இலங்கை பிரதான செய்திகள்

யாழ்ப்பாண கோட்டைக்குள் அநாகரிக செயற்பாடு – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா ?

யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் சிலர் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கோட்டையில் பணி புரியும் பணியாளர்கள் தெரிவித்தனர்.  அது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பணத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக யாழ்ப்பாண கோட்டை உள்ளது. தற்போது கோட்டை தொல்லியல் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வருவதுடன் நெதர்லாந்து அரசாங்க உதவியுடன் புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

அந்நிலையில் தினமும் பெருமளவான உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.  அதில் சிறுவர்கள் முதியோர்கள் என பாகுபாடின்றி வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சிலர் கோட்டை பகுதியில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு என வருகின்றார்கள். அவ்வாறு அநாகரிக செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவதனால் சுற்றுலா வருவோர் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் சௌகரியங்களையும் எதிர்நோக்குகின்றனர்.

அவ்வாறு அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவ மாணவிகள் ஆவார்கள்.  குறிப்பாக வார இறுதி நாட்கள் , விடுமுறை நாட்களில் அவ்வாறானவர்களின் வரவுகள் கோட்டை பகுதியில் அதிகரித்து காணபடுகின்றது.

பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து யாழ்.நகர் பகுதியில் உள்ள தனியார் வகுப்புக்களுக்கு வரும் மாணவ மாணவிகள் வகுப்புக்களுக்கு செல்லாது கோட்டை பகுதிக்கு வந்து அநாகரிக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அது தொடர்பில் எமது தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது சக பணியாளர்கள் அவ்வாறு அநாகரிக செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை எச்சரித்து கோட்டை பகுதியில் இருந்து வெளியேற்றி இருந்தனர்.

அன்றைய தினம் இரவு வாள்களுடன் வந்த நபர்கள் கோட்டையில் இருந்த எமது சக பணியாளர்கள் மீது வாள் வெட்டினை மேற்கொண்டனர். அதில் இரு பணியாளர்கள் காயமடைந்து இருந்தனர். அந்த சம்பவத்தின் பின்னர் எமது பணியாளர்கள் அவ்வாறு அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை எச்சரிக்க பயம் காரணமாக பின் நிற்கின்றார்கள்.

அது தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டினை எமது திணைக்களம் சார்ந்து செய்ய முடியாதமையால் பொலிசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. யாழ்.நகருக்கு தனியார் வகுப்புக்களுக்கு வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய கரிசனை கொண்டு அவர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

அதேவேளை இரவு 6 மணியுடன் பார்வையிடும் நேரம் முடிவடைந்த பின்னர் கோட்டையின் பிரதான பாதை தவிர்ந்த ஏனைய பாதைகள் ஊடாக ஊடுருவும் நபர்கள் கோட்டை சுவர்களில் ஏறி இருந்து மது அருந்துகிறார்கள். அதனை தடுக்க முடியாது உள்ளது.

அதேவேளை போதை பொருட்கள் கைமாற்றும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. அத்துடன் கோட்டை சுவர்கள், அரண்களில் ஏறி இருந்து இரவு வேளைகளில் போதை பொருட்களையும் நுகர்கின்றனர். அவற்றினை தடுக்க முடியாது உள்ளது.  அவர்களை தடுக்க முயன்றால் அவர்களால் தமதுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டு விட்டு விடுமோ என பணியாளர்கள் அஞ்சுகின்றார்கள் என தெரிவித்தார்.

யாழ்ப்பாண கோட்டையில் இவ்வாறாக காலச்சார சீர்கேடுகள் , அநாகரிக செயற்பாடுகள் மது அருந்துதல்,   போதை பொருள் பாவனை மற்றும் கைமாற்றல் , என்பன இடம்பெற்று வருகின்ற நிலையில் தொல்லியல் திணைக்களத்தால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்ற சாட்டு முன் வைக்கப்படுகின்றது.

அதேவேளை கோட்டை பகுதியில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையம் உள்ளது.  இருந்த போதிலும் இவை தொடர்பில் பொலிசாரும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

அவை தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தடவைகள் கோட்டையில் பணியாற்றும் பணியாளர்கள் பொலிசாரிடம் கோரிய போது உரிய முறையில் முறைப்பாடு பதிவு செய்தாலே தாம் நடவடிக்கை எடுப்போம் என பொலிஸ் தரப்பினர் கூறியதாக பணியாளர் தரப்பில் கூறப்படுகின்றது.

முறைப்பாடு செய்யுமாறு தமது திணைகளத்தினரிடம் கோரினால் தொல்பொருள் சின்னத்திற்கு ஏதேனும் பதிப்பு, சேதம் ஏற்படுத்தப்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம் தவிர ஏனைய விடயங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியாது என திணைக்களத்தினர் பின் நிற்கின்றார்கள் எனவும் ஊழியர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.