இலங்கை பிரதான செய்திகள்

ஹெரோயின் கடத்தல் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை

 

ஹெரோயினை இலங்கைக்குக் கடத்தினர் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

“சட்டக் குறைகள், நடவடிக்கை முறைகளில் வழுக்கள் மற்றும் வழக்குத் தொடருநர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் நம்பகத்தன்மையில் குறைவு, விசாரணை நடவடிக்கைகளில் புரியப்பட்ட தப்புத்தாளங்கள் என்பவற்றின் அடிப்படையில் எதிரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், வழக்குத் தொடருநர் தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி எண்பிக்கப்படவில்லை என மன்று வெளிப்படுத்தி, ஒவ்வொரு எதிரிகளையும் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவர்கள் எனக் கண்டு நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகின்றனர்´´ என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதைப் பொருளான ஹெரோயின் 8 கிலோ 128 கிராம் 33 மில்லிக் கிராம் மீட்கப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.

தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த சேகர் அருள், துள்ளுக்குட்டி பொன்னுசாமி, சுப்பிரமணியம் தமிழ்மணி, சுப்பிரமணியம் கஜேந்திரன், அழகுராஜா ஜெயசீலன், சுப்பிரமணியம் பாக்கியராஜ் ஆகிய 6 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இந்திய மீனவர்கள் 6 பேரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அன்றைய தினத்திலிருந்து சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

இந்த நிலையில் இந்திய மீனவர்கள் 6 பேருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் கடந்த மே 31 ஆம் திகதி 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை, இறக்குமதி செய்தமை மற்றும் வியாபாரம் செய்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டன.

வழக்கு தொடர் விளக்கத்தின் அடிப்படையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

வழக்குத் தொடுனர் தரப்பில் கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பகுப்பாய்வுத் திணைக்களம், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் என 15 பேர் சாட்சியமளித்தனர். எதிரிகள் 6 பேரும் கூண்டுச் சாட்சியமளித்தனர்.

வழக்குத் தொடுனர் தரப்பு, எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் நிறைவுற்ற நிலையில் வழக்கு தீர்ப்புக்காக இன்று நியமிக்கப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று வழக்குத் தீர்ப்புக்காக அழைக்கப்பட்டது.

அதன் போதே ஆறு மீனவர்களும் குற்றமற்றவர்கள் என நீதிமன்று கண்டு அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தினார்.

எதிரிகள் 6 பேர் சார்பிலும் மூத்த சட்டத்தரணிகள் என். ஸ்ரீகாந்தா, வி. திருக்குமரன், சட்டத்தரணிகள் வீ. கௌதமன், சி. ரிஷிகேசன் ஆகியோர் முன்னிலையாகினர்.  என்பது குறிப்பிடத்தக்கது.   #ஹெரோயின் #கடத்தல்  #இந்தியமீனவர்கள்  #விடுதலை

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link