இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள மலேசியா தயாராக இருப்பதாக மலேசியப் பிரதமர் அப்துல் ரஷாக் தெரிவித்துள்ளார். மலேசியாவில் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்;கும் மலேசியப் பிரதமர் அப்துல் ரஷாக்கிற்கும் இடையே இன்று இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இலங்கை, மலேசியாவுக்கிடையிலான இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் வெளிநாட்டு தொழில், இளைஞர் அபிவிருத்தி, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய ஐந்து உடன்படிக்கைகள் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால நாட்டில் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்புதலும், நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதலுமே தனது முதன்மையான எதிர்பார்ப்புகளெனக் குறிப்பிட்டதுடன்; அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன், பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக நட்பு நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் மலேசியாவிற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புதிய உடன்படிக்கைகள் மூலம் இருநாடுகளுக்குமிடையில் சுற்றுலா, கல்வி, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் போன்ற துறைகளில் புதிய உறவுகள் கட்டியெழுப்பப்படுமென தெரிவித்த ஜனாதிபதி , இலங்கை மாணவர்கள் மலேசியாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முறைமையொன்றை தயாரிக்குமாறு மலேசிய பிரதமருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 60 வருட பூர்த்தி விழா இலங்கையிலும் கொண்டாடப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி வெகுவிரைவில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளுமாறு மலேசிய பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார, கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் முன்னாள் கொழும்பு நகர மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் உள்ளிட்டோரும் இலங்கை சார்பாக இதன்போது கலந்துகொண்டனர்.