இலங்கை அரசியல் களத்தில் மூன்று சக்திகள் மும்முனையில் மோதல்களில் ஈடுபடுகின்ற ஒரு சூழல் உருவாகியிருக்கின்றது. இந்த மோதல்கள் மென்போக்கிலா அல்லது கடும் போக்கிலா அமைந்திருக்கும் என்பதை உடனடியாகக் கூற முடியவில்லை. ஆயினும் மூன்று சக்திகளும் தனித்துவம் மிக்க நிலையான அரசியல் இருப்பு, தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம், திணிக்கப்பட்ட பொறுப்புணர்வு ஆகிய மூன்று தளங்களில் நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகி வருகின்றன.
இந்தச் சந்திப்பில் ஏதாவது ஒரு சக்திதான் வெற்றிபெறப் போகின்றதா, இரண்டு சக்திகள் இணைந்து வெற்றிபெறப் போகின்றனவா அல்லது மூன்று சக்திகளுமே இணைந்து ஐக்கியத்துடன் கூடிய அமைதியானதோர் எதிர்கால அரசியல் சூழலை உருவாக்கி, நாட்டு மக்களுக்கு வெற்றியை ஈட்டித் தரப் போகின்றனவா என்ன செய்யப் போகின்றன என்பது அரசியல் ரீதியில், சுவாரசியமான முக்கிய விடயமாகும்.
இரு தரப்புச் செயற்பாடுகள்
விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, விடுதலைப்புலிகள் ஒரு தரப்பிலும் அரசாங்கம் மறு தரப்பிலுமாக இரு முனைகளில் இராணுவ மோதல்களும், அரசியல் தளத்தில் இரு முனகைளில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.
கடந்த 2002 ஆம் ஆண்டு அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்ற நோர்வேயின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்டிருந்தது. இந்த போர் நிறுத்தம் நான்கு வருடங்களுக்கு நீடித்திருந்தது.
இந்த போர் நிறுத்த காலத்தில், யுத்த மோதல்களுக்கு அடிப்படையான இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காக நோர்வேயின் அனுசரணையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஐரோப்பாவில் நாட்டிற்கு என நாட்டுக்கு நாடு ஓடியோடி உலகத்தை வலம் வந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றனவே தவிர, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இரு தரப்பினரும் உறுதியானதோர் உடன்பாட்டுக்கு வர முடியவில்லை.
அதனால் அந்தப் போர் நிறுத்தம் பயனற்றுப் போனது. இதனையடுத்து 2006 ஆம் ஆண்டு மீண்டும் ஆயுத மோதல்கள் வெடித்தன. உக்கிரமாக சண்டைகள் நடைபெற்றன. வடக்கும் கிழக்கும் அல்லோலகல்லோலப்பட்டது. இறுதியில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரின் அகோர தாக்குதல்களையடுத்து விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டார்கள்.
யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆயினும் யுத்தத்திற்குக் அடிப்படை காரணமாகிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை சண்டைகள் முடிவடைந்தனவே தவிர பிரச்சினைகளுக்கு முடிவு காணப்படவில்லை.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு முன்னதாக – விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாக உருவெடுப்பதற்கு முன்னர் சாத்வீகப் போராட்;டங்கள் இடம்பெற்ற காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை ஐக்கிய தேசிய கட்சி பலமாக எதிர்த்து அந்த முயற்சியைப் பலனற்றதாக்கியது.
அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி தமிழர் தரப்புடன் பேச்சுக்கள் நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண முற்பட்டபோது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து, அந்த முயற்சியைப் பாழடித்திருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில்தான் இப்போதைய அரசியல் தீர்வுக்கான மும்முனைச் செயற்பாடு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
யுத்தம் முடிந்தது பிரச்சினைகள் தீரவில்லை
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கோ அல்லது யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு செயற்படுவதற்கோ முன்வரவில்லை.
மாறாக யுத்த காலத்திலும் பார்க்க வடக்கு கிழக்கு மாகாணங்களான தமிழ்ப் பிரதேங்களில் கடும் போக்கிலேயே செயற்பட்டிருந்தது.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தையும் ஐக்கியம், சமாதானத்தை ஏற்படுத்தவதாகக் கூறியதே தவிர, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவுமில்லை ஐக்கியம் சமாதானத்தை உருவாக்கவுமில்லை. மாறாக ஏதேச்சதிகாரப் போக்கில் ஜனநாயக விழுமியங்களைத் தவிடு பொடியாக்குகின்ற நடவடிக்கைகளையே முன்னெடுத்திருந்தது.
இதனால் இலங்கையில் ஜனநாயகமும், மனித உரிமை நிலைமையும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகின. இத்தகைய பின்னணியில்தான் நல்லாட்சிக்கான அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி உதயமாகியது.
முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச சட்டமீறல்களுக்குமான பொறுப்பு கூறலைப் பொறுப்பேற்றுக்கொண்ட புதிய அரசாங்கம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முழு வீச்சில் முன்னெடுத்தது.
இந்த நிலையில்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற மூன்று முக்கிய அரசியல் சக்திகளும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நகர்வுகளில் முக்கியமானதொரு கட்டத்தில் வந்த நிற்கின்றன.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது, நாட்டில் எத்தகைய ஆட்சியை உருவாக்குவது என்பதிலேயே மையம் கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சி முறை குறித்து, அரசியல் தீர்வு காண்பதற்கு முற்பட்டுள்ள முத்தரப்பினரும், மும்முனை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.
கட்சி சார்ந்த நிலையான அரசியல் இருப்பு
ஆட்சி மாற்றத்தின் மூலம், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய நாட்டின் இரண்டு பெரும் அரசியல் கட்சிகளும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன. அதற்கு மூன்றாவது பெரும் சக்தியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, அதற்கு உறுதுணை புரிந்திருக்கின்றது.
மூன்று சக்திகளும் இணைந்து, நாட்டில் நல்லாட்சியை நிரந்தரமாக்கவும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசயில் காண்பதற்குமாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு உடன்பட்டு செயலில் இறங்கியிருக்கின்றன. இதற்கு ஜேவிபி உள்ளிட்ட ஏனைய சிறு கட்சிகளும் ஆதரவு வழங்கியிருக்கின்றன.
ஜனாதிபதி ஆட்சிமுறைமை, தேர்தல் முறைமை என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தத்தக்க வகையில் புதிய அரசாட்சி முறையை உருவாக்குவதற்கும் இந்தக் கட்சிகள் இணங்கியிருக்கின்றன.
ஆயினும், குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகிய மூன்று அரசியல் சக்திகளுமே, நிரந்தரமானதும், தனித்துவம் மிக்கதுமான எதிர்கால கட்சி அரசியல் இருப்பு என்ற அடித்தளத்தை ஆதாரமாகக் கொண்டே, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் கைங்கரியத்தில் இறங்கியிருக்கின்றன.
எதிரும் புதிருமாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
அடுத்த தேர்தலில் அந்தக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுகின்ற ஒரு நிலைமையே காணப்படுகின்றது. இனிமேலும், இரண்டு கட்சிகளும் இணைந்து அரசாங்கம் ஒன்றைத் தொடர்ந்து நடத்துவதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை.
நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி பதவியை துஸ்பிரயோகம் செய்து சர்வாதிகாரப் போக்கில், சென்றுகொண்டிருந்த மகிந்த ராஜபக்ச என்ற தனி நபரை ஜனாதிபதி பதவியில் இருந்து வீழ்த்தி, அவருடைய குடும்ப அரசியல் செயற்பாட்டிற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காகவே இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் என வர்ணிக்கப்படுகின்ற நல்லாட்சிக்கான அரசாங்கத்தை உருவாக்க வேண்டியிருந்தது. அத்தகையதோரு தேவை அடுத்த பொதுத்தேர்தலில் இருக்கப் போவதில்லை.
எனவே, தனித்துவத்தைப் பேணி, கட்சியின் அரசியல் நலன்களை மேம்படுத்தி, இந்த இரண்டு கட்சிகளும் தமது அரசியல் இருப்பைப் பலப்படுத்துகின்ற தளத்தில் இருந்தே புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு காணும் கைங்கரியத்தைக் கையாள வேண்டியிருக்கும். இதுவே இன்றைய அரசியல் யதார்த்தமும் ஆகும்.
தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பது யுத்தத்திற்குப் பின்னரான அரசியல் நிலைமைகளில் தவிர்க்க முடியாத தேவையாகவும், தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாகவும் தலை தூக்கியிருக்கின்றது.
>இந்த நிலையில் இருபெரும் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும். ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சியமைத்திருப்பது, அரசியல் தீர்வு காண்பதற்கு மிகவும் சாதகமான நிலைமையாகக் காணப்படுகின்றது.
அரசியல் தீர்வு காண்பதில் ஒன்றுக்கொன்று முரண்பட்டு எதிர்த்து வந்திருந்த இந்தக் கட்சிகள் இரண்டும் இணைந்து அரசங்கம் அமைத்திருப்பது, அசரியல் தீர்வைக் காண்பதற்கான ஓர் அரிய சந்தர்ப்பமாக வந்து வாய்த்திருக்கின்றது. இதனை அந்த இரண்டு கட்சிகளுமே உணர்ந்திருக்கின்றன.
ஆயினும் அந்தக் கட்சிகளுக்கு அரசியல் தீர்வுக்காக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, ஒற்றையாட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவது, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பது போன்ற விடயங்களில் விட்டுக் கொடுத்துச் செயற்பட முடியாத வகையில் அவற்றின் வாக்கு வங்கிகளைக் கட்டுப்படுத்துகின்ற கடும்போக்காளர்கள் தடையாக இருக்கி;ன்றார்கள்.
அந்தத் தடையை உடைத்துக் கொண்டு இந்த இரண்டு பெரும் அரசியல் கட்சிகளும் வெளியில் வரமுடியாத நிலைமையே காணப்படுகின்றது. ஏனெனில் கடும்போக்காளர்களைப் பகைத்துக் கொண்டால் அல்லது அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு, அவர்களுடைய இணக்கப்பாடின்றி ஓர் அரசியல் தீர்வை உருவாக்கினால், அடுத்த பொதுத் தேர்தலில் நிச்சயமாக அவர்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்படும். கடும்போக்காளர்களின் வழிகாட்டலில் உள்ள சிங்கள வாக்காளர்கள் இந்தக் கட்சிகளை புறந்தள்ளி, இந்தக் கட்சிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள ஜேவிபியினருக்கு ஆதரவளிக்கக் கூடும்.
ஆகவே சிங்கள பௌத்த மதவாதிகள், தீவிர அசரியல் வாதிகள் போன்ற கடும்போக்காளர்களின் அரசியல் உணர்வுகளைக் காயப்படுத்தாத வகையிலேயே இந்த இரண்டு கட்சிகளும் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றன.
அதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நிபந்தனையற்ற வகையில் முழுமையான ஆதரவை வழங்கியது மட்டுமல்லாமல், அந்த ஆட்சி தொடர்ந்து முன்னோக்கிச் செயற்படுவதற்கும், நிபந்தனைகளின்றி ஒத்துழைத்து வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் எதிர்பாரப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடும் – நிர்ப்பந்தமும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இருக்கின்றன
சுதந்திரக் கட்சியின் சிக்கல்
மறுபுறத்தில் மகிந்த அணியென்றும், மைத்திரி அணியென்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுண்டு கிடக்கின்ற நிலையில், தமிழ் மக்களுடன் ஆடசி அதிகாரங்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்வதில்லை என்ற இனவாதம் தோய்ந்த பழைமைவாத அரசியல் போக்கில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலகுவில் விடுபட்டு வெளியில் வர முடியும் என்று கூறுவதற்கில்லை.
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளைக் கொடுப்பதற்காக விட்டுக் கொடுத்துச் செயற்பட்டாலும்கூட, பிளவு பட்டுள்ள அணியாகிய மகிந்த தரப்பு அணியினர் சிங்கள மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள் என்ற போக்கிலான இனவாத பிரசாரத்தை முன்னெடுத்து மைத்தரிபால அணியினருடைய அரசியல் எதிர்காலத்தையே அவர்கள் நாசம் செய்துவிடவும்கூடும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமல்ல. ஐக்கிய தேசிய கட்சிக்கும்கூட இந்த நிர்ப்பந்தத்திற்கு சின்னத்திலேயே போட்டியிட்டு வந்துள்ளது. போட்டியிட்டு வருகின்றது. எதிர்காலத்திலும் அவ்வாறே போட்டியிட வேண்டியிருக்கும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியை; புறந்தள்ளிவிட்டு ஏனைய கட்சிகள் தனிவழியில் சென்றால், அந்தத் தனிவழிப் போக்கை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற அரசியல் யதார்த்தம் கடந்த கால சம்பவங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்பில் ஒன்றிணைந்துள்ளவர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்றதோர் அரசியல் மரபை தமிழ் மக்கள் பின்பற்றி வருகின்றார்கள்.
இந்த நிலையில் தமிழ்;த்தேசிய கூட்டமைப்பு;க்குள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் போன்ற பிளவுபட்ட பாதகமான நிலைமை இபபோதைக்கு இல்லையென்றே கூற வேண்டும்.
ஆனாலும், வடக்கு கிழக்கு இணநை;த தாயகம், சுயநிர்ணய உரிமை, பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையுடன் கூடிய சமஸ்டி என்பவற்றை உள்ளடக்கிய வகையில் அரசியல் தீர்வு காணப்படும் என்று தமிழ் மக்களுக்கு நீண்டகாலமாக அளித்து வந்துள்ள அரசியல் வாக்குறுதியை மீறி அல்லது அதற்குக் குறைவானதோர் அரசியல் தீர்வைப் பெறுவதற்கு தமிழ் அரசியல் தலைவர்களை தமிழ் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
அத்தகைய ஒரு தீர்வுக்கு ஆதரவளித்துவிட்டு, கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் தலைகாட்ட முடியும் என்று கூறுவதற்கில்லை. தமிழ் மக்கள் தேர்தல்களில் சமஸ்டியை உள்ளடக்கிய ஒரு தீர்வுக்கே தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு ஆணை வழங்கியிருக்கின்றார்கள். அந்த ஆணையை மீறிச் செயற்பட முடியாது என்ற நிர்ப்பந்தம், அரசியல் தீர்வு காண்கின்ற செயற்பாட்டின் மும்முனை சக்திகளில் ஒன்றாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு இருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற ஓர் அரசியல் தீர்வை எட்டாமல், அடுத்த தேர்தலின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு கேட்டுச் செல்ல முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.
எனவே, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளைப் போலவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதன் எதிர்கால கட்சி அரசியல் இருப்பு என்ற விடயத்தில் நிர்ப்பந்தத்தை எதிர்நோக்கியிருக்கின்றது.
அரசியல் தீர்வுக்கான செயற்பாட்டில் முக்கிய பங்கேற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளும் தமது அரசியல் இருப்பு, மக்கள் தமக்களித்த ஆணை என்பவற்றில் இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேர்ந்திருப்பதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு காண முடியாது. ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது, உறுதியாவும் தெளிவாகவும் எடுத்தக் கூறியிருக்கின்றார்கள்.
எனவே, சமஸ்டி என்பதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். ஆனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒற்றையாட்சியில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கே பச்சை விளக்கு காட்டியிருக்கின்றன. சமஸ்டி முறையை ஏற்கவே முடியாது. ஒற்றையாட்சி முறையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்று உறுதியாகக் கூறியிருக்கின்றன.
இந்த நிலையில் இனப்பிர்ச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்த மூன்று கட்சிகளும், ஏனைய கடசிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் பேச்சுக்கள் நடத்தும்போது எந்த வகையில் தங்களுக்குள் இணக்கப்பாட்டைக் காணப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.
கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், முன்னைய அரசாங்கத்தில் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும். அதேபோன்று விடுதலைப்புலிகளுக்கும் அரச தரப்பினருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த போது நடத்தப்பட்ட நேரடி பேச்சுவார்த்தைகளின் போது அவரவர் நிலைப்பாட்டில் மாற்றத்தை அல்லது இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற விடயங்கள் பற்றி பேசுகையில் அந்த பேச்சுக்கள் உணர்வு நிலையிலேயே இடம்பெற்றிருந்தன. கடும் வார்த்தைப் பிரயோகங்களும்கூட இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் இப்போது புதிய அரசிலயமைப்பின் மூலம் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் நடத்தப்படும்போது, ஒற்றையாட்சி, சமஸ்டி ஆட்சி, அதிகாரப் பரவலாக்கல் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடுகையில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.
உணர்வு நிலையைக் கடந்து நிதானமாகவும் பொறுமையாகவும் பேச்சுக்களை முன்னெடுத்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஓர் இணக்கப்பாட்டிற்கு வருவார்களா அல்லது மோசமான உணர்வு கொதி நிலையில் மோதிக்கொள்வார்களா என்பது தெரியவில்லை.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இப்போது கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை நிதானமாகவும், பொறுப்போடும் பயன்படுத்தக் கொள்ள வேண்டும் என்ற அரசியல் யதார்த்த நிலைமையை மனதிற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம். இதனைக் கவனத்திற் கொண்டு நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளே பயன் தரவல்லவையாக அமைய முடியும். –