவூட்டல் வழங்கப்பட வேண்டும்.

பழக்கதோசத்திலும் நண்பர்களைப் பார்த்தும் உயர்தரப் பரீட்சையில் எல்லோரும் ஒரே விதமான பாடங்களையே தெரிவுசெய்கின்றனர். பின்னர் பல்கலைக்கழக நுழைவு என்று வருகின்றபோது, போதிய இஸட்–புள்ளி இல்லாமல் தடுமாறுகின்றனர். எவ்வாறு இஸட்–புள்ளி இடப்படுகிறது என்பது குறித்து இவர்களுக்கு போதிய அறிவில்லாமல் இருக்கின்றது.

மேற்படிக்கு எப்படியான பாடங்களை தெரிவுசெய்வது, தொழில்வாய்ப்புக்கு ஏற்ற மேற்படிப்பு எது என்பது தொடர்பில் மாணவர்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்கவுள்ளோம். மகாபொல நிதியத்தின் மூலம் வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக இந்த தொழில் வழிகாட்டல் திட்டத்தை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.

பாடசாலை அபிவிருத்திக்கான நிதியை அரசாங்கம் மூலம் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் வருகின்றபோது, தனவந்தர்கள் முன்வந்து கட்டிடங்களை அமைத்துக்கொடுப்பது என்பது வரவேற்கத்தக்க விடயம். அந்தவகையில் குவைத் நாட்டு தனவந்தர் அஹமட் சாலி அல்கந்தரி மாணவர்களுக்கான வகுப்பறைக் கட்டிடத்தை அமைத்துக்கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

அத்துடன் சேர்த்து, உடுகொட அரபா மகா வித்தியாலயத்துக்கு சிறுவர் பூங்கா ஒன்றையும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை எனது அமைச்சின் மூலம் மாகாணசபை உறுப்பினர் ஷாபி ரஹீம் ஊடாக நிர்மாணித்து தருவேன் என்பதையும் இங்கு கூறிக்கொள்கிறேன் என்றார்.

பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். ஹலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி, மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், அல்ஹிமா சேவை நிறுவனத்தின் செயலாளர் நூறுல்லாஹ், பாடசாலை நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.