இலங்கை பிரதான செய்திகள்

நேவி சம்பத்தின் தலைமறைவுக்கு, ரவீந்திர விஜேகுணரத்ன உதவினார்…


கொட்டாஞ்சேனை மற்றும் சனநெரிசல்மிக்க பகுதிகளில், 11 இளைஞர்களைக் கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரான நேவி சம்பத் என அழைக்கப்படும் லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி தலைமறைவாகியமைக்கு அப்போதைய கடற்படைத்தளபதியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியமைக்கான ஆதாரமுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (3.04.19) நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

முன்னாள் லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சியின் மனைவி உள்ளிட்டவர்களிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக, குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கடற்படை தலைமையகத்திற்குள் முன்னாள் லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி தலைமறைவாகியிருந்ததாகவும் அந்த சந்தர்ப்பத்தில், அவருக்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி நாட்டிலிருந்து தப்பிச்செல்வதற்கு விசாவைப் பெற்றுக்கொள்வதற்காக, கடற்படை நிதியத்திலிருந்து 5 இலட்சம் ரூபா வழங்கியமை மற்றும் அவர் தலைமறைவாக உதவிபுரிந்த வர்த்தகர் லக்சிறி அமரசிங்கவினால், 5000 அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வங்கி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்படை முன்னாள் தளபதி, பாதுகாப்பு படைகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீதான விசாரணைகளும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.