இலங்கை கட்டுரைகள்

நாட்டார் இசை! குமரகுரு நிலுஜா.

எக்காலத்திலும் தித்திக்க வைக்கும் எமது தாய் மண்ணின் வாசத்திற்கும் நாட்டாரின் இசைகளுக்கும்ஈடாகுமோ வேறெந்த சுவையும். தாளங்களின் தேவை இன்றியும் சுவையைத்தூண்டும் நாட்டார் இசைகள். சரி பிழை பார்த்து விமர்சனங்கள் எதிர்பார்த்து இயற்றப்படவிலை இந்த நாட்டார் இசைகள். சூழ்நிலைக்கு ஏற்ற வரிகளால் வர்ணிக்கப்பட்டது எமது தாய் மொழி. பேர் புகழை எதிர்பாக்காமல் உரிய வேளையில் தம் திறமையை வெளிப்படுத்தினர் நாட்டாரியல் கலைஞர்கள்.

இந்த இசையை தமது பொழுதுபோக்கிற்காகவும், மகிழ்விற்காகவும், தமது உழைப்பின் கழைப்பை நீக்குவதற்காகவும் வடிவமைத் திருந்தனர். இருப்பினும் இவ் இசையானது இன்று எமது பாரம்பரியத்தின் அடையாளங்களாக விளங்குகின்றன. இவ்வாறு இயற்றப்பட்ட பாடல்களில் வசந்தன் பாடல்கள் வேளாண்மைக் காலத்தின் சிறப்பைப் பெற்றது, கவிப்பாடல்கள்சூழ்நிலைக்கு ஏற்ப இயற்றப்பட்டது, வசைப்பாடல்கள் சண்டை சச்சரவுக்களுக்காக காத்திருந்தது. நாட்டார் இசையின் மூலம் தனது திறமையினை வெளிப்படுத்தி பாரம்பரிய கலையினை வளர்த்த கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதென்பது எமது அடையாளத்தின் வெளிப்பாடு என்று கூட நாம் கூறலாம். இதனப்படையில் நாட்டாரியல் சார் பல்துறைக் கலைஞர் ஒருவருடனான எனது நேர்காணல் அமைந்திருந்தது.


நேர்காணல்.
மூத்ததம்பி யோகானந்தராசா.
1954ம் ஆண்டு பிறந்த மூத்ததம்பி யோகானந்தராசா அவர்கள் தனது 15வது வயதில் இருந்து கலைகளில் ஆர்வம் உள்ளவராகக் காணப்படுகின்றார். இவரின் தந்தை ஒரு அண்ணாவியாவார் சிறுவயதில் இருந்தே தந்தையுடன் இணைந்து கூத்துக்கள் மற்றும் கலை நிகழ்வுகளில்; ஈடுபட்டதனால் அவரிடம் இருந்து பல கலைகளைப் பயின்று கொண்டார். இவர் மத்தளம், தவில், உடுக்கு போன்ற இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லுனராகத் திகழ்கின்றார். இவர் தனது கிராமத்தில் காணப்படும் கலைமகள் கலைக்கழகம் மன்றத்தின் உறுப்பினராகவும் திகழ்கின்றார்.
இவர் நெறியாள்கை செய்து அரங்கேற்றம் செய்த கலை நிகழ்வுகளாக வசந்தன் கூத்து, கோலாட்டம், கும்மி, கரகாட்டம், நாட்டார் கூத்து மற்றும் கிராமிய நடனங்கள் போன்றவைகளாகும். இவை மாத்திரமின்றி காத்தவராயன் பாடல்கள், வாய்மொழி இலக்கியப்பாடல்கள், தேவார, திருவாசகப்பாடல்கள், குளிர்த்திப்பாடல்கள், காவியப்பாடல்கள், கவிப்பாடல்கள் போன்ற பாடல்களைப் பாடுவதிலும் வல்லுனராகத் திகழ்கின்றார். இதனால் தமது பிரதேச மக்களால் பல்துறைக் கலைஞர் என்றும் அழைக்கப்படுகின்றார்.


மூத்ததம்பி யோகானந்தராசா அவர்கள் தனது திறமையினால் கடந்த வருடங்களில் கிராமியக் கலைஞன், பல்துறைக்கலைஞர், சிறந்த அண்ணாவிராயார் போன்ற பட்டங்களையும் கலைச்செம்மல் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தனது கிராமத்திலுள்ள சிறு பிள்ளைகளுக்கு கலை நிகழ்வுகளைப் பயிற்றுவித்து அவர்களை பல இடங்களுக்கும் கலாச்சார மற்றும் கலைசார் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று அங்கு தனது திறமையை வெளிப்படுத்தி பல சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் பெற்றுள்ளார்,பாடல் வரிகளையும் அதற்கான மெட்டுக்களையும் தானே இயற்றி பல மேடைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்திய இவரது வசந்தன் மற்றும் கவிப்பாடல்கள் பின்வருமாறு.

கஞ்சிக்கலசம் (உழவர் நடனப்பாடல்).
கஞ்சிக் கலசம் எடுத்தார் மாப்பிள்ளே
பஞ்சாய்ப் பரந்தோடுதே – அஞ்சாமல்
நெஞ்சுடன் கொண்டு நடந்து – நாங்கள்
ஆனந்தமாயிடுவோம்.

கலப்பை தன்னை தோழில் இட்டுகாலிகளை
மேய்த்திடடி -விருப்பமாக ஏரு பூட்டிவிதம்விதமாய்
நெல்லெடுத்து – கரத்த மாட்டைக் கட்டிக்கிட்டு
கல்லமெல்லாம் போக்கிவிட்டு

முத்துச் சம்பா பேரும் கறுப்பன்- மாப்பிள்ளே
முருங்கயன் பணங்களியன் கஸ்த்தூரி எள்ளுருண்டை
சுத்தமான நெல் வகையைத் தேடி விளைத்திடுவோம்
தாயே பொலி தாயே பூமாதேவி தாயே பொலி

தொன்நூற்றி நாலு ஒன்டு நல்ல இனம் –
இடைப்போக விளைச்சலுக்கு
ஏ ரி முன்னூற்றேழு சின்னவோலை
பெரும்போக விளைச்சலுக்கு.

தாயே பொலி தாயே பூமாதேவி தாயே பொலி
தாயே பொலி தம்பிரானே பூமி பொலி
பூமாதேவி தாயே பொலி தாயே

மூட்டை மூட்டைகளாய் நெல்லெடுத்து
நாட்டுக்கு ஏற்றிடுவோம்- நாட்டில்
உள்ள ராஜாவைப் போல் -நாமே
வாழ்ந்திடுவோம்.
தாயே பொலி தாயே பூமாதேவி தாயே பொலி
தாயே பொலி தம்பிரானே பூமி பொலி
பூமாதேவி தாயே பொலி தாயே

வசந்தன் பாடல்.

தானினம் தானானா தானினம் தானானா
தானினம் தானானா தானினம் தானானா
தானினம் தானினம் தானானா.

வாருங்க தோழர்களே வயலில்
அருவிகளை நன்றாய்
கூரிய தாக்கத்தி கைதனில்க் கொண்டு
வீரியமாகவே வேந்தர் நாமெல்லோரும்
நெல்லருவி வெட்டிடுவோம்.

சூரியன் பட்டாலும் சுனங்காமலே
நெல்லருவி வெட்டிடுவோம்.
ஈச்சை தனிலுறை பராசக்தியைத்தான் வணங்கி
காட்சி தர வந்த கண்ணகை அம்மனை வணங்கி
நெல்லருவி வெட்டிடுவோம்.

தானினம் தானானா தானினம் தானானா
தானினம் தானானா தானினம் தானானா
தானினம் தானினம் தானானா.

உப்பட்டிப்பாடல்.

தந்தானின தானின தானின தானின தானா
தெய் தானானா.
தந்தானின தானின தானின தானின தானா
தெய் தானானா.
தென்றல் வந்தங்கே தெற்குத் தெருவினில்
சென்று காரினில் மண்டி முழங்குது
கோடையாளே மழையுமிருளுது
கூடுங்கள் பள்ளர் உப்பட்டி கட்டுவோம்.

வாடையாளே மழையும் வருகுது
வாருங்கோ பள்ளர் உப்பட்டி கட்டுவோம்.
தேடி நாரில் ஒடுக்கி அடக்குங்கள்
சென்று நாங்கள் எல்லோரும் சுமந்திட.

வாடுகின்ற பசியும் வருகிது
பள்ளரே பள்ளச்சி எங்கேடா – போனால்
பள்ளச்சி கஞ்சி காச்ச ஒன்னாதடி
பாரடி உந்தன் மண்டை உடைக்கிரேன்.
(தந்தானின தானின…)
அல்லிச் சேதப்படாடமலே கட்டுங்கோ
ஆளாலுக்கு தலையில் சுமருங்கோ.
தந்தானின தானின தானின தானின தானா
தெய் தானானா.

கவிப்பாடல்கள்;.
பெண் கேட்டுப்பாடப்பட்ட கவி.
ஓடி ஓடி காசு உழைப்பேன் ஓலைமட்டை நான் இழைப்பேன்
சேனை வெட்டி சோறு கொடுப்பேன் என்ட செல்ல வண்டத் தாமாமி.

சுட்டகட்ட போல மச்சான் சுடுகாட்டு பேய்போல- நீர்
மாட்டு அட்டை போல மச்சான் நீர் மாப்புழைக்கும் ஆகாதடா.

காதலர் கவி (மீனவர்).

பூவலை கல்வி அல்லோ புதுக் குடத்தைக் கிட்டவைத்து
ஆலம் விளுந்த கிளி அள்ளுதுக நல்ல தண்ணி.

வாய்க்காலில் ஓடும் தண்ணீர் வண்டு விழும் தும்பு விழும்
வீட்டவா மச்சானே நான் குளுந்த தண்ணீர் தருவேன்.

எல்லோரும் போன கப்பல் இன்று வரும் நாளை வரும்
என் கண்ணாழன் போன கப்பல் கடலிலையும் காணவில்லை.

கல்லாத்து விருச்சலிலே கறுப்பன் என்று ஓர் முதலைய் மல்லாக்க போட்டு
அவண்ட மணிக்குடலைத்; தின்னுதாமே.

இவ்வாறாக நாட்டார் இசையில் வர்ணனைகளால் நிரம்பியுள்ளது எமது தாய் மொழி. இதில் உள்ள ஒவ்வொரு வரிகளும் எல்லோராலும் இரசித்து ருசிக்கத்தக்கவைகளாக அமைகின்றன. இவற்றை இசைக்கும் போதோ அல்லது இசையைக் கேட்கும் போதோ எம்மில் ஏற்படும் இன்பத்திற்கு வேறு எந்த இசையும் ஈடாகாது. எமது பண்பாட்டு அம்சங்கள் அழிக்கப்பட்டு வரும் இன்றை உலகில் இவ்வாறான பாரம்பரிய அடையாளங்களை வெளிக்கொணர்வது என்பது அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இதனடிப்படையில் இக் கலைஞருடனான நேர்காணல் அமைந்திருந்தது,

குமரகுரு நிலுஜா
கிழக்குப்பல்கலைக்கழகம்
(நுண்கலைத்துறை)

;

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.