அரசியல் இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

நல்லாட்சியிலாவது நல்லிணக்கம் எட்டப்படுமா ? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கத்தினால் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதும், பௌத்த சின்னங்கள், பௌத்த விகாரைகளை நாடு முழுவதும் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

கடந்த ஆட்சி காலத்தில் மாத்திரமின்றி, தற்போது நல்லாட்சி என சொல்லப்படுகின்ற ஆட்சி காலத்திலும், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.  முன்னதாக கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் பௌத்த விகாரைகள் என்பன அமைக்கப்பட்டு கிழக்கினை சிங்கள மயமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 

கிழக்கு பல்கலைகழகத்தினுள் பெருமளவான சிங்கள மாணவர்கள் அனுப்பப்பட்டனர். கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் முதல் சிற்றூழியர்கள் வரை சிங்களவர்கள் அனுப்பட்டனர். அவ்வாறாக படிப்படியாக கிழக்கினை சிங்கள மயமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு, தற்போது அதில் அரசாங்கம் குறிப்பிட்டளவு வெற்றியையும் கண்டுள்ளது.

அதனை தொடர்ந்து வடக்கிலும், சிங்கள மயமாக்கும் முயற்சிகள் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. வடக்கிலும் வைத்திய சாலைகளில், சிங்கள வைத்தியர்கள், தாதியர்கள், பணிக்கு அமர்த்தப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கும் பெருமளவான சிங்கள மாணவர்கள் அனுப்பப்பட்டனர். 



அவற்றினை தொடர்ந்து வடக்கின் எல்லையோர மாவட்டங்களான முல்லைத்தீவு, வவுனியா , மற்றும் மன்னார் மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் யாழ்.மாவட்டத்தில் நாவற்குழி பிரதேசத்திலும் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 

அத்துடன் வடக்கில் பௌத்த மதத்தை சாராதவர்கள் வாழும்  கனகராயன் குளம், மாங்குளம், வவுனியாவில் சேமமடு, கொக்கிளாய், திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங்களில் புதிதாக பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு உள்ளன. அதில் கொக்கிளாய் பகுதியில் கட்டப்படும் விகாரை மத்திய காணி அமைச்சின் தடையையும் மீறி விகாரை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான காணியையும் கொக்கிளாய் ஆதார வைத்திய சாலைக்கு சொந்தமான காணியையும்  அடாத்தாக இராணுவத்தினர் கையகப்படுத்தி பௌத்த விகாரை ஒன்றினை நிர்மாணித்து வருகின்றனர். இறுதி யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் 2009ம் ஆண்டு இடம்பெயர்ந்து இருந்தனர். அதனை அடுத்து 2010ம் ஆண்டு மீள தமது சொந்த இடங்களுக்கு திரும்பி இருந்தனர். 



அதன் போது திருஞானசம்பந்தர் , எஸ் கலா , எஸ்.இராசம்மா ஆகிய மூவருக்கு சொந்தமான காணி, பிரதேச சபைக்கு சொந்தமான 12 அடி அகல வீதி , கொக்கிளாய் ஆதார வைத்திய சாலைக்கு சொந்தமான காணி ஆகியவற்றை இராணுவத்தினர் அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருந்தனர். அதன் பின்னர் குறித்த காணி விகாரைக்கு உரிய காணி என இராணுவத்தினர் அறிவித்தனர். 

அப்பகுதியில் இராணுவத்தினரால் அடாத்தாக கையகப்படுத்திய சுமார் நான்கு ஏக்கர் காணியில் கடந்த 2012ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் ஸ்ரீ சம்போ மஹா விகாரை எனும் பெயரில் விகாரை அமைக்கும் பணிகள் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இராணுவத்தினர் முன்னெடுத்தனர். 

அதற்கு காணி உரிமையாளரான திருஞான சம்பந்தரின் மகனான மணிவண்ணதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனை அடுத்து அவரை இராணுவத்தினர் பொலிசார் இணைந்து மிரட்டி காணியை சட்ட ரீதியாக கையகப்படுத்த முயன்றனர். அதற்கு மணிவண்ணதாஸ் மறுப்பு தெரிவித்து, கடந்த 04.07.2013 ஆம்  ஆண்டு முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். 



அதன் போது காணி மணிவண்ணதாஸின் பெயரில் இல்லை. அவரின் தந்தையாரின் பெயரில் உள்ளமையால் அதனை பெயர் மாற்றம் செய்த பின்னர் வழக்கினை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கினை 07.04.2014 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்திருந்தது. 

அதன் பின்னர் கடந்த 12.06.2015 ஆம் ஆண்டு கரைத்துறை பற்று பிரதேச செயலகத்தில்  இடம்பெற்ற காணிப் பிணக்குகளைத் தீர்க்கும் நடமாடும் சேவையில், மணிவண்ணதாஸ் என்பவர் தனது காணியில் அடாத்தாக விகாரை அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நடமாடும் சேவையில் கலந்துகொண்ட மத்திய காணி அமைச்சின் மேலதிக செயலாளரும், காணிக் கொள்கைகள் உதவிப் பணிப்பாளரும் அந்தக் காணி உரிமையாளருக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தியதுடன், அடாத்தாக விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்துமாறும் பணித்திருந்தனர்.

அது தொடர்பில் 17.06.2015ஆம் ஆண்டு கரைத்துறைப் பற்று பிரதேச செயலாளரினால் விகாரை கட்டும் பணிகளை இடை நிறுத்துமாறு கோரி விகாராதிபதிக்கு கடிதம் கையளிக்கப்பட்டது. 

இருந்த போதிலும் விகாரை கட்டும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. அந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பொது பல சேனா அமைப்பினர் ஞானசார தேரர் தலைமையில் கொக்கிளாய்க்கு நேரில் சென்று விகாரை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு திரும்பி இருந்தனர்.  அது தொடர்பில் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்ட ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் பல தடவைகள் சுட்டிக்காட்டி பேசி இருந்தார்.

அத்துடன் கடந்த மே மாதம் வடமாகாண சபையின் 52ஆவது அமர்வின் போது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் விகாரை நிர்மாணிப்பு வேலைகள் உடன் நிறுத்தப்பட்டு சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை நீதிமன்ற அனுமதியுடன் அகற்ற வேண்டும் என சபையில் கோரி இருந்தார். 

அதன் பின்னர் கடந்த மே மாதம் குறித்த விகாரை கட்டும் பணியினை இடைநிறுத்துமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வன்னி பிராந்திய பிரதி காவல்த்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 

அந்நிலையில் கொக்கிளாய் தமிழர்கள் வாழும் இடமாக இருந்தாலும்  ஒருபோதும் விகாரை கட்டும் பணியை நிறுத்தவோ, அல்லது அதனை முற்றாக அகற்றவோ,  முடியாது. என கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்து இருந்தார். 

அமைச்சர் ராஜித சேனாரட்ன அவ்வாறு கருத்து தெரிவித்த மறுநாள் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி கொழுப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே கொக்கிளாய் விகாரை கரைத்துறைப் பற்று பிரதேச செயலாளரின் அனுமதியுடன் தான் கட்டப்படுகின்றது என தெரிவித்தார். 

அதேவேளை தமக்கு கடந்த ஆட்சி காலத்திலும் சரி இந்த ஆட்சி காலத்திலும் சரி அரசாங்கம் எந்த உதவிகளையும் வழங்கவில்லை. எமக்கு பௌத்த மதத்தை சார்ந்தவர்களும் , கொடையாளிகளின் உதவிகளுடனையே விகாரை அமைக்கும் பணிகளைகளை செய்து வருகின்றோம். 

எமது விகாரை அமைக்கும் பணிக்கு வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட நான்கு ஐந்து பேரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இப்பகுதியில் உள்ள ஏனைய தமிழ் மக்கள் விகாரை அமைக்கும் பணிக்கு ஆதரவு நல்கி வருகின்றனர் என குறித்த விகாரையின் விகாராதிபதி தெரிவித்தார்.

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த மத சின்னங்களை நிறுவுதலும் , விகாரைகள் அமைக்கும் பணிகளை முன்னேடுப்பதனையும் அரசாங்கம் கண்டு கொள்ளாத நிலை தொடருமானால் மீண்டும் இன முறுகல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த சம்பவம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மட்டக்களப்பில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்ட பௌத்த பிக்குகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்காது பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த போதிலும் சிறுபான்மையினரான தமிழ் முஸ்லீம் மக்கள் பொறுமை காத்து இருந்தனர். அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் நன்றி தெரிவித்து இருந்தார். 

சிறுபான்மையினர் அன்றைய தினம் பொறுமை காத்தது என்பது உண்மையானாலும் பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளும் இனத்துவேச வார்த்தைகளும் சிறுபான்மையினர் மனங்களில் நீறு பூத்த நெருப்பு போன்றே உள்ளது. அது எந்நேரமும் நீறு நீற்று அனல் வெளிக்கிளம்பும் அப்போது மீண்டும் ஒரு இன முரண்பாடு தோற்றம் பெறும்.

எனவே இனத்துவேச கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லளவில் கூறிக்கொண்டு இராது உரிய நடவடிக்கைகளை உரிய முறையில் எடுப்பதன் ஊடாகவே நல்லாட்சி எனப்படும் இந்த ஆட்சி காலத்திலாவது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் எட்டப்படும்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.