சென்னையை தாக்கிய வர்தா புயலில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1994-ம் ஆண்டுக்குப் பின்னர் சென்னையை தாக்கிய வலிமையான புயல் என தெரிவிக்கப்படும் இந்த வர்தா புயலின் போது மணிக்கு 140கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது.
இதன் காரணமாக சுமார் 9,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வர்தா புயல் காரணமாக சென்னை நகரம் பகலிலேயே இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புயலின் மையப்பகுதி பிற்பகல் 3.30 மணிக்கு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கனமழையுடன் பேய்க்காற்று வீசி வருகின்றதால் வார்தா புயல் கரையை கடக்கும் இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என சென்னை மக்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வர்தா புயல் பாதிப்பால் சென்னை விமான நிலையம் மாலை 6 மணிவரை மூடப்பட்டுள்ளதுடன் வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.