ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல் நலமின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவரது புகைப்படமோ வீடியோ பதிவோ எங்கும் வெளியிடப்படாததுடன் அவரை சந்திக்கவோ, தூரத்தில் இருந்து பார்க்கவோ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே, இறப்பதற்கு முன்பு ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகியவற்றை விரிவான முறையில் அறிக்கையாக ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் இந்த நீதிமன்றில் தாக்கல் செய்ய வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய மரணம் குறித்து உறவினர்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் எழுப்பும் சந்தேகங்களின் அடிப்படையில் அவருடைய சந்தேகத்துக்குரிய மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கிலும் சொத்துக்குவிப்பு வழக்கிலும் தீர்ப்பு வெளியாகும் வரை தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்கி வைக்கவேண்டும் எனவும் ஜெயலலிதா மற்றும் அவருடைய சகாக்களின் பினாமி சொத்துகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றின் குளிர்கால விடுமுறை காலம் முடிந்த பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.