வடக்கு விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றுவதற்கென பயிற்சித்தர விவசாயப் போதனாசிரியர்களாகப் 12 பேர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த செவ்வாய்க்கிழமை (20.12.2016) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற இதற்கான நிகழ்ச்சியின்போது வழங்கி வைத்துள்ளார்.
விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு விரிவாக்க சேவையை முன்னெடுப்பதில் விவசாயப் போதனாசிரியர்களின்பங்களிப்பு இன்றியமையாதது. எனினும், வடக்கு விவசாயத் திணைக்களத்துக்கு அனுமதிக்கப்பட்ட 161 விவசாயப் போதனாசிரியர்களது ஆளணியில் தற்போது 103 விவசாயப் போதனாசிரியர்களே கடமையாற்றி வருகின்றனர்.
58 வெற்றிடங்கள் நிலவுகின்றன. இப்பதவிக்கான ஆட்சேர்ப்புத் திட்டத்தில் கோரப்பட்டுள்ள தகுதியான விவசாய டிப்ளோமாவைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரிகள் போதிய அளவு வடக்கில் இல்லாத காரணத்தாலேயே இந்த வெற்றிடங்களை நிரப்ப முடியாத நிலை நீடிக்கிறது.
இவ்வெற்றிடங்களை ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளில் இருந்து போட்டிப் பரீட்சையின் மூலம் 12 பேர் பயிற்சித்தர விவசாயப் போதனாசிரியர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சிக் காலத்தில் இவர்கள் வவுனியா விவசாயக் கல்லூரியில் விவசாய டிப்ளோமா பயில்வதற்கு வேதனத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும், அவ்வாறு பட்டம் பெற்றவர்கள் பின்னர் நிரந்தரமாக விவசாயப் போதனாசிரியர் பணிகளில் உள்ளீர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனக்கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்