குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
ஜேர்மனியின் பேர்லின் நகரின் நத்தார் தின சந்தையில் பாரவூர்தியை ஏற்றி 12 பேரை கொன்ற தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 23 வயதான நவெத் என்பவர் குற்றவாளி இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் உயிருடன் இருப்பதாகவும் அவர் ஒரு துனீஷியப் பிரஜையை எனவும் தெரிவித்த ஜெர்மனிய காவல்துறையினர் அவரை தேடி வருவதாக் தெரிவித்துள்ளனர்.
அந்த நபரின் அடையாள ஆவணங்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
பேர்லின் பாரவூர்தி மோதல் சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
Dec 21, 2016 @ 17:43
ஜேர்மனியின் பேர்லின் நகரின் நத்தார் தின சந்தை ஒன்றில் பாரவூர்தி ஒன்றை மோத வைத்து 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. பேர்லினில் உள்ள கெய்சர் வில்கம் நினைவு தேவலயத்தின் தெற்கு வெளியில் அமைந்துள்ள பிரபலமான சந்தைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரும்புக் கம்பிகளை ஏற்றிவந்த பாரவூர்தியானது சந்தைக்குள் தாறுமாறாக ஓடியதில் 12 பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயமடைந்தனர்.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்துவந்த நிலையில், தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஐஎஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. பேர்லின் நத்தார் தின சந்தைக்குள் தாக்குதலை ஏற்படுத்தி, பாரவூர்தியிலிருந்து தப்பிச் சென்ற நபர் தமது படை வீரர்தான் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த 23 வயதான நவெத் என்பவரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நபர் கடந்த வருடம்தான் பாகிஸ்தானிலிருந்து ஜெர்மனிக்கு வந்தவர் எனவும் ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
9 பேரை பலி கொண்ட பேர்லின் பாரவூர்தி மோதல் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என சந்தேகம்
Dec 20, 2016 @ 02:09
ஜேர்மனியின் பேர்லின் நகரின் நத்தார் தின சந்தை ஒன்றில் பாரவூர்தி ஒன்று மோதியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதனை ஒரு தீவிரவாத தாக்குதல் என சந்தேகம் வெளியிட்டுள்ள ஜேர்மன் காவல்துறையினர் பாரவூர்தியை வேகமாக ஓட்டி வந்த சாரதி நத்தார் தின சந்தையில் பொருட்கள் காட்சிப்படுத்தும் பகுதியில், பொருட்கள் வைக்கப்பட்டிருந்த மேசைகள், விற்பனைக் காட்சிப் பகுதிகள், என்பவற்றின் மீது மோதியதாக தெரிவித்துள்ளனர்.
கெய்சர் வில்கம் நினைவு தேவலயத்தின் (Kaiser Wilhelm Memorial Church ) தெற்கு வெளியில் அமைந்துள்ள பிரபலமான சந்தைப்பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல்கள் குறித்து நேரில் கண்ட சாட்சி ஒருவர் குறிப்பிடுகையில் இது ஒரு விபத்தாக இருக்க முடியாது எனவும் வேகமாக வந்த இந்த பாரவூர்தி மக்களை நோக்கி செலுத்தப்பட்டதாகவும் எல்லாவற்றின் மீதும் மோதி வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார்.