குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சிகள், ஊடக அமைப்புக்கள், பிராந்திய ஊடக அமைப்புக்கள் சர்வதேச ஊடக அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டிருந்தால் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதன் பூகோள ஆட்சிக் குழுவினால் இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உயர்மட்டப் பாதுகாப்புத் தரப்பு தலைவர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை அனுமதித்தால், இலங்கையின் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக உரிமைகள் கேள்விக்குறிக்கு உள்ளாவதுடன், சுதந்திர ஊடகச் செயற்பாடும் கடுமையாக பாதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.