275
பயங்கரமான, கூரிய, உயிராபத்தை ஏற்படுத்த கூடிய ஆயுதங்களை உருவாக்க கோரியதாக அச்சுவேலி காவல் நிலையத்தை சேர்ந்த தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்ற சாட்டு தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
அந்நிலையில் வியாழக்கிழமை குறித்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப் பட்டது.
அதன் போது குற்றம் சாட்டப்படும் தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் சட்டத்தரணியுடன் மன்றில் முன்னிலையாகி தனது சட்டத்தரணி ஊடக மன்றில் முன் பிணை மனு கோரி விண்ணப்பம் செய்தார். அதனை நீதிவான் நிராகரித்தார்.
அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு கூறியதுடன் , வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
குறித்த வழக்கு தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அச்சுவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு தாபரிப்பு வழக்கு தவணைக்கு சமூகம் அளிக்கவில்லை என மல்லாகம் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை அச்சுவேலி காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகஸ்தர்கள் கைது செய்யாதவாறு குறித்த தமிழ் காவல் துறை உத்தியோகஸ்தர் நீண்ட நாட்களாக பாதுகாத்து வந்துள்ளார்.
அவ்வாறு காவல் துறை உத்தியோகஸ்தரால் பாதுக்காக்கப்பட்ட நபர் அச்சுவேலி பகுதியில் உள்ள இரும்பு பொருட்கள் உருவாக்கும் நிலையம் (கம்மாலை) ஒன்றில் தொழிலாளராக தொழில் புரிந்து வருபவராவர்.
அந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த நபர் தொழில் புரியும் கம்மாலைக்கு சென்ற தமிழ் காவல் துறை உத்தியோகஸ்தர் தனது சொந்த தேவைக்கு என கூறி வாள்கள் , கைகிளிப்கள் (நக்கீல்ஸ்கள்) போன்ற கூரிய , பயங்கரமான , உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய இரும்பாயுதங்களை உருவாக்கி தருமாறு அங்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளிகளை மிரட்டி கேட்டு அந்த ஆயுதங்களை உருவாக்கி பெற்று சென்று உள்ளார்.
அது தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆயுதங்களை உருவாக்கி கொடுத்த கம்மாலை தொழிலாளிகள் இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
அதன் போது தொழிலாளிகள் குறித்த தமிழ் காவல் துறை உத்தியோகஸ்தர் மிரட்டி கேட்டதன் பிரகாரமே தாம் இரும்பாயுதங்களை செய்து கொடுத்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து வழக்கு விசாரணைகள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை குறித்த தமிழ் காவல் துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக காவல்துறையினரின் உள்ளக விசாரணைகள் நடைபெற்றதாகவும் அதன் பின்னர் காவல் துறையின் உயர் மட்ட முடிவின் பிரகாரம் குறித்த காவல் துறை உத்தியோகஸ்தர் சேவை இடை நீக்கம் செய்யபட்டு உள்ளதாக காவல் துறை வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.
அதேவேளை குறித்த தமிழ் காவல் துறை உத்தியோகஸ்தர் குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுபவர் எனவும் , இலஞ்ச ஊழல் பேர்வழி எனவும் , பெண்களுடன் சேட்டைவிடும் பேர்வழி எனவும் அச்சுவேலியை சார்ந்தவர்களால் அச்சுவேலி காவல் நிலையத்தில் பல தடவைகள் குற்ற சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love