உலகம் பிரதான செய்திகள்

கருத்தைத் திருடி எழுதிய சர்ச்சை – மன்னிப்பு கோருகின்றார் லாசெற்

படம் மற்றும் தகவல்: Deutsche Welle (DW)

“கருத்துத் திருட்டு” (Plagiarism) என்பது பரவலாக எங்கும் நடைபெற்றுவரும் ஒன்று தான். இலகுவில் சிக்கிவிடாதபடிஇந்தத் திருட்டைச் செய்பவர்கள் தப்பி விடுகிறார்கள்.கண்டறிவது கடினம்.

பிரபலமானவர்கள் அந்தத் திருட்டைச் செய்வது தெரியவந்தால் அது முக்கிய செய்தியாகி விடுகிறது. அடுத்தவர் ஒருவருடைய கருத்தைத் திருடி தனது புத்தகத்தில் எழுதி வெளியிட்டமைக்காக ஜேர்மனியின் முக்கிய அரசியல் பிரபலமான அர்மின் லாசெற்(Armin Laschet) பகிரங்கமாக மன்னிப்புக்கோரியிருக்கிறார்.

அர்மின் லாசெற் 2009 இல் எழுதி வெளியிட்ட “Die Aufstiegsrepublik” (The Upwardly Mobile Republic) என்ற நூலில் மற்றொரு நூலாசிரியரது கருத்துக்களை “திருடி”தன்னுடைய கருத்தாகப் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துத்துத் திருட்டுக்களைக் கண்டறிவதில் நிபுணத்துவம் மிக்க ஒருவர் லாசெற்றின் திருட்டை அம்பலப்படுத்தி தனது ருவீற்றரில் பதிவிட்டிருந்தார். அதனையடுத்தே இந்த விடயம் நாடளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்தது.

அர்மின் லாசெற் தனது கருத்துகளைத் திருடினார் என்பதை வெளிப்படுத்திய நூலாசிரியர் ஒருவர் விளக்கம் கேட்டு அவருக்கு கடிதம் எழுதினார். அதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்தது.

லாசெற் உடனடியாகவே தனது தவறை ஒப்புக் கொண்டார். மன்னிப்புக் கோரினார்.”நூல்களை எழுவதிலும் அவற்றின் பதிப்புரிமையைக் காப்பதிலும் நான் எனக்கு அளித்த முக்கியத்துவத்தையும் மரியாதையையும் ஏனைய எழுத்தாளர் களுக்குத் தரத் தவறியமைக்காக மன்னிப்புக் கோருகின்றேன்” – என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தனது நூலை மறு ஆய்வு செய்து தணிக்கைக்கு உட்படுத்தப்போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ஜேர்மனியின் அடுத்த அரசுத் தலைவர் என்ற நிலையில் இருப்பவர் லாசெற். நாட்டின் North Rhine-Westphalia (NRW)என்னும் பெரிய மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகிப்பவர். செப்ரெம்பர்மாதம் நடக்கவிருக்கின்ற அதிபர் தேர்தலில் அங்கெலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிற்பவர்.

பசுமைக் கட்சியைத் தோற்கடித்து வென்று அங்கெலா அம்மையாரது இடத்தை பிடிப்பார் என்று நம்பப்படுபவர். ஆனால் சமீப நாட்களில் தனது மதிப்பை இழக்கும் விதமான சில சர்ச்சைகளில் சிக்கி மன்னிப்புக் கேட்பது இது இரண்டாவது தடவை.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது ஓரிடத்தில் சேதங்களைப் பார்வையிட்ட சமயத் தில் அவர் ஊடகங்களது கமரா முன்பாக நகைச்சுவையாகப் பேசிச் சிரித்தார். அது பெரும் விமர்சனங்களைக் கிளப்பியது. அதற்காக அவர் பின்னர் மன்னிப்புகோரநேரிட்டது.

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி மதிப்பிழந்து வருவதால் அவரது அதிபராகும் கனவு ஆட்டங் காணத்தொடங்கியுள்ளது என்று சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். ஜேர்மனியில் இதே போன்று வேறு சில அரசியல்வாதிகளும் பிரபலங்களும் கருத்துத் திருட்டுகளில் ஈடுபட்டமை வெளிச்சத்துக்கு வந்த பல சம்பவங்கள்முன்னரும் நடந்துள்ளன.

——————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.29-07-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.