தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யதார்த்தமான அழகியலோடு கவிதைகளையும் கதைகளையும் எழுதும் எழுத்தாளர் என்ற சிறப்பை இவர் கொண்டவர். இவரது ஒரு சிறு இசை என்ற தொகுப்பிற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக சாகித்திய அகாடமி தெரிவித்துள்ளது.
தீபம் என்ற இதழில் எழுதத் தொடங்கிய இவர் நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளராக விளங்கி வருகிறார். 1962ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சிறுகதைகளை எழுதி வரும் இவர் கலைக்க முடியாத ஒப்பனைகள், சமவெளி, கனிவு, நடுகை, பெயர் தெரியாமல் ஒரு பறவை என்பன உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார். சின்னு முதல் சின்னு வரை என்ற நாவலையும் சமூகத்தின் முன் தனது ஆக்கமாக வண்ணதாசன் வைத்துள்ளார்.
கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளை எழுதி வரும் இவர், புலரி, முன்பின், மணல் உள்ள ஆறு, ஆதி, அந்நியமற்ற நதி ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இதுதவிர, அகமும் புறமும் என்ற கட்டுரை தொகுப்பும், வண்ணதாசன் கடிதங்கள் ஆகிய அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
இவரது எழுத்துக்களை பாராட்டு விதத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. மேலும், இலக்கியச் சிந்தனை, விஷ்ணுபுரம் விருது, ஒளியிலே தெரிவது என்ற சிறுகதைக்காக சுஜாதா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பெற்ற விருதுகளுக்கெல்லாம் மேலும் சிறப்பு செய்வது போல் சாகித்ய அகாடமி அவருடய சிறு இசை என்ற தொகுப்பிற்கு விருது அறிவித்து பெருமை சேர்த்துள்ளது.