Home இலங்கை “இவ் உலகத்தில் சிறுவர் ஒருவரைப் பராமரிப்பதைவிட மிக முக்கியமானது வேறொன்றும் இல்லை”

“இவ் உலகத்தில் சிறுவர் ஒருவரைப் பராமரிப்பதைவிட மிக முக்கியமானது வேறொன்றும் இல்லை”

by admin

யாழ்ப்பாண எஸ்ஓஎஸ் சிறுவர் கழகத்தின்…. சர்வதேச எஸ்ஓஎஸ் தினம் – ஆனி 23
International SOS Day 23rdJune

தனி ஒரு மனிதனாலும் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற மகத்தான தத்துவத்திற்கிணங்க, பல சவால்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி தனி ஒரு மனிதரால் ஆரம்பிக்கப்படும் தற்துணிவான முயற்சிகள் நீண்டகாலம் நீடித்து நிலைப்பதென்பது கேள்விக்குறியான விடயமாகும். அவ்வாறு நிலைத்தாலும், கால ஓட்டத்தில் அக்குறித்த முயற்சியை ஆரம்பித்தவர் இவ்வுலகை விட்டு நீர்ந்ததன் பின்னர், அவரது மகத்தான முயற்சியை தொடர்ச்சியாக தொட்டுச்செல்பவர்களின் எண்ணிக்கை மிக அரிதாக இருப்பதையும், காலப்போக்கில் அம்முயற்சியின் தேடல்கள் அருகி இல்லாது அழிவடைந்து போவதையும் நாம் வரலாறுகள் ஊடாக கண்முன்னே கண்டுகொண்டுள்ளோம். இவற்றை எல்லாம் தாண்டி தனது சுய உழைப்பால் உலகிலுள்ள அநாதரவற்ற சிறார்களுக்கு தந்தையாக விளங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் கலாநிதி ஹேர்மன் மைனர் அவர்களின் ஐனன தினமாகிய யூன் 23 – சர்வதேச எஸ்ஓஎஸ் தினத்தில்(International SOS Day)எமது தந்தையை நினைவு படுத்துவதுடன் அவரது பணி அழியாது தொடர எமது தந்தையின் மகத்தான பணிக்கு ஆதரவு வழங்கியுதவுமாறு யாழ்ப்பாண எஸ்ஓஎஸ் சிறுவர் கழகத்தினராகிய நாம் வேண்டிக்கொள்கின்றோம்.

பேராசிரியர் கலாநிதி ஹேர்மன் மைனர் 1919ம் ஆண்டு யூன் 23ம் திகதி ஒஸ்ரியாவில் ஏழ்மையான ஓர் விவசாயக்குடும்பத்தில் பிறந்தார். இவருடைய புத்திசாலித்தனம் இவரை ஒஸ்ரியாவின் இலக்கணப்பள்ளியில் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசிலினையும் பெறச்செய்தது. இவர் சிறுபராயத்திலேயே தனது தாய், தந்தையை இழந்தமையால் அவரது மூத்த சகோதரியான எல்சாவினாலேயே வளர்த்தெடுக்கப்பட்டார். தனது இளமைக்காலக் கல்வியை சகோதரியின் உதவியுடன் முடித்துக்கொண்ட ஹேர்மன் மைனர் ரஷ;யாவின் ஓர் இராணுவ வீரனாக இணைந்து கொண்டதுடன் மருத்துவ பட்டப்படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தார். இராணுவப்பணியில்

ஈடுபட்டுக்கொண்டிருந்த ஹேர்மன் மைனர் 02ம் உலக மகாயுத்தத்தில் பங்குபற்றினார். ரஷ;யாவின் போர் வீரனாக போரின் பயங்கரங்களை அனுபவித்தார். யுத்தம் மிக மோசமாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அப்பாவித்தனமாக மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பதையும் சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டுக்கொண்டிருப்பதையும் கண்ணுற்றார். கண்முன்னே நடைபெற்றுக்கொண்டிருந்த கோர யுத்தத்தின் பேரழிவைக்கண்டு மனமிரங்கிய ஹேர்மன் மைனர் உடனடியாக தன்னால் இயன்ற முதலுதவிகளை மேற்கொண்டார். அவர் 2ம் உலகப்போர் முடிவில் குழந்தை நலப்பணியாளராக அநாதரவாக்கப்பட்ட, பாதுகாப்பற்ற மற்றும் வீடற்ற சிறார்களின் தனிமை, துன்பம் போன்றவற்றை கண்டு நெகிழ்வுற்றார். சிறார்கள் தமது சொந்த வீடுகள் இல்லாது வளர்வது ஒருபோதும் பயனுள்ளதாய் இருக்க முடியாதென நம்பினார். எனவே எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமத்திற்கான தனது கருத்தைச் செயற்படுத்தினார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்திருந்த ஹேர்மன் மைனர் மனதில் இச்சிறார்களும் தன்னைப்போன்று இன்னலுறக்கூடாது எனக்கருதி, கைவிடப்பட்ட சிறார்களுக்கு உதவி செய்ய தனது தனிப்பட்ட கவனம் முழுவதையும் செலுத்தினார்.

தனது சொந்த முயற்சியில் இச்சிறார்களை தொடர்ந்தும் பராமரிக்க எண்ணினார். இச்சிறார்கள் ஓர் பாதுகாப்பான வீட்டில் சகோதர, சகோதரிகளுடன் தாய் என்ற அந்தஸ்தில் தனது சகோதரி எல்சாவை பிள்ளைகளுக்கு அன்னையாக்கி தன் கைவசமிருந்த வெறும் 40 அமெரிக்க டொலர் பணத்துடன் 1949ம் ஆண்டு ஒஸ்ரியாவின் இம்ஸ்ட் எனும் இடத்தில் தனது முதலாவது எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமத்தை ஸ்தாபித்தார். சிறார்களின் பராமரிப்புத் தேவைகருதி தனது மருத்துவப்பட்டப்படிப்பையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு சிறாருக்கும் கட்டாயம் அன்பான தாய், சகோதரர்கள், வீடு, சமூகம் என்ற நான்கு அடிப்படை எண்ணக்கருக்களை நிறைவு செய்ய வேண்டும் என்ற நீண்ட கால கவனப்பராமரிப்புக்கான ஒரு குடும்ப அணுகுமுறையை முன்னோடியாகக்கொண்ட தனது ஆரம்ப கட்ட செயற்திட்டத்திற்கு அத்திவாரமிட்டதுடன் முதலாவது எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமத்தின் இயக்குனராகவும் பணியாற்றினார். ஒஸ்ரியாவின் வௌ;வேறு இடங்களில் அநாதரவாக்கப்பட்ட, வீடற்ற சிறார்களுக்கு மேலும் எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமங்களை நிர்மாணிப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமங்களை அமைப்பதற்கு உதவியதுடன் தனது சேவையை விஸ்தரிக்க ஓர் குடையின்கீழ் 1960ம் ஆண்டு சர்வதேச எஸ்ஓஎஸ் அமைப்பை ஸ்தாபித்து, அதன் முதலாவது தலைவராகவும் விளங்கினார். இம்மாபெரும் செயற்பாட்டிற்குத் தேவையான நிதியை ‘பசயin ழக சiஉந’ எனும் பிரச்சாரத்திட்டத்தின் மூலம் திரட்டினார். அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது 1963ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளிலும் எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமங்களை ஸ்தாபித்தார். 1985ம் ஆண்டு பேராசிரியர் கலாநிதி ஹேர்மன் மைனர் அவர்களால் 85 நாடுகளில் அமைக்கப்பட்ட 233 எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமங்கள் மூலம் அநாதரவான மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு உதவியமைக்காக அவரது சேவையை அங்கீகரித்து அவருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டது. அத்துடன் நோபல் பரிசுக்கும் பல தடவைகள் பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும், வீடற்ற குழந்தைகளுக்கு நிரந்தர வீடொன்றை வழங்க முடியும் என்ற அவரது இலக்கிற்கு உதவிய இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டதற்காக, ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி செலுத்தவும் அவர் தவறவில்லை. 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி பல்லாயிரக்கணக்கான சிறார்களின் தந்தையாய் இவ்வுலகைவிட்டு நீர்ந்தார். இவரது உடல் முதலாவது எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமமான இம்ஸ்டில் விதைக்கப்பட்டது. அத்துடன் பேராசிரியர் கலாநிதி ஹேர்மன் மைனரின் மறைவுக்குப்பின்னர் அவரின் கீழ் பராமரிக்கப்பட்ட சிறுவன் ஹெல்மட் குட்டீன் அவர்களே சர்வதேச எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமங்களின் தலைவராக இருந்து, தனது வாழ்நாள் முழுவதனையும் எந்தவித சுகபோகங்களையும் அனுபவிக்காது தனது தந்தையின் பணி செய்து சிறுவர்களுக்காக உழைத்து 2017ம் ஆண்டு ஓய்வு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தனி ஒரு மனிதனால் ஆரம்பிக்கப்பட்ட எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமமானது எங்கெல்லாம் சிறார்கள் பாதிக்கப்படுகின்றார்கலோ அங்கெல்லாம் இன, மத, மொழி பேதமின்றி உலகமெல்லாம் வியாபித்துள்ளது. 47 ஆபிரிக்க நாடுகளிலும் 22 அமெரிக்க நாடுகளிலும் 35 ஐரோப்பிய நாடுகளிலும் 31 ஆசிய நாடுகளிலுமாக மொத்தம் 135 நாடுகளில் தனது சேவையை வழங்கிக்கொண்டிருக்கின்றது. 135 நாடுகளில் எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமங்கள், எஸ்ஓஎஸ் இளைஞர் வசதிகள் (விடுதிகள); எஸ்ஓஎஸ் சிறுவர் பாடசாலைகள், எஸ்ஓஎஸ் ஹேர்மன் மைனர் பாடசாலைகள், எஸ்ஓஎஸ் தொழிற்பயிற்சி நிலையங்கள், எஸ்ஓஎஸ் மருத்துவ நிலையங்கள், எஸ்ஓஎஸ் சமூக நிலையங்கள் என்பவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பயனடைந்து வருகின்றனர். நெருக்கடி மற்றும் பேரழிவு சூழ்நிலைகளில் அவசர நிவாரணத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவிகளை வழங்கிவருகின்றது. அவசர மருத்துவ நிலையம் ஒரு நீண்டகால நிவாரணத்திட்டத்தின் எடுத்துக்காட்டாகும். அதுமட்டுமின்றி வறுமை காரணமாக சிறுவர்கள் தமது பெற்றோரை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அதிவறுமைகூடிய பிரதேசங்களை இனங்கண்டு, சிறுவர்களை அவர்களின் சொந்த குடும்பங்களிலேயே பராமரிப்பதற்கு ஏதுவாக அந்தந்த பிரதேசங்களிலேயே மதிய உணவுடன் கூடிய மாலைநேரக்கல்வி, கல்விக்கான உபகரணங்கள், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழிவகைகள் மற்றும் பல்வேறு வகைசார் விழிப்புணர்வு செயற்றிட்டங்களை நீண்டகால அடிப்படையில் (சுமார் 05 வருடங்கள்) அனைத்தையும் இலவசமாக வழங்கும் குடும்ப வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இலங்கையில்…...

1981ம் ஆண்டு இலங்கையில் முதலாவது எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமமானது பிலியந்தலையில் ஆரம்பிகககப்பட்டது. தொடர்ந்து நுவரெலியா, காலி, அனுராதபுரம், மொனராகலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. 2009இல் இடம்பெற்ற யுத்தத்தில் பெற்றோரை இழந்த, பெற்றோரால் கைவிடப்பட்ட, கைவிடப்படும் ஆபத்தான நிலையிலிருந்த 234 சிறுவர்களை எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமமானது உடனடியாக வவுனியா நீதவான் நீதிமன்ற கட்டளையின்கீழ் பொறுப்பெடுத்து வவுனியா செட்டிகுளம் மெனிக் பாமில் தற்காலிக பராமரிப்பு செயற்றிட்டமாக இயங்கி வந்தபோதிலும், தொடர்ச்சியான தேடுதலில் பலனாக பெற்றோர், உறவினர்கள் உள்ள சிறார்கள் வவுனியா நீதவான் நீதிமன்ற கட்டளையின்கீழ் ஒப்படைக்கப்பட்டு, ஒப்படைக்க முடியாதிருந்த 80 சிறுவர்களுடன் தற்காலிக பராமரிப்பு செயற்றிட்டமாயிருந்த இச்செயற்றிட்டமானது நிரந்தர பராமரிப்பு செயற்றிட்டமாக வேண்டிய தேவை கருதி 2011இல் செட்டிகுளத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணமானது.

யாழ்ப்பாணத்தில்………

தற்பொழுது நல்லூர் நாயன்மார்கட்டில் இயங்கிவரும் யாழ்ப்பாண எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமமானது 12 வீடுகளிலும் ஒவ்வொரு வீட்டிலும் 10 சிறார்களுக்கு ஓர் அன்னை என்ற அடிப்படையில், தற்பொழுது 94 சிறுவர்கள் ‘குடும்ப சூழலில்’ பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். அத்துடன் 35 இளைஞர்களுடன் இளைஞர் விடுதியினையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நாட்டிலுள்ள பிரசித்திபெற்ற பல்கலைக்கழகங்களில் இளைஞர், யுவதிகள் கல்விகற்று வருவதுடன் பல்வேறு தொழில் வாய்ப்புக்களைப் பெற்று தமது எதிர்கால வாழ்வை தாமே வழிநடத்தக்கூடிய நிலையை எட்டியுள்ளனர். எஸ்ஓஎஸ் பாலர் பாடசாலை மூலம் சிறுவர் கிராம சிறார்களும் சிறுவர் கிராமத்தை அண்மித்துள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட சிறார்களும் பயன்பெற்று வருகின்றனர். அதுமட்டுமன்றி, யாழ்ப்பாண எஸ்ஓஎஸ் தொழிற்பயிற்சி நிலையத்தின் மூலம் (தகவல் தொடர்பாடலும் தொழில் நுட்பமும், ஆங்கில கற்கைநெறி, குளிரூட்டலும் வளிச்சீராக்கலும் மற்றும் அழகுக்கலைஃசிகை அலங்கரிப்பு) போன்ற தொழில் வழிகாட்டல் கற்கை நெறிகளை சிறுவர் கிராம இளைஞர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இவற்றைவிட யாழ் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட குருநகர், திருநகர் பிரதேசங்களில் குடும்ப வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 101 குடும்பங்களிலிருந்து 304 பிள்ளைகள் பயனடைந்து வருகின்றனர்.

உலகளாவிய ரீதியில் எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமங்கள் இயங்கிக்கொண்டிருந்தபோதிலும், யுத்தம் காரணமாக முற்றுமுழுதாக தமிழ்ப்பிள்ளைகள் பராமரிக்கப்பட்டுவரும் ஒரேயொரு எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமமாக எமது நாட்டில் வடக்கின் யாழ்ப்பாண எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமம் விளங்குகின்றது. யாழ்ப்பாண எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமம் தொடர்பாக எமது மக்கள் மத்தியில் போதிய கருத்துக்கள் சென்றடையாமையால் பெரும்பாலான வட பகுதி மக்களின் அனுசரனையை நாம் பெற்றுக்கொள்வதிலும் எமது சிறுவர் கிராமம் தொடர்பில் மக்கள் அறியாமல் இருப்பதும் வேதனையான விடயமே. எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமங்களின் ஸ்தாபகரான எமது தந்தை பேராசிரியர் கலாநிதி ஹேர்மன் மைனர் அவர்களின் ஐனன தினமாகிய யூன் 23 – சர்வதேச எஸ்ஓஎஸ் தினத்தில் (ஐவெநசயெவழையெட ளுழுளு னுயல) எமது சிறுவர் கிராமத்தைப்பற்றி அறிந்திராதவர்களுக்குத் தெரியப்படுத்துவதிலும் எமக்குப் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கும் நலன்விரும்பிகளுக்கும் நன்றிகளைப் பகிர்வதிலும் யாழ்ப்பாண எஸ்ஓஎஸ் சிறுவர் கழகத்தினராகிய நாம் மன மகிழ்வடைகின்றோம். #InternationalSOS Day #எஸ்ஓஎஸ்சிறுவர்கிராமம் #சர்வதேசஎஸ்ஓஎஸ்தினம் #யாழ்ப்பாணஎஸ்ஓஎஸ்சிறுவர்கழகம்

‘எனது கருத்தின்படி,
இவ் உலகத்தில் சிறுவர் ஒருவரைப் பராமரிப்பதைவிட மிக முக்கியமானது வேறொன்றும் இல்லை.’

– பேராசிரியர் கலாநிதி ஹேர்மன் மைனர் –

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More