கொழும்பில் 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பொன்று அவருக்கு வந்ததது. அதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவரைக் கடைசியாகக் கண்டவர்கள் கூறினர். இதன் பின்னர் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் என்றும் பாராது ஆயுததாரிகள் அவரைக் கடத்தினர்.
இவர் உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கப்படுவார் என ஊடகங்களில் தகவல் வெளியிட்டு பதவியில் இருந்து விலகியபோதும் இன்னமும் விடுவிக்கப்படவோ அவரைப்பற்றிய தகவல்களோ இதுவரையில் வெளியிடப்படவில்லை. கடத்தப்பட்ட ரவீந்திரநாத் வெலிகந்தவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 நாட்களின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவர் அநேகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவரது உறவினர்கள் தெரிவித்தனர். பதவிப் பிரச்சினை என்ற பெயரில் நடைபெற்ற அரசியல் கொலை என்றும் இதனைக் குறிப்பிடுகின்றனர். அன்றைய அரசின் துணை இராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இவரைக் கடத்தியிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் நினைவுகூரத்தக்கது.
இக்கடத்தல் குறித்து சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்ட அறிக்கையில், “இராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இக்கடத்தல் நடைபெற்றுள்ளதால், பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களே இதனை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும், இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும், ஏற்கனவே இதய நோய் உள்ளவர் என்பதால் இவரது உயிருக்கே இது ஆபத்தாக முடியலாம்” எனவும் எச்சரித்தது.
கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் இவரை விடுவிக்க்கோரி பணி நிறுத்தத்தை மேற்கொண்டனர். கிழக்குப் பல்கலையின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத்துக்கு என்ன நடந்தது? நீதி விசாரணை உடன் வேண்டும்! என வந்தாறுமூலை வளாக முன்றலில் கடந்த வருடமும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டனர் எனக் கூறப்படும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.