இலங்கை கட்டுரைகள் பெண்கள்

பெண்ணடிமைத்தனம்! ரதிகலா புவனேந்திரன்.

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’எனும் ஒளவையாரின் வாக்கினைப் போல இவ்வுலகினில் அரிதான பிறப்பாகிய மானிடப்பிறவியாகப் பிறந்துள்ளோம். இறைவன் எமைப் இவ்வுலகில் படைக்கும் போது எவ்விதப் பாகுபாடின்றியும் சமமாகவே படைத்துள்ளார். ஆனால் இவ்வுலகு சாதி, மதம், ஆண், பெண்எனப் பலவகையில் பாகுபாடு காட்டுகின்றது. அந்தவகையில் பெண்ணைப் பாகுபாடுத்தி பெண்ணடிமைத்தனத்தை கொணர்ந்துள்ளனர். பெண்ணடிமைத்தனம் என்பது பெண்கள் சமவுரிமை, வாய்ப்புக்கள் பெறாமல் தாழ்வுநிலையில் வாழ்ந்ததையும், அவர்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளையும் குறிப்பது ஆகும். தெய்வசக்திகளிலே சிவனும், சக்தியும்; ஆணும், பெண்ணும் சமனானவர்களெனும் வகையிலேஅர்த்தநாரீஸ்வரர் வடிவினில் இணைந்து எம்முன்னே காட்சியளித்தாலும் அகிலமானது ஆண், பெண் அடிப்படையில் ஆணை விட பெண்ணானவள் மிகவும் மென்மையானவள், சாதுவானவள் என்றெல்லாம் குறிப்பிட்டு பெண்ணை அன்பு, கடமை, பொறுப்பு, பொறுமை என்னும் அடிப்படையிலும் அடிமைத்தனம் செய்கின்றது.


பெண்கள் சுதந்திரங்கள் அற்றவர்களாகவும், ஆண் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருக்கும் நிலையும் பெண்ணடிமைத்தனம் ஆகும். பெண்களுக்கு சொத்துரிமை, கல்வியுரிமை, வேலையுரிமை, பேச்சுரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் இருக்கவில்லை. இதனால் சிறுவர் திருமணம், சீதனம், பெண் சிசுக்கொலை, உடன்கட்டையேறுதல், உடமை மறுப்பு என பல வழிமுறைகளில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவ்வுரிமைகளை நிலை நாட்ட சமூகம் விடுவதில்லை. எங்கும் பெண்களுக்கு கட்டுபாடுதான்.


பெண்குழந்தை பிறந்ததும், முதல் குடும்பத்திலிருந்தே அக்குழந்தையை அன்பெனும் கவசத்தால் அடக்கி ஆளுகின்றனர். அவளின் விருப்பத்தின் பெயரில் அவளை வாழ விடுவதில்லை. கட்டுப்பாடற்ற சமூகம் என்று சொல்கிறார்களே தவிர எங்கும் பெண்களுக்கு கட்டுப்பாடுதான். பெண்ணானவள் அடக்கியொடுக்கப் படுகின்றாள். ஒரு பெண்ணை முதலில் தந்தை கட்டுபடுத்துகின்றார். திருமணத்தின் பின்னர் அவளது கணவனுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.அன்று இராமாயணத்திலும் கூட பெண்ணடிமைத்தனம் காணப்படுகின்றது. சீதை பலவிடங்களில் சந்தேகிக்கப்பட்டு தனது கணவனாலே அடிமையாக்கப்படுகின்றாள். இராமனை விரும்பித் திருமணம் செய்து கொண்டாளே தவிர அவள் பல்வேறு துன்பங்களையே அடைந்திருக்கின்றாள் என்பது நிதர்சனமே.

இராமன் வனவாசம் செல்லப் புறப்படுகையில் கணவனின் பிரிவை ஏற்காத சீதையும் கூடவே புறப்பட, தமையனை விட்டுப் பிரியாமல் இலக்குமணனும் புறப்படுகின்றான். மூவரும் வனத்தில் வசித்து வரும் வேளையில் இலக்குமணன் மீது காந்தர்வப்பெண் ஆசை கொண்டு இலக்குமணிடம் வரும் போது இலக்குமணன் இயலாதெனக்கூற காந்தர்வப்பெண் ஓர் இரவில் தோன்றி ஆழ்ந்த உறக்கத்திலுள்ள இலக்குமணின் அருகில் சென்று தனது வளையல்களையும், மாலையையும் அவ்விடம் போட்டு விட்டு மறைகின்றாள். காலையில் இலக்குமணிடம் சென்ற சீதை பார்த்துவிட்டு இராமனிடம் கூற இராமனும் அங்குள்ள பெண்களை அழைத்து வளையல்களை போடும்படி கூறுகின்றான். அவ்வளையல் யாருடைய கைக்கும் பொருந்தவில்லை. இறுதியில் சீதையின் கையில் போட்டுப் பார்க்கும் போது அவ்வளையலகள்; ஏற்றதாக அமைகின்றது. அத்தருணமே தனது தம்பியையும், சீதையையும் ஒரு பார்வை பார்க்கின்றான். அத்தருணமே சீதையின் உள்ளம் உடைந்து போகின்றது. சீதை உடனே தீக்குளிக்கின்றாள் என தமிழக எழுத்தாளர் அம்பை குறிப்பிடுகின்றார்.


இராவணன் சீதையை சிறை பிடித்த போது சீதையை மீட்டுக் கொணர்ந்த இராமன் சீதையை அலங்காரம் செய்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் வரவழைத்தான். அப்போது சீதையின் மனக்கண்ணில் அரக்கனான இராவணன் என்னைச் சிறைபிடித்து இருக்கும் போது கூட யாருக்கும் தெரியாமலே வைத்து இருந்தான். ஆனால் தனது கணவனான இராமன் அனைவர் முன்னிலையிலும் என்னையொரு அலங்காரப் பொருளாக்கினாரே என எண்ணி கவலை கொள்கிறாள். அத்தருணம் சீதை அன்பெனும் கவசத்தால் எதுவும் கூற முடியாமல் அடங்கிப் போய் நிற்கின்றாள்.


இராமனின் சகோதரியான சாந்தை சீதையிடம் இராவணன் எப்படி இருப்பான். அவனை வரைந்து காட்டும்படி கேட்க சீதையும் வரைகின்றாள். முகம் வரையப் போகும் போது அவ்விடம் வரும் இராமனைப் பார்த்து சீதை தனது சேலையின் நுனியால் மறைத்து விடுகின்றாள். இராமனும் அவ்விடம் வந்து பின் சாப்பிடப் போகின்றான். சாந்தையும் அவனுடன் சென்று சீதை இராவணனை மறக்க முடியாமல் படம் வரைந்து பார்ப்பதாகக்கூற இராமனும் சீதை மீது சந்தேகம் கொள்கிறான். அக்கணமே சீதை மறுபடியும் தீக்குளிக்கிறாள். அவளுக்கென்று கருத்துச் சுதந்திரம் கொடுக்கவில்லை, சீதையின்மீது நம்பிக்கையும் கொள்ளவில்லை.இறுதியில் சீதை கற்புக்கரசி என்பதனை நிரூபிக்கவும், சமூக மக்களின் சந்தேகத்தைப் போக்கவும் அக்னி பிரவேசம் செய்கிறாள்.


மகாபாரத்திலும் திரௌபதையின் அனுமதியின்றி சூதாட்டத்தில் தனது தம்பிமாரையும், தன்னையும் தோற்றபின் பாஞ்சாலியையும் சூதில் யுதிஸ்ரன் தோற்கின்றான். சகுனியின் திட்டத்தில் துரியோதனன் பழிவாங்கும் நோக்கில் திரௌபதையின் துயிலை துச்சாதனன் உரியும் போது சபையிலே அவளுடைய கணவர் ஐவர் உட்பட குரு துரோணாச்சாரியர், வீஸ்மர் ஆகியோரும் வேடிக்கையே பார்த்த வண்ணம் தலை குனிந்து நின்றனர்.தமையன் யுதிஸ்ரனின் அநியாயமான தர்மத்துக்கு ஏனைய நால்வரும் கட்டுப்பட்டு இருந்தனரே தவிர திரௌபதையை காப்பாற்ற எவரும் போகவில்லை. திரௌபதையும் பெண்ணனும் அடிப்படையில் அடிமைத்தனமாகவே சபையில்நடாத்தப்பட்டாள்.


பெண்ணானவள் தீட்டெனும் போது கோயிலினுள் செல்லக்கூடாதென சமூகமே கட்டுப்பாடு வைத்துள்ளது.ஆரம்ப காலங்களில் தீட்டுப்பட்ட பெண்கள் கிணற்றில் நீர் இழுக்கக் கூடாது, சமையலறைக்குச் செல்லக் கூடாது, அவளுக்கென்று ஒதுக்குப் புறமான ஒரு அறை,சாப்பிடுவதற்கு ஒரு தட்டு என்று அவள் சுத்தமாகும் வரைக்கும் அந்த அறையினுள்ளே ஒதுங்கி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இன்று இதிலிருந்து சிறிதளவே மாறிவிட்டதே தவிர இன்னும் பெண்ணடிமைத்தனம் இல்லாமலில்லை.


வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் கல்பனா சௌலா உட்பட பல பெண்மணிகள் வீர சாதனை செய்தாலும் இன்றும் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியும், அவர்களை அடிமைத்தனம் செய்தும் வருகின்றார்கள். ஒரு பெண்ணை சமூகம் பார்க்கும் போது வெறுமனே உடல் உறுப்பாக மாத்திரம் பார்க்காமல் அவளுக்கென்று உணர்வு, இலட்சியம் உண்டெனப் பார்க்க வேண்டும். அப்போதாவது சிறிதளவேனும் பாலியல் துஸ்பிரயோகம், பெண்ணடிமை என்பன குறையும்.


மலையகம் போன்ற ஏனைய சில இடங்களிலும் தொழிலாளர்களுக்கிடையே வேறுபாடு காணப்படுகின்றது. வேலை செய்யும் ஆண் தொழிலாளர்களை விட பெண் தொழிலாளருக்கு குறைவான சம்பளமே கிடைக்கின்றது. ஆனால் ஆண்களை விட பெண்களுக்கே அதிக வேலையும் வழங்கப்படுகின்றது. இங்கும் பெண்ணடக்குமுறை காணப்படுகின்றது. பெண்களுக்கென ஒரு விடுதலை கிடைக்க வேண்டுமென்று காயத்திரி சக்கரவர்த்தி ஸ்பீவாக்,கிளாரா ஜெட்கின், ரோசா லக்ஸ்சம்பர், அலெக்சாண்டியா கொலண்டை போன்ற கோட்பாட்டாளர்கள் அனைத்துப் பெண்களுக்காகவும், வருகின்ற தலைமுறைக்காகவும் பெண்ணியம் சார்ந்து பல கோட்பாட்டுக்களை முன்வைத்துச் செயற்பட்டுள்ளனர்.
அலெக்சாண்டியா கொலண்டை ‘உழைக்கும் மகளீருக்கான’ போராட்டத்தை முன்வைத்துள்ளார். இக்கொள்கைக்குள் அனைத்துப் பெண்களையும் ஒன்றிணைத்து பெண்களின் உரிமைக்காக மிகவும் போராடினார். பெண்கள் அரசியலுக்குள் வந்து தமது உரிமைக்காகப் போராட வேண்டும் எனும் கொள்கையையும் முன்வைத்துள்ளார். அத்துடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களையும், விபச்சாரத்த்தில் நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்களையும் ஒன்று சேர்த்து உழைக்கும் மகளீர் எனும் கொள்கையில் இணைத்து அவர்களுக்கான நல்ல வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்த பெருமை இவரையே சாரும்.


விதிவசத்தால் ஒரு பெண் தனித்து கஷ்டப்பட்டு தனித்து ஆண் துணையின்றி தனது குடும்பத்தைப் பார்த்து வரும் வேளையில் அப்பெண்ணுக்கு ஏதோவொரு வகையில் சமூகத்தில் அவளுக்கு அவாப் பெயரே வருகின்றது. சமூகத்தில் அப்பெண் எல்லாவற்றிற்கும் முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகின்றாள். இதைப் போன்றே பெண்களுக்காக லெனினுடன் சேர்ந்து போராடிய அலெக்சாண்டியா கொலண்டாவைஇணைத்து அவதூறாகவே அச்சமூகத்தவர்கள் பேசினார்கள். இருந்தும் கொலண்டா மனந் தளராமல் தொடர்ந்து பெண்களின் உரிமைக்காகப் போராடினார். தற்சமூகத்திலும் கொலண்டாவைப் போல பெண்கள் தமது உரிமைக்காக கிளர்ந்தெழுந்தாலே பெண்ணடிமைத்தனம் இல்லாமல் போகும். கொலண்டா பெண்களின் சம உரிமைக்காகப் போராடி அதில் வெற்றியும் கண்டார். ஆனால் இன்று அதை நாம் தக்க வைத்துக் கொள்ளவில்லை.


கொலண்டா எதிர்ப்பு, கொலை மிரட்டல்களையெல்லாம் எதிர்த்து ‘உழைக்கும் மகளீருக்கான’ கோட்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெண்களின் உரிமையை பெற்றுக் கொடுத்தார். இருந்தும் இன்றைய சமூகத்தில் பெண்களின் அடிமைத்தனம் இல்லாமல் இல்லை. இப்பெண்மணிகளைப் போல ஏனைய பெண்களும் கிளர்ந்தெழுந்தாலே பெண்களுக்கான உரிமையை பெற்று பெண்ணடிமைத்தனம் இல்லாமல் சமமாக நாட்டில் வாழ இயலும்.


ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் ‘மார்ச் 8’ ஆகும். இத்தினத்திலேதான் மகளீர் தினம் கொண்டாடப்படுகின்றது. மகளீர் தினத்தின் போது பெண்களை கௌரவிக்கும் முகமாக பல நிகழ்வுகளை நடாத்துகின்றனர். மகளீர் தினமென்பது வெறுமனே கொண்டாட்டம் அல்ல. அதற்குப் பின் நிறையப் போராட்டம் உண்டென்பதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். இதற்கமைவாகவே இலங்கை முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம், முல்லைத்தீவு போன்ற பல்வேறு மட்டங்களிலிருந்தும் பெண்கள் குழுக்களாக, அமைப்புக்களாகச் சேர்ந்து பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக போராடி வருகின்றனர்.


பெண்கள் உலகம் முழுவதும், இலங்கை முழுவதும் மலையகம், வடக்கு, கிழக்கு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, வன்முறை, அடக்கு முறைக்கெதிராக மட்டுமல்ல அனைத்து வகையான அடக்குமுறைகள் குறிப்பாக சூழல் சார்ந்து, சூழலுக்கு இழைக்கப்படும் விடயங்கள் இயற்கையோடு, உயிர்களோடு இணைந்த போராட்டத்தை மேற்கொள்கின்றனர். அத்தோடு பெண்கள் உலகம் தழுவி, தேசியம் தழுவி ஆணாதிக்கங்களுக்கு எதிராக மட்டுமல்லாமல் இரு வகையான ஆதிக்கங்களுக்கு எதிராகவும் சூழலோடு ஒத்திசைந்த, இணற்கையோடு ஒத்திசைந்த வாழ்க்கையை வாழ்வதற்கும், எல்லா உயிர்களும் வாழ்வாங்கு வாழ்வதற்குமான வாழ்க்கையை உருவாக்குவதற்குமான இப்போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கின்றனர்.நம்மிலிருந்து உலகத்தைப் பாதுகாக்கின்ற போராட்டங்களிலிருந்து பெண்களுக்கு இழைக்கப்படும் போராட்டம், பெண்கள் மீதான ஆதிக்கம் மட்டுமல்ல அனைத்து வகையான ஆதிகங்களுக்கு எதிரானதாகவும்தான் இப்பெண்களினுடைய போராட்டம்.


ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் எனக்கோரி பெண்களும், ஆண்களுமாக இணைந்து கொள்வது, செயற்படுவது முக்கியமானதாகும். ஆண், பெண் இணைந்து புதிய அறநெறிகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். பெண்களுக்கு இழைக்கப்படும் ஆதிக்கத்திற்கெதிராக ஆண்களும் இணைந்து செயற்பட வேண்டும். இலங்கை வட, கிழக்கிலும், தென்னாசியப் பிராந்தியங்களிலும், உலகம் முழுவதும் ஒரு நடைமுறையாக இருக்கும் விடயம் எல்லோரும் இணைந்து கொண்டு செயற்படுவதாகும். இதனுடைய நோக்கம் எல்லோரும் மனிதாபிமானத்தோடு, மகிழ்ச்சியாக வாழ்வதற்கான உலகை எல்லோரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்.
‘பெண்கள் நாட்டினுடைய கண்கள்’ என வெறுமனே இவ்வாறு கூறியபடியில்லாமல் பெண்களுக்கான உரிமையை ஆரம்பகட்டமான வீட்டிலிருந்து ஆரம்பித்து சமூகம் வரைக்கும் சென்று பெண்கள் எவ்விதத்திலும் அடிமையாக இல்லாமல் அவர்களின் விருப்பத்துக்கேற்ற வகையிலும், இந்தப் பாரினில் பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பெண்கள் தயாராக வேண்டும். அவர்களுக்கான உரிமையை அவர்களே முன்னெடுத்து பெண்ணடிமைத்தனம் இல்லாமல் வாழ வழி விட வேண்டும். ஒவ்வொரு பெண்களும் தமது உரிமையை விட்டுக்கொடுக்காது பெண்ணடிமைத்தனம் இல்லாமல் சுதந்திரப் புறாவாக வாழவும் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகள், அடக்குமுறைகள் பற்றிச் சிந்தித்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர சமூகம் முன்வர வேண்டும்.

              ரதிகலா புவனேந்திரன்
              நுண்கலைத்துறை
            கிழக்குப் பல்கலைக்கழகம்

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.