இலங்கை கட்டுரைகள்

பலாலி தனிமைப்படுத்தல் முகாம் தொடர்பில் எழும் சந்தேகங்கள்? மயூரப்பிரியன்…

பலாலியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் நோய் பாதுகாப்பு என்பன சீரான முறையில் பேணப்படுகின்றனவா ? கண்காணிக்கப்படுகின்றனவா எனும் சந்தேகங்களே தோற்றம் பெற்றுள்ளன.

கொரோனோ தொற்றுக்கு காரணமாக இருந்தவர் என கூறப்படும் மத போதகர் கடந்த மாதம் 15ஆம் திகதி யாழ் அரியாலை பகுதியில் உள்ள பிலதேனியா தேவாலயத்தில் ஆராதனை நடாத்தி இருந்தார். அதன் பின்னர் அவர் இலங்கையில் இருந்து சுவிஸ் சென்ற பின்னர் மத போதகருக்கு கொரோனோ இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து யாழில் மத போதகருடன் நெருங்கி பழகினவர்கள் மற்றும் அன்றைய தினம் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் தகவல் திரட்டி அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதில் மத போதகருடன் கட்டட ஒப்பந்தம் தொடர்பில் அரை மணிநேரம் உரையாடிய கட்டட ஒப்பந்தகாரரான தாவடி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கடந்த 22ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.

தாவடியில் நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டமையை தொடர்ந்து தாவடி ஜே 193 கிராம சேவையாளர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டு , இராணுவ பாதுகாப்பு போடப்பட்டு , கிராமத்தினுள் யாரும் செல்லவோ , அல்லது வெளியேறவோ தடை விதிக்கப்பட்டு இருந்தது. குறித்த கிராம சேவையாளர் பிரிவு கடந்த 21 நாட்கள் முடக்கப்பட்டு இருந்த நிலையில் , 13ஆம் திகதி கிராம சேவையாளர் பிரிவு விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் தாவடியில் நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டதனை தொடர்ந்து , மத போதகருடன் நெருங்கி பழகினவர்கள் மற்றம் தாவடியை சேர்ந்த நோயாளியுடன் நெருங்கி பழகினவர்களை 22 ஆம் திகதி முதல் பலாலியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதில் முதற்கட்டமாக பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் மத போதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேரையும்,  பத்து , பத்து பேராக கடந்த 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் பரிசோதிக்கப்பட்டனர்.

அவர்களில் முதல் நாள்  பரிசோதிக்கப்பட்ட 10 பேரில் மூவருக்கும் மறுநாள் பரிசோதிக்கப்பட்டவர்களில் பத்து பேரில் மூவருக்குமாக ஆறு பேருக்கு தொற்று உறுதியானது. ஏனைய 14 பேருக்கும் தொற்று உறுதியாகவில்லை.

தாவடியை சேர்ந்த நோயாளியுடன் நெருங்கி பழகினவர்களில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களுக்கு 3ஆம் திகதி  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

அந்நிலையில் மத போதகருடன் நெருங்கி பழகினவர்கள் என பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் கடந்த 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் பரிசோதிக்கப்பட்டு தொற்று இல்லை என கண்டறியப்பட்ட 14 பேருக்கும் சுமார் 12 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் 14 ஆம் திகதி மீண்டும் பரிசோதிக்கப்பட்டது.

அதில் 8 பேருக்கு தொற்று என கண்டறியப்பட்டுள்ளது. 06 பேருக்கு தொற்று கண்டறியப்படவில்லை. தொற்று இல்லை என கண்டறியப்பட்டவர்களை மீண்டும் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழில் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகிய 15 பேரில் தாவடி நோயாளியை தவிர மிகுதி 14 பேரும் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். மத போதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தனிமைப்படுத்தப்பட்ட 20 பேரில் இதுவரையில் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த 22ஆம் திகதி முதல் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தவர்களுக்கு ஆரம்ப கொரோனோ பரிசோதனை எதுவும் நடத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்களா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் காட்டாமல் இருந்ததா ? அல்லது அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருந்தார்களா ? எனும் வலுவான சந்தேகம் எழுகின்றன.

அவ்வாறு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் , ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளில் கண்டறியாமல் சுமார் 14 நாட்களுக்கு பின்னர் (22ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டனர்) 20 பேரில் ஆறு பேருக்கு தொற்று உள்ளது உறுதி ஆகியுள்ளது. (மார்ச் 15ஆம் திகதி போதகருடன் பழகியவர்கள்,  ஏப்பிரல் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் பரிசோதிக்கப்பட்டவர்கள். )

சாதாரணமாக கொரோனோவின் ஆரம்ப அறிகுறிகள் 3 – 4 நாட்களில் வெளிப்படும் எனவும் 7 நாட்களில் நோய் அறிகுறிகள் வெளி தெரிய ஆரம்பித்து விடும் எனவும் அதன் பின்னர் 7 நாட்களில் சிகிச்சை, 14 ஆவது நாளில் இருந்து நோயில் இருந்து மீளும் காலப்பகுதி, அடுத்த 7 நாள் (14 – 21) நோயாளி நோயில் இருந்து முற்றாக மீண்டு வரும் காலப்பகுதி. அடுத்த 7 நாட்கள் (21 – 28) நோயாளி முற்றாக நோயில் மீளும் காலப்பகுதி. இவை உறுதியான காலப்பகுதியாக இல்லாது நபர்களின் தேக ஆரோக்கியத்தை பொறுத்து வேறுபடலாம்.

இந்நிலையிலையே 22ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் பரிசோதனை மூலம் நோய் கண்டறியப்பட்டது. அன்றைய தினம் கண்டறியப்படாதவர்களுக்கு மீண்டும் சுமார் 12 நாட்களின் பின்னர் பரிசோதிக்கப்பட்ட போது நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அது எவ்வாறு என்பதே தற்போது எழுந்துள்ள சந்தேகம்.

இது தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் பணிப்பாளர் நடாத்திய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களால் கேள்விகள் எழுப்பட்ட போது  தனிமைப்படுத்தல் முகாம் நடைமுறைகள் மற்றும் அங்குள்ளவர்கள் தொடர்பில் சுகாதார பணிமனையினர் மற்றும் இராணுவத்தினரே பதிலளிக்க முடியும். அவை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது. என்னால் உறுதியாக பதிலளிக்க முடியாது. ஆனாலும் , தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்கள் மூலம் அவர்களுக்குள் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக நழுவல் போக்கில் பதிலளித்தார்.

சாதாரணமாக கொரோனோ தொற்று அறிகுறிகள் காணப்படுவதாக வைத்திய சாலைக்கு சென்றால் அவரை கொரோனோ நோயாளி ஒருவரை அணுகுவது போன்று அணுகியே பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு இருக்கையில் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வித ஆரம்ப கொரோனோ பரிசோதனைகள் எதுவும் நடத்தப்படாமல் வெறுமன தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்களா ? எனும் சந்தேகம் வலுக்கிறது.

ஆரம்ப பரிசோதனையில் நோய் இல்லாமல் பின்னர் நோய் வந்திருந்தால் , தனிமைப்படுத்தல் முகாமில் நோய் தொற்று ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றவா ? எனும் கேள்வியும் எழுகின்றன.

அவ்வாறு ஆரம்ப பரிசோதனைகளில் நோய் அறிகுறிகள் காட்டாமல் போக சந்தர்ப்பம் இருக்கு என கூறப்ப்படுமாயின் , வெளியில் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி இருப்போம் என சந்தேகிக்கப்பட்டு , ஆரம்ப பரிசோதனைக்கு உட்பட்டவர்களின் நிலமை கேள்விக்கு உள்ளாகின்றதே ??

தனிமைப்படுத்தல் முகாம்கள் நோய் காவி முகாம்களா? எனும் சந்தேகமே வலுவாக உள்ளது. ஏனெனில் அங்குள்ளவர்களுக்கு மதபோதகரால் தொற்று ஏற்பட்டது எனில்,  கடந்த 15ஆம் திகதி தொற்று ஏற்பட்டு இருக்கும். அவ்வாறு இருப்பின் 14 நாட்களுக்குள் (29ஆம் திகதி) எவருக்கும் நோய் அறிகுறிகாட்டவில்லை. 1ஆம் மற்றும் 2ஆம் திகதி அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போதே நோய் கண்டறியப்பட்டது. அதனை விடினும் ஏனையவர்களுக்கு சுமார் 30 நாட்களுக்கு பின்னர் (மார்ச் 15 – ஏப்பிரல் 14ஆம் திகதி) நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் மருத்துவ பரிசோதனைகளின் மட்டும் காட்டியுள்ளது.  ஆக இந்த தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதே பலர் மத்தியில் உள்ள கேள்வி.

இவ்வாறு பலர் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மருத்துவ துறையினர் , சுகாதார துறையினர் பதிலளிப்பார்களா என்பதே கேள்வியாகவே உள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்தல் முகாம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இராணுவத்தினரே பொறுப்பு என இராணுவத்தினரை கையை காட்டுவதனால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமா என்பதும் கேள்வியாக தான் உள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.