குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீள் குடியேற்ற அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொருத்து வீடு வேண்டாம் எங்களுக்கு எங்கள் சூழலுக்கும் பொருத்தமான வீட்டை தாருங்கள் எனக் கோரியும், பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சியில் பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆா்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஆா்ப்பாட்டம் இன்று 19-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டது கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்துகெண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள் மீள்குடியேற்றத்திலும் சா்வதிகாரமா?,விளையாடதே விளையாடதே வீட்டுத்திட்டத்தில் விளையாடாதே,வேண்டாம் வேண்டாம் பொருத்து வீடு வேண்டாம்,குசுனி இல்லாத வீட்டில் குடியிருக்கலாமா? றெஜிமென்ட் பாணியில் றெஜிபோம் வீடுகளா? 16 இலட்சத்தில் பலகை வீடா? மக்களின் விருப்பமா மந்திரியின் ஆசையா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தினா்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னா் 35,452 புதிய வீடுகளும், 6,179 திருத்த வீடுகளும் தேவையாக காணப்பட்டன.இதில் கடந்த ஆண்டு வரை அரச, அரசசாா்பற்ற மற்றும் இந்திய அரசின் வீட்டுத்திட்டம் என 20,714 புதிய வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இன்னும் 14,738 புதிய வீடுகள் கிளிநொச்சிக்கு தேவையாக உள்ளன என மாவட்டச் செயலக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு 1,441 திருத்த வீடுகளும் தேவையாக உள்ளது என மாவட்டச் செயலகம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சினால் நடைமுறைப்படுத்தவுள்ள பொருத்து வீட்டுக்கே இன்று கி ளிநொச்சியில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆா்ப்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருக்கான மகஜா் கிளிநொச்சி மாவட்டச் செயலாளா் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
அத்தோடு எதிா்கட்சி தலைவா்,வட மாகாண முதலமைச்சா் ஆகியோருக்கான மகஜா் பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரனிடம் கையளிக்கப்பட்டது.