குளோபல் தமிழ் செய்தியாளர்
வவுனியாவில் தமிழ் இளைஞர் ஒருவர்மீது பெரும்பான்மையின குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. படுகாயத்திற்கு உள்ளான குறித்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் உயிருக்குப் போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த 26 வயதான தர்மலிங்கம் சுபராஜ் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடத்தப்பட்ட பேருந்து ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தர்மலிங்கம் சுபராஜ் வவுனியா உணவகம் ஒன்றில் கடமை புரிகிறார். நேற்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெரும்பான்மையினரை சேர்ந்த ஆறு இளைஞர்கள் கொண்ட குழுவொன்று உணவகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
உணவகத்திற்குள் புகைப்பிடிக்க அனுமதி மறுத்தமையின் காரணமாக ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை தொடர்ந்தே குறித்த தமிழ் இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்யும் நோக்கிலேயே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞரை உணவகத்திற்குள் வைத்து தாக்கிய குழு தனியார் பேருந்து ஒன்றை கடத்தி, அதில் குறித்த இளைஞரை கடத்திச் சென்று கொலை தாக்குதல் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கொலை முயற்சிச் சம்பவத்துடன் தொடர்புடைய வவுனியா மூன்றுமுறிப்பில் உள்ள பூனாவ என்ற குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் அமித் விக்கிரமசிங்க மற்றும் உபாலி சேனநாயக்கா ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.