இலக்கியம் கட்டுரைகள்

மட்டக்களப்புக் கூத்தரங்கின் தாய் – அண்ணாவியார் வேலன் சீனித்தம்பி – சுந்தரலிங்கம் சந்திரகுமார்..

மட்டக்களப்புப் பாரம்பரியக் கூத்தரங்கின் மூத்த அண்ணாவி வே.சீனித்தம்பி (சீனியர்), வலையிறவைச் சேர்ந்தவராவார். மட்டக்களப்புப் பிரதேசத்தில் சமகாலம் வரையும் கூத்து செழிப்படைந்து தமிழர் அடையாளமாக வலுவடைய இவரே காரணம். 1886 ஆம் ஆண்டு காலப் பகுதியைச் சேர்ந்த இவர், அக்காலத்தில் குருவாக இருந்து செயற்பட்டு பா.நாகமணிப்போடி.

க.நோஞ்சிப்போடி, வ.இளையதம்பி, சி.குழந்தையர். சி.ஐயாத்துரை, சோ.காசுபதி, வே.வல்லிபுரம், வீ.வைரமுத்து எனப் பல அண்ணாவி பரம்பரையை பல பாகங்களிலும் உருவாக்கி, அடுத்த இளம் தலைமுறைக்குக் கூத்தைக் கையளிக்க வித்திட்டுள்ளார். மட்டக்களப்பில் கன்னங்குடா, கரவெட்டி, ஈச்சந்தீவு, மகிழடித்தீவு, அம்பிளாந்துறை, முனைக்காடு, திருப்பழுகாமம், மண்டூர், களுதாவளை, சீலாமுனை, வலையிறவு ஆகிய பிரதேசங்களில் பல இடையூறுகளுக்கும் மத்தியில் கூத்தரங்கை அறிமுகப்படுத்தி, பழக்கி அரங்கேற்றிய பெரும் கலை ஆளுமை.

மட்டக்களப்புக் கூத்துப் பாரம்பரியத்தின் கூத்து வாசிசை அண்ணாவியார் வே.சீனித்தம்பி தனது அயராத கூத்தாற்றுகை ஆளுமையூடாக உருவாக்கியதோடு, கூத்தரங்கின் சமுதாய வாழ்வியல் நடைமுறைகளை முழு ஊரிலும் முதன்முதல் பரப்பிய உயர்ந்த மனிதர். கூத்தின் ஆட்டமுறை, பா வகைகள், தாளக்கட்டுக்கள், அதன் சமுதாய நடைமுறை, காண்பிய நடைமுறைகள் எனப் பலவற்றைத் தன் உணர்விலும், உடலிலும் தாங்கி தன்னை அர்ப்பணித்து பயிற்றுவித்த ஜாம்பவான். இவர் பரிசாரியம், நாட்டு வைத்தியம், ஓடாவியம், மாந்திரீகம் எனப் பல்வகைமை திறமையுடன் திகழ்தமையால் கூத்துக் கலைக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் சேவை செய்துள்ளார்.

எனது முதுதத்துவமாணி ஆய்விற்காக ஊர் ஊராகத் திரிந்தபோதும், ஆற்றுகையில் ஈடுபட்டபோதும் கலைஞர் மையத் தேடலை வலுப்படுத்த பல மூத்த அண்ணாவிமாரிடமும் கூத்தரிடமும் கலந்துரையாடல்களை மேற்கொண்டபோது, ‘எனது குரு அண்ணாவியார் சீனியர்’ என நீக்கமற எடுத்துக் கூறிவிடுவர். இவரைப்பற்றி மேலும் ஆழமாகவும் விரிவாகவும் தேடி அலைந்து ஆராய்ந்தபோது பல இனிமையான விடயங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. இவரால்தான் தென்மோடி, வடமோடிக் கூத்து மரபுகள் முழு ஊரிலும் பரவலாக்கப்பட்டுள்ளது என்று. எனினும் தென்மோடிக் கூத்து மரபே இவருக்கு வாலாயம். ஆனால், இவரது குரு யார் என்றோ, இவர் எங்கு கூத்துப் பயின்றார் என்றோ தெரியாது?. இது தனியான ஆராய்ச்சிக்குரியது.

மட்டக்களப்பு கூத்தரங்க ஆராய்ச்சி வெளியில் அண்ணாவியார் வே.சீனித்தம்பி விடுபட்டுள்ளார். ஒடுக்கப்படும் சமூகத்தின் மத்தியில் மிகவும் கலை ஆளுமையுடனும், நிபுணத்துவ ஓர்மையுடனும் துணிந்து நின்று கூத்தரங்கை சமுதாய வாழ்வுடன் இணைத்து படிப்படியாக பயிற்றுவித்த கூத்தின் பிதாமகன். இவரினூடாக வந்தமரபே இன்றைய பயில்வின் ஆட்ட, தாள, பாட்டு முறைகளாகும்.

எனது ஆராய்ச்சி ஆற்றுப்படுத்துனர் கலாநிதி சி.ஜெயசங்கர் ஆவார். வே.சீனித்தம்பி அண்ணாவியாரின் புகைப்படத்தை அவரின் உறவினர்களிடம் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. எனினும், விருப்புடன் உணர்வுடன் தேடியதன் வெற்றியால், ஓய்வு பெற்ற சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர் சின்னத்தம்பி ரவீந்திரன் அவர்களிடம் இருந்து 18.05.2020 அன்று அவரது புகைப்படம் கிடைக்கப் பெற்றது. ஒரு மூத்த கலையாளுமையின் உயிர்ப்பையும், உண்மையான அர்ப்பணிப்பையும் தேடிய எனக்கு அவரது தோற்றத்தைப் பார்க்க அவாவுடனும் ஆர்வத்துடனும் இருந்தேன். இணையத்திலும் தேடினேன். இப்போதே கிடைத்துவிட்டமை தமிழ் அடையாளத்தின் உந்துசக்தியாகும். புகைப் படத்தில் சீனித்தம்பி அண்ணாவியாரைக் கண்டதும், இனந்தெரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, ஓர்மம் மேலேழுந்தது. ஆசிரியர் ரவீந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

சுந்தரலிங்கம் சந்திரகுமார்
தலைவர், நுண்கலைத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.